

‘நான் அன்றி யார் வருவார்' பாடல் காட்சியில் பண்டரிபாய் - டி.ஆர்.மகாலிங்கம்
புதுப் புதுக் கற்பனைகள் பொங்கிவரும் ஒரு கவிஞனுடைய எண்ணப் பறவை யின் சிறகுகளை முறித்துப் போட்டால் எப்படி இருக்கும்? மெட்டுக்குப் பாட்டு எழுதச் சொல்வதும் அதைப் போன்றதுதான்.
கவியரசர் தன்னுடைய தொடக்கக் காலப் பாடல்கள் பலவற்றை இந்த முறையில் எழுதித் தகுந்த அங்கீகாரம் கிடைக்காமல் போனது. அதனால், “என்னுடைய பாடல்களுக்குத்தான் நீ மெட்டமைக்க வேண்டும்” என்று எம்.எஸ்.விக்கு நிபந்தனை விதித்தார். கண்ணதாசன் தயாரித்த சொந்தப் படம் ‘மாலையிட்ட மங்கை’ (1958). அதில் எம்.எஸ்.வி. ஆபோகி ராகத்தில் மெட்டமைத்த பாடலை டி.ஆர்.மகாலிங்கம் – ஏ.பி.கோமளா இணைந்து பாடினர்.
அந்தப் பாடல் பதிவாகிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக அந்தப் பக்கம் வந்தார் ‘இசைச் சக்ரவர்த்தி' ஜி.ராமநாதன். உடனே, “உச்ச ஸ்தாயியில் கணீரென்று பாடும் மகாலிங்கத்தை இப்படி மந்தர ஸ்தாயியில் பாடவைப்பது சரியா?” என்றார்.