

கனவு என்பது உறக்கத்தின் மொழி. நாயகனைப் பல கனவுகள் தொடர்ந்து வேட்டையாடும்போது எதிர்கொள்ளும் மனக் குழப்பங்கள், தத்தளிப்புகள், அவற்றின் தொடர்ச்சியாக அவன் உண்மையைக் கண்டறிய மேற்கொள்ளும் முயற்சிகளைக் களமாகக் கொண்ட படங்கள் எப்போதும் சுவாரசியமானவை. நடிகர் ஆரிக்கு ஓர் இடைவெளிக்குப் பின் சொல்லிக்கொள்கிற மாதிரி இந்த ‘ஃபோர்த் ஃபுளோர்’ அமைந்ததா என்று பார்க்கலாம்.
தீரன் (ஆரி அர்ஜுனன்) ஒரு மென்பொருள் பொறியாளர். மும்பையில் பணிபுரியும் அவர் பணி மாறுதல் பெற்று சென்னையில் வருகிறார். அவரது நோக்கம், தன் முன்னாள் காதலியைத் தேடிக் கண்டுபிடிப்பது!
அவர் குடியேறியது 4 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காம் தளத்தில் உள்ள அபார்மெண்ட். அங்கே வசிக்கும்போது ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அதில் ‘தன்னைக் கொல்ல வருபவர்களிடமிருந்து காப்பாற்றும்படி ஒரு பெண்ணின் குரல்’ பதறியபடி உதவி கேட்கிறது.
அந்தக் குரல் அச்சு அசலாக அப்படியே தனது முன்னாள் காதலியைப் போலவே இருக்க, பதற்றமடையும் தீரன் திடுக்கிட்டு எழ, அது கனவு. அதன்பின் காதலியைத் தீவிரமாகத் தேடத் தொடங்குகிறார்.
ஆனால், மீண்டும் இரவுகளில் அவருக்கு வரும் கனவுகள் நிஜத்தில் நடப்பவை போலவே உள்ளன. அதில் அக்கம் பக்கத்து ஃபிளாட் மனிதர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் காட்சிகளாக வந்து போகின்றன. ஆனால், தீரன் வீட்டைத் தவிர, அங்கே அபார்மெண்டுகள் அனைத்தும் காலி இருக்கிறன.
கனவுக்கும் நிஜத்துக்குமான இடைவெளியில் சிக்கும் தீரன், அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் மர்மத்தைக் கண்டு பிடித்தாரா, அவரது காதலியும் அவருடைய 5 வயதுக் குழந்தையும் என்னவானார்கள் என்பதை நோக்கிக் கதை நகர்கிறது.
கனவு என்றாலும், நிஜத்தில் நடப்பது போலவே இருக்கும் சம்பவங்கள் மூலம் தன்னை சுற்றி ஏதோ ஒன்று நடப்பதை அறிந்து கொள்ளும் தீரன், தன்னுடைய கனவுகளுக்கான தீர்வைத் தேடி மனநல மருத்துவரிடம் செல்கிறார்.
ஆனால், இது மனநலச் சிக்கல் அல்ல என்று சுயமாக உணரும்போது, தன் கனவுகளின் பின்னாலிருக்கும் மனிதர்களைத் தேடத் தொடங்குகிறார். அப்போது பல திடுக்கிடும் உண்மைகளைத் தெரிய வருகின்றன.
அவை அனைத்தும் இன்றைய சென்னையின் ‘ரியல் எஸ்டேட்’ நிழலுலகத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றன. ஒரு ஹாரர் த்ரில்லர் படத்தில், ஆவிகளையும் பேய்களையும் காட்டாமலேயே தரமாகப் பயமுறுத்தி, கூடவே தன்னால் இன்று சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் அட்டூழியங்களைத் துணிந்து தோலுரித்து முடியும் என்று சாதித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி.
தீரனாக வரும் ஆரி அர்ஜுனன் தனது சிக்கலான கதாபாத்திரத்தை முதிர்ச்சியான நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு துப்பறிவாளனைப் போல் சொந்த வாழ்க்கையின் நிழல் ஊடாடும் நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டிருக்கும் நல்ல மனிதர்கள், மோசமான மனிதர்கள் ஆகிய இருதரப்பினரையும் அவர் தேடிச் சென்று உண்மை அறிய முயலும்போதும், அவர்கள் எல்லாம் தன் வாழ்க்கையுடன் எவ்வாறு பின்னிப் பிணைத்திருக்கிறார்கள் என்கிற மர்மங்களை ஒவ்வொன்றாக அவர் அவிழ்த்துக்கொண்டே வரும்போது காட்டும் சீரான தீவிரமும், உணர்ச்சிகரமான தருணங்களில் காட்டும் மென்மையும் உறுதியும் கண்ணீரும் படத்துக்கு பலம்.
கனவுக்கும் நிஜத்துக்கும் இடையிலுள்ள தொடர்பிலிருந்து விரியும் ஒரு அநீதியின் கதையை இயக்குநர் ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ பாணியில் சொல்லியிருப்பதைத் தரண் குமாரின் பின்னணி அட்டகாசமாகத் தாங்கிப் பிடித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் குறுகிய வெளிகளை மர்மம் வெளிப்படும் ஒளியமைப்புக்குள் ஆழ்த்திக் காட்சிப்படுத்தியிருப்பது அட்டகாசம்!
ஆரி தன் நடிப்பால் படத்தைத் தோள்களில் சுமந்திருந்தாலும் வட்டார அளவில் செல்வாக்கு பெற்று சர்வதேச அளவில் தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒரு ‘கிரே ஷேட்’ கதாபாத்திரத்தில் இயக்குநர், நடிகர் சுப்ரமணியசிவாவின் நடிப்பு நாயகனின் போராட்டத்துக்குப் பலம் சேர்த்துக் கவனிக்க வைக்கிறது.
ஒரு புதுமையான த்ரில்லர் முயற்சியாகத் தொடங்கி, தரமான பயமுறுத்தல்களோடு நகரும் படம், நாயகனின் உண்மைக் கண்டறியும் பயணத்தில் முதல் பாதி முழுவதும் வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் சில அவசியமற்ற பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்களாக வருகின்றன. என்றாலும் ஆரியின் நடிப்புக்காகவும் விறுவிறுப்பான சஸ்பென்ஸ், ஹாரர் காட்சிகளுக்காகவும் த்ரில்லர் ரசிகர்கள் இந்த நான்காவது தளத்தில் தாராளமாக வசித்துவிட்டு வரலாம்.