

தி ஒயிட் பலூன்
ஒரு நாட்டின் உண்மையான பலம் அதன் ராணுவத் தளவாடங்களில் இல்லை; சாமானிய மக்களின் ஆன்மாவில்தான் இருக்கிறது என்பதை ஈரானிய மக்கள் இன்று உலகுக்கு நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். மதத்தின் பெயரால் சொந்த ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படுவதை வெறுத்தும், அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகள் தங்கள் மீது போரைத் திணித்ததை எதிர்த்தும் உண்மையான ஜனநாயகத்துக்காக, சுதந்திரத்துக்காக ஏங்கும் லட்சக்கணக்கான ஈரானியர்கள் அந்நாட்டின் வீதிகளில் திரண்டனர்.
பெரிய பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்களின் வாயில்கள், வரலாற்றைப் பேசும் அருங்காட்சியகங்களின் வாயில்களில் மனிதச் சங்கிலியாகக் கரம் கோத்து நின்று அகிம்சை வழியில் போருக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள். மக்களை வீதிகளில் திரட்டியதில் ஈரானியக் கலைஞர்கள், கல்வியாளர்களுக்கு முக்கியமான பங்கிருக்கிறது.
அவர்கள் தங்கள் தூரிகைகளையும் இசைக்கருவிகளையும் புத்தகங்களையும் ஏந்திக்கொண்டு வீதிக்கு வந்தார்கள். இதில் நீண்டகாலமாக ஒடுக்குத லுக்கு உள்ளாகிவரும் திரைக் கலைஞர்களும் அடக்கம். அவர்களில் ஒருவரான ஈரானிய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹி, கடந்த மாதம் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது நிகழ்விலிருந்து துருக்கி வழியாக நாடு திரும்பினார்.
ஈரானில் ரகசியமாகப் படமாக்கப்பட்ட இவருடைய ‘இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்' (It Was Just an Accident) திரைப்படம், 98வது ஆஸ்கரில் சிறந்த சர்வதேசத் திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை ஆகிய இரண்டு பிரிவுகளில் இறுதிப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், நார்வே நாட்டைச் சேர்ந்த ‘சென்டிமென்டல் வேல்யூ’ (Sentimental Value) விருதை வென்றது. சிறந்த திரைக்கதைக்கான விருதை அமெரிக்காவின் ரையன் கூக்ளர் எழுதிய ‘சின்னர்ஸ்’ (Sinners) படம் வென்றது.
ஒரு கலைஞனின் பிணைப்பு!
ஜாஃபர் பனாஹிக்குச் ‘சிறந்த இயக்குநர்' பிரிவில் ஆஸ்கரில் பரிந்துரை வழங்கப்படாதது திரை விமர்சகர்களிடையே பெரும் விவாதத் தைக் கிளப்பியது. ஏனென்றால் ஆஸ்கருக்கு இணையான கோல்டன் குளோப் (Golden Globe) உள்படப் பல விருதுகளை பனாஹியின் ‘இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்' படம் பெற்றிருந்த நிலையில், ஆஸ்கர் இவரைப் புறக்கணித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆஸ்கரில் விருது வெல்லா விட்டாலும், ஈரானுக்குள் நுழைந்தால் உடனடிக் கைது, உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிந்தும் (அவர் நாட்டில் இல்லாதபோது ஏற்கெனவே ஈரானிய நீதிமன்றத்தால் ஓராண்டுச் சிறைத் தண்டனை தீர்ப்புக்கு ஆளாகியிருந்தார்), ஆஸ்கர் விழா முடிந்த கையோடு அவர் துருக்கி வழியாக மார்ச் 31 அன்று ஈரானுக்குத் திரும்பிய செயல், சர்வதேசத் திரையுலகையே நெகிழ வைத்துள்ளது.
விருதுகளைவிடவும் ஒரு கலைஞ னாகத் தனது மண்ணுக்கும் மக்களுக்கும் கையிலெடுத்த கலைக்கும் அவர் காட்டும் விசுவாசம் இப்போது பேசுபொருளாகியிருக் கிறது. கோல்டன் குளோப் விருது மேடைக்கு அவரால் செல்ல முடியாத நிலையில், ‘ஈரானிய மக்களின் போராட்டங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் செய்தியை விருது மேடையில் வாசிக்கும்படி’ அவர் வேண்டு கோள் வைத்திருந்தார். ஆஸ்கர் விழா முடிந்த கையுடன் அமெரிக்கச் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது: " எங்கள் தொன்மையான நாட்டை யாராலும் அழிக்க முடியாது; ஒருகால் என் மண்ணுக்கு வெளியே நான் இறந்தால் ஈரானில்தான் என்னை அடக்கம் செய்ய வேண்டும்" என்கிற பனாஹியின் சொற்கள், ஒரு கலைஞன் தன் நாட்டின் மீது கொண்டிருக்கும் ஆழமான பிணைப்பைச் சாட்சியப்படுத்துகின்றன.
ஒடுக்குமுறையை வெல்லும் கலை
ஈரானிய சினிமா இன்று உலக சினிமாவுக்கு மிக உயர்ந்த படைப்புகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அத்தகைய படைப்புகளை அந்த மண்ணின் கலைஞர்கள் ஒடுக்குதலின் மேல் நின்று கொண்டுதான் உலகின் கண்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.