Even The Rain: தண்ணீர்ச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் | சினிமாவும் அரசியலும் 42

Even The Rain: தண்ணீர்ச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் | சினிமாவும் அரசியலும் 42
Updated on
5 min read

மானுட வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக மாறிப்போகின்றன சில போராட்டங்கள். அந்தப் போராட்டத்தின் கதைகளைத் தங்களுக்குத் தேவைப்படும் எல்லா நேரத்திலும் அசைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். வரலாறு நெடுகிலும் அதிகாரத்திற்கு எதிராக எளிய மக்கள் வெளிப்படுத்திய எதிர்ப்புணர்வை கவிதைகளாகவும் கதைகளாகவும் திரைப்படங்களாகவும் வெளிப்படுத்திய கலைவடிவங்கள் மிகுந்த மரியாதையோடு பார்க்க வேண்டியவை.

இந்தத் திரைப்படமும்கூட மானுட வரலாறு மறக்கவே முடியாத மாபெரும் மக்கள் போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால், மகத்தான படைப்புகளின் வரிசையில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மானுடத் திரளின் அடிப்படையான பிரச்னையை ஆழமாகப் பேசியிருப்பதால் தவறவிடக் கூடாத திரைப்படமாகவும் மாறியிருக்கிறது.

வருங்காலத்தில் இந்த உலகம் எதிர்நோக்கி இருக்கும் தலையாய பிரச்சினைகளில் ஒன்றாகத் தண்ணீர்ப் பிரச்சினைதான் இருக்கப் போகிறது. அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக இருக்கலாம் என்கிற அனுமானங்கள் அப்படியே புறந்தள்ளக் கூடியதல்ல. நிலத்தடிநீர் சுத்தமாக வற்றிப்போன உலகின் சில நகரங்களின் காட்சிகள் கதிகலங்கச் செய்ததை மறந்துவிட முடியாது.

சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற இந்தியாவின் முக்கியமான நகரங்களின் நிலத்தடிநீர் இன்னும் சில ஆண்டுகளுக்குத்தான் என்கிற செய்தி அதிர்ச்சியானதுதான். நீரில்லா நிலத்தின் மேலா நம் பிள்ளைகள் வாழப்போகிறார்கள் என்கிற வேதனை அதிகரிக்கத்தான் செய்கிறது.

2000 வருடங்களுக்கு முன்னமே புத்தரால் தீர்த்து வைக்கப்பட்ட ரோகிணி ஆற்றின் தண்ணீர்ப் பிரச்சினையைப் போல, இந்த மனிதகுலம் தண்ணீருக்காகப் பல பிரச்சினைகளைச் சந்தித்திருந்தாலும் 2000 ஆம் ஆண்டில் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், கொச்சாபாம்பா நகரத்தில் தண்ணீர்ச் சுரண்டலுக்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டம் பிரச்சினையின் இன்னொரு பக்கத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அடிப்படை ஆதாரமான தண்ணீர் எப்படி வியாபாரப் பண்டமாக மாறலாம் என்று அரசை எதிர்த்து நின்றார்கள் கொச்சாபாம்பா மக்கள். குடிநீர் விநியோகத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று ஒன்றுகூடி எதிர்த்தார்கள் கொச்சாபாம்பா மக்கள். அந்த மக்கள் போராட்டத்தை அடிப்படையாக வைத்துதான் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஆக, இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பாக செய்ய வேண்டியது என்ன என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம், தண்ணீருக்கான கொச்சாபாம்பா மக்கள் போராட்டத்தைப் புரிந்துகொள்வது அவசியமானதும் முக்கியமானதுமாக இருக்கிறது. சொல்ல முடியாது கொச்சாபாம்பா மக்களைப் போல நாமும் தண்ணீருக்காகப் போராடும் நிலைமை நாளைக்கேகூட வந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கொச்சாபாம்பா மக்கள் போராட்டமானது தண்ணீருக்கான போராட்டம் மட்டுமல்ல, மனிதனின் அடிப்படை உரிமையான குடிநீர் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிரான மிகமுக்கியமான மக்கள் போராட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தண்ணீர் மனிதனின் அடிப்படை உரிமை, அது விற்பனை பொருளல்ல என்கிற செய்தியை உலகமெல்லாம் எதிரொலிக்கச் செய்தது கொச்சாபாம்பா மக்கள் போராட்டம்.

1980 மற்றும் 1990களில் பொலிவியா கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் அரசுக்குக் கடன் வழங்க சில நிபந்தனைகளை விதித்தன. வழக்கமான நிபந்தனைகள்தான்.

அரசு நிறுவங்களைத் தனியாருக்கு விற்க வேண்டும், மின்சாரம், குடிநீர் போன்ற பொதுச்சேவைகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். போராட்டத்தைத் தொடர்ந்து கொச்சாபாம்பா நகரின் குடிநீர் நிர்வாகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கம்போல காத்திருந்த அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெற்றது.

அவ்வளவுதான் உயர்த்தப்பட்டது குடிநீர்க் கட்டணம். மாத வருமானத்தில் 15 லிருந்து 20 சதவீதம் தண்ணீருக்கே செலவானது. மக்களின் கோபம் அதிகரிக்க, போராட்டத்தில் இறங்கினார்கள். போராடிக் கொண்டிருந்த பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து, ‘தண்ணீர் மற்றும் வாழ்க்கையைப் பாதுகாக்கும் ஒருங்கிணைப்புக் குழு’ என்கிற மக்கள் இயக்கத்தை உருவாக்கினார்கள்.

தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பழங்குடியினர் அனைவரும் இயக்கத்தில் இணைந்தார்கள். 2000 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் வரையிலும் பெரும் பேரணிகளும் வேலை நிறுத்தங்களும் சாலை மறியல்களும் நகர முடக்கங்களும் நடைபெற்றன.

போராட்டக்காரர்களைத் தேசவிரோதிகள் என்று சொல்லவில்லை கொலம்பிய அரசு. ஆனாலும் காவல் துறையை அனுப்பியது. கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது. ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியது. கடைசியாக ராணுவத்தையும் வரவைத்தது. நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 17 வயது மாணவன் விக்டர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தான்.

மக்களின் கோபம் இன்னும் அதிகரித்தது. போராட்டங்கள் இன்னும் வேகமெடுத்தன. ஏப்ரல் 10 அன்று தனியார்மய ஒப்பந்தத்தை ரத்து செய்தது அரசு. தனியார் நிறுவனம் வெளியேற்றப்பட்டது. குடிநீர் நிர்வாகம் பொதுத்துறைக்கு மாற்றப்பட்டது.

கொச்சாபாம்பா மக்களின் இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தண்ணீர் தனியார்மயமாவதற்கு எதிரான இயக்கங்கள் வலுவடைந்தன. பல நாடுகள் தண்ணீர்க் கொள்கைகளை மறுபரிசீலனை செய்தன. குடிநீர் மனித உரிமை என்கிற கோரிக்கை வலுவடைந்தது. இந்தக் கொள்கையை 2010இல் ஐக்கிய நாடுகள் சபை ஆதரித்து தீர்மானம் இயற்றியது. கொச்சாபாம்பா மக்களின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 2010இல் வெளியிடப்பட்டது.

புத்திசாலித்தனமாகக் காலனித்துவ ஆதிக்கத்தையும், நவீனப் பொருளாதார ஆதிக்கத்தையும், தண்ணீருக்கான மக்கள் போராட்டத்தையும் இணைத்து வலுவான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். கொச்சாபாம்பா தண்ணீர்ப் போர் என்பது ஒரு நகரத்தின் குடிநீர்ப் போராட்டம் பற்றியது மட்டுமல்ல.

பொது வளங்கள் யாருக்குச் சொந்தம், அடிப்படை மனித உரிமைகளைச் சந்தை நிர்ணயிக்கலாமா என்கிற கேள்விகளை எழுப்பிய வரலாற்று நிகழ்வு. இந்தப் போராட்டம் சொல்வது இதுதான், குடிமக்கள் ஒன்றுபட்டால், அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளை மாற்ற முடியும்.

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் இசியார் பொல்யைன் ஸ்பெயினின் சமகாலத் திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவர். நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் எனப் பலமுகங்கள் உண்டு. சமூக அநீதி, பெண்களின் வாழ்க்கை, தொழிலாளர் வர்க்கம், குடியேற்றம், காலனித்துவம், உலகமயமாக்கல் என இவர் படங்களின் கருப்பொருளுக்காக உலகம் முழுவதும் அறியப்பட்டவர்.

“திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது சமூகத்தைப் புரிந்துகொள்ளவும், கேள்வி எழுப்பவும் உதவும் கருவி” என்கிற கருத்தில் எப்போதும் உறுதியாக இருக்கக்கூடியவர். பிரிட்டிஷ் திரைக்கதை ஆசிரியர் பால் லாவர்ட்டியுடன் இணைந்து இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இசியார் பொல்யைன்.

இசியார் பொல்யைன் இயக்கிய திரைப்படங்களிலேயே இந்தப் படம்தான் மிகவும் பிரம்மாண்டமாக லட்சியமிக்கப் படைப்பாகப் பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு பெரும்பாலும் பொலிவியாவின் காடுகளிலும், கொச்சாபாம்பா நகரத்திலும் நடைபெற்றது. மொத்தம் 4000 க்கும் மேற்பட்ட துணைநடிகர்கள் பங்கேற்றனர். அதில் 300 பேர் பொலிவியாவின் பழங்குடி மக்களாவர்.

இந்தத் திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பல்வேறு சர்வதேச விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. 83வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவில் ஸ்பெயினின் அதிகாரபூர்வ பரிந்துரைப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

திரைப்படம் முன்வைக்கும் முக்கியமான கேள்வி, ‘ஒருகாலத்தில் தங்கத்தைப் பறித்தவர்கள் காலனியாதிக்கவாதிகள்; இன்று தண்ணீரையே லாபப் பொருளாக மாற்றுபவர்கள் யார்?’ இந்த ஒப்புமையின் மூலம், காலனித்துவத்தின் வடிவம் மாறியிருக்கலாம்; ஆனால் நாட்டின் வளங்களைக் கட்டுப்படுத்தும் அதிகார அரசியல் இன்னும் தொடர்கிறது என்பதே திரைப்படத்தின் மைய அரசியல் கருத்தாக வெளிப்படுகிறது.

மெக்சிகோ திரைப்பட இயக்குநர் செபாஸ்டியன் மற்றும் ஸ்பானிய தயாரிப்பாளர் கோஸ்டா தங்கள் படக்குழுவுடன் பொலிவியாவின் கொச்சாபாம்பா நகரத்துக்கு வருகிறார்கள். கொலம்பஸின் கடற்பயணம் பற்றிக் குறைந்த செலவில் ஒரு திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதால் ஏழை நாடான பொலிவியாவைத் தேர்ந்தெடுக்கிறார் கோஸ்டா.

படத்திற்கான தேர்வில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாய்ப்புத்தர வேண்டும் என்று வாதிடும் உள்ளூர் மனிதன் டேனியல், தனது தீவிரமான பேச்சால் செபாஸ்டியனின் கவனத்தை ஈர்க்கிறார். அவர் முக்கியமான கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்; அவரது மகள் பெலேனும் முக்கியப் பாத்திரம் பெறுகிறாள். ஆனால், டேனியல் உண்மையில் தண்ணீர்த் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் தலைவர்களில் ஒருவரென்பதை செபாஸ்டியன் அப்போது அறிந்திருக்கவில்லை.

இதற்கிடையில் நகரத்தில் தண்ணீர்க் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைகின்றன. கோஸ்டா டேனியலை அமைதியாக இருக்கப் பணம் கொடுத்து சமாதானப்படுத்த முயல்கிறார். டேனியல் பணத்தை ஏற்றுக்கொண்டாலும், அதைப் போராட்டத்திற்கே செலவழித்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்.

பின்னர் அவர் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். படத்தின் முக்கியக் காட்சியை முடிக்க வேண்டும் என்பதால், கோஸ்டா காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்து டேனியலைத் தற்காலிகமாக விடுவிக்கிறார். கடைசிக் காட்சி முடிந்ததும் காவல்துறை மீண்டும் டேனியலைக் கைது செய்ய வருகிறது; ஆனால் படத்தில் நடித்த உள்ளூர் மக்கள் தப்பிக்க உதவுகிறார்கள்.

அந்த இரவு நகரத்தில் வன்முறை வெடித்துவிட்டதாகச் செய்திகளில் தெரிகிறது. பல நடிகர்கள் பயந்து வெளியேற விரும்புகிறார்கள். மறுநாள் டேனியலின் மனைவி தெரேசா, போராட்டத்தில் காயமடைந்து காணாமல் போன பெலேனைத் தேட உதவுமாறு கோஸ்டாவிடம் கேட்கிறாள். ஆரம்பத்தில் மறுக்கும் கோஸ்டா, இறுதியில் அவளுடன் செல்கிறார்.

இறுதிக் காட்சியில் கோஸ்டா புறப்படத் தயாராகும்போது, தன் மகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றியுடன் ஒரு சிறிய பரிசைக் கொடுக்கிறார் டேனியல். வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது அதைப் பிரித்துப் பார்க்கிறார் கோஸ்டா. கொச்சாபாம்பாவின் தண்ணீர் நிரப்பப்பட்ட சிறிய கண்ணாடிக் குடுவை கோஸ்டாவின் கண்களையும் இதயத்தையும் கலங்கச் செய்கிறது.

ஒவ்வொரு மக்களின் அடிப்படை உரிமை தண்ணீர். ஒருபோதும் அது வியாபரப் பண்டமாக இருக்கக் கூடாது. ஒருபோதும் அது லாபநோக்கம் மட்டுமே கொண்ட முதலாளிகளின் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது.

காலநிலை மாற்றத்தால் ஒருபக்கம் பெருமழை, பெரும்வறட்சி. இன்னொருபக்கம் தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள் இரக்கமில்லாமல் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொச்சாபாம்பா மக்களைப்போல ஒன்றாகச் சேர்ந்து இந்த நிலைமைகளை மாற்றவேண்டிய பொறுப்பு எல்லாருக்கும் இருக்கிறது. வருங்காலச் சந்ததிகளுக்காகவாவது சிந்திக்கத் தொடங்க வேண்டுமல்லவா?

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

Even The Rain: தண்ணீர்ச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் | சினிமாவும் அரசியலும் 42
Argentina 1985: மறக்க முடியாத நீதி விசாரணை | சினிமாவும் அரசியலும் 41

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in