

மகள் மீது அளப்பறியப் பாசம் கொண்ட தந்தையர் கதைகளுக்கு ஹாலிவுட்டும் விலக்கல்ல. 1950 இல் ‘ஃபாதர் ஆஃப் த பிரைடு’ (Father of the Bride) என்கிற படம் வெளியாகிப் பெருவெற்றி அடைந்தது. 1949இல் இதே தலைப்பில் எழுதப்பட்ட நாவலின் திரை வடிவம் அது.
பின்னர் இப்படம் 1991இல் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அந்த ‘ரீமேக்’ பற்றியும், அதை அப்படியே அடியொற்றித் தமிழில் வெளியான படத்தைப் பற்றியும் இந்த வாரம் பார்க்கலாம்.
1991இல் ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஸ்டீவ் மார்ட்டின். அவரது நடிப்பில் வெளியான ‘ஃபாதர் ஆஃப் த பிரைடு’ படம், அதன் ரீமேக் ஆகியவற்றின் கதை இது: தன்னு டைய மகளை இன்னமுமே சிறுமி என்று நினைத்துக்கொண்டிருக்கும் பாசம் நிரம்பிய தந்தை ஜார்ஜ்.
தன்னுடைய மகள், ‘தாமொரு இளைஞனைக் காதலிப்பதாக’ வந்து சொல்லும்போது அதிர்ச்சி அடைவார். மனதுக்குள் சங்கடப்படுவார். மகளுடன் விவாதம் செய்வார். அவருக்கு மகள் மேல் வெறுப்பு இல்லை. மகள் வளர்ந்துவிட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாத, எல்லாத் தந்தையர்களும் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்தான்.
இருந்தாலும் மகள் மீது இருக்கும் அளவுகடந்த பாசத்தால் மகளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வார். அந்த இளைஞனையும் அவனுடைய குடும்பத்தையும் சந்திப்பார். அப்போது ஜார்ஜுக்கு அவனைப் பிடிக்காமல் போய்விடும்.
மகளைப் பிரிய வேண்டுமே என்கிற மனத் தடைதான் அந்த விருப்பமின்மைக்குக் காரணமாக இருக்கும். ஆனால் ஜார்ஜின் மனைவிக்கு அவனைப் பிடித்துவிடும். இதன்பிறகு இருவீட்டாருக்கும் சில மனத்தாங்கல்கள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் சரியாகி திருமணம் ஏற்பாடு நடக்கும்.