சிறுகதை தந்த திரைப்படங்கள்! | திரை நூலகம்

சிறுகதை தந்த திரைப்படங்கள்! | திரை நூலகம்
Updated on
1 min read

நாவல்கள் திரைவடிவம் பெற்றது போலவே சிறுகதைகளும் கட்டுரைகளும் ஏன் கவிதைகளும்கூட முழுநீளத் திரைப்படமாக உருப்பெற் றுள்ளன. நான்கு பிரபலமான இயக்குநர் களின் நான்கு சிறந்த மலையாளத் திரைப் படங்களுக்கு மூலமாக இருந்தவை மூன்று புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள்.

அக்கதைகளின் தமிழ் மொழி பெயர்ப்பு இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது. அமெரிக்கப் பத்திரிகையாளர், எழுத்தாளர் பீட் ஹாமில் எழுதிய சிறுகதை தமிழில் ‘வீடு திரும்புதல்’ என்கிற தலைப்பில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தது.

அதை மூலக்கதையாகக் கொண்டு மம்மூட்டி, ஷோபனா நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘யாத்ரா’ (1985) படத்தின் திரைக்கதையை எழுதியவர் ஜான் பால்.

மலையாளச் சிறுகதை எழுத்தாளரான சி.வி.ஸ்ரீராமனின் ‘சிதம்பரம்’ என்கிற கதையை அதே பெயரில் திரைக்கதை எழுதி இயக்கியவர் ஜி.அரவிந்தன். சீனிவாசன் - ஸ்மிதா பாட்டில் நடித்த இதுவும் 1985இல் வெளியான படம்.

சி.வி.ராமனின் மற்றொரு சிறுகதை ‘பொந்தன் மாடா சீமைத் தம்பிரான்’, இதை ‘பொந்தன் மாடா’ என்கிற தலைப்பில் திரைக்கதை எழுதி இயக்கியவர் டி.வி.சந்திரன். மம்மூட்டியும் நசீருத்தின் ஷாவும் நடித்திருந்த இப்படம் 1994இல் வெளியானது.

மலையாளத்தில் சிறந்த எழுத்தாளர் எனப் பெயர் பெற்ற ஒருவர், சிறந்த திரைக்கதை எழுத்தாளராகவும் திரைப் பட இயக்குநராகவும் விளங்கினார். அவர் மறைந்த பி.பத்மராஜன். அவர் தனது ‘தகர’ என்கிற சிறுகதையைத் திரைக்கதையாக விரித்து எழுத, பரதன் அதே பெயரில் இயக்கினார்.

பிரதாப் போத்தனும் சுரேகாவும் நடித்திருந்த இப்படம் 1979இல் வெளியானது. இந்தப் படத்தைத்தான் பரதன் ‘ஆவாரம் பூ’ (1992) என்கிற தலைப்பில் தமிழில் மறுஆக்கம் செய்தார்.

இலக்கியப் படைப்பாக வாசித்து மனத்திரையில் கற்பனை செய்த கதாபாத்திரங்கள், நிலப்பரப்புகள் ஆகியன திரைப்படமாகும்போது அவை திரைமொழியில் எப்படி உருப்பெற்றிருக்கின்றன என்பதைத் திரையில் காண்பது ஓர் அலாதியான அனுபவம்.

திரைக்கதை எழுதும் கலை, திரைப்படம் இயக்கும் கலை இரண்டையும் கற்பவர்களுக்கும் திரை ஆர்வலர்களுக்கும் ஓர் இலக்கியப் பிரதி திரைப்படமாகும்போது செய்யப்படும் மாற்றங் களைக் கவனிப்பது முக்கியமான படிப்பினை.

கதையில் சில வரிகளில் கடந்ததைத் திரைப்படத்தில் முக்கியமான காட்சியாக மாற்றியிருப் பார்கள். நிறையப் பக்கங்களில் சொல்லப்பட்டவை ஒருசில நொடிகளில் கடந்துசெல்லும் ஒரே ஷாட் ஆகக் கடந்து சென்றிருக்கலாம்.

கதையின் சில பகுதிகள் தேவைப்படாத நிலையில் அவை திரைக்கதையில் நீக்கப்படுவதையும், சில புதிதாகச் சேர்க்கப்பட்டிருப்பதையும் அறிய முடியும்.

இலக்கியப் பிரதியின் முடிவு திரைப் பிரதியில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம். இந்த மாயாஜால மாற்றங்களை அறிந்துகொள்ள விரும்பும் திரைக்கலை ஆர்வலர்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் ஒருசேரப் பயன் தரும் நூல்.

திரையில் மலர்ந்த

சிறுகதைகள்

140 பக்கங்கள்

விலை: 150/-

தமிழில் - அவை நாயகன்

மதிமலர் வெளியீடு

32/40, வெங்கடேச நகர்,

முதல் தெரு, விருகம்பாக்கம்,

சென்னை - 92

தொடர்புக்கு 7397319177

சிறுகதை தந்த திரைப்படங்கள்! | திரை நூலகம்
ஓவியங்களாக மாறும் தேநீர்க் கோப்பைகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in