

கடந்த 21 ஆண்டுகளாக நின்று களமாடி வரும் வசீகர நட்சத்திரம் ரெஜினா கஸாண்ட்ரா. நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், அதைவிட அதிரடியான கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கும் இவருக்கு வில்லி வேடமும் புதிதல்ல.
தற்போது தீபாவளிக்கு எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் வில்லி வேடம் ஏற்றிருக்கிறார். அது பற்றியும் இரண்டு பத்தாண்டுகளில் தனது நடிப்புப் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மனம் திறந்து பேசிய அவரது பேட்டியின் சுருக்கமான வடிவம்:
கதாநாயகர்களை முன்னிறுத்தும் திரையுலகில் இரண்டு பத்தாண்டுகள் நீடித்திருப்பது பெரிய சவால் என்று நினைக்கிறீர்களா?
நான் அப்படி நினைக்கவில்லை. கேரக்டர் செலக்ஷனும் அந்த கேரக்டரை நடிப்பால் படத்தில் எப்படி ‘பொசிசனிங்’ செய்துகொள்கிறீர்கள் என்பதும்தான் சவால். இன்னொன்று, ஆண் மையத் திரையுலகம் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடாது.
அதை மாற்றுவது பெண்களின் கையிலும் இருக்கிறது. இந்தப் படத்தில் நயன் தாராவுக்கு 60 அடி கட்-அவுட் வைத்திருப்பதும் இதே ஆண்களின் சினிமாவில்தானே? நயன்தாராவுக்கு இது சாத்தியமாகியிருக் கிறது என்பதை முதலில் கொண்டாடுங்கள். இதுதான் மாற்றத்தின் தொடக்கம்.
இதுவரை ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பயன்பட்டிருக்கிறதா?
நிச்சயமாக. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு வாழ்க்கை. கதா பாத்திரங்கள் என்பவை வாழ்க்கை யிலிருந்து எடுக்கப்படும் உண்மையின் சாயல் கொண்டவைதானே... அவற்றின் வளர்ச்சி, முடிவுகள் எல்லாமே ஒரு நடிகருக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுப்பவைதான்.
இந்தக் கற்றுக் கொள்ளலில் ரெஜினாவை இவ்வளவு காலமாகக் கைவிடாமல் ஆதரித்து வரும் தரமான பார்வையாளர்கள், தீவிரமான ரசிகர்கள், நண்பர்கள், திரையுலகினர், இயக்குநர்கள், என்னை மனதில் வைத்துக் கதாபாத்திரங்களை எழுதிய எழுத்தாளர்கள் எல்லாருக்குமே பங்கிருக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கின்றன. இப்போது ஏற்றத்தில் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.