

படம் உதவி: ஞானம்
தீமைக்கு எதிரான வீரதீர, சாகச ‘நாயக சினிமா’வில் கதையின் மையமாக நாயக நடிகர் மாறியபோது, பாடல் வரிகளும் வசனமும் இசையும்கூட அந்த நடிகரின் கோட்பாட்டுச் சார்பை, அரசியல் சார்பைப் பிரதிபலித்தன. இதை ரசிகர்கள் விரும்பி ஏற்றதால், பாடல்களும் வசனமும் மக்களின் மனநிலையைத் திசைமாற்றும் கருவிகளாகக் கையாளப்பட்டன.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி ஆகியோர் எழுதிய வரிகள் இசை வடிவம் பெற்று, திரையில் அவற்றுக்கு எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வாயசைத்து நடித்தபோதும், அந்த வரிகளை, வசனங்களை நட்சத்திரங்களின் குரலாக வரித்துக்கொள்ளும் உள வியல் ரசனையில் ஊறிப்போனது.
இதனால், ‘ஹீரோயிசம்’ மட்டுமே சிறந்த உள்ளடக்கம் என்கிற மனப் பாங்கு வெகுஜன ரசனையில் முதலிடம் பெற்று, மாறுபட்ட கதை, புதுமையான இயக்கம், கதாநாயகி உள்ளிட்ட பெண் கதாபாத்திரங்கள், துணைக் கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் ஆகியன பின்தள்ளப் பட்டன. இதனால், சினிமாவில் சமூக விமர்சனம் என்பதே நாயகக் கதாபாத்திரம் செய்யும் ஒன்றாக மட்டுமே கட்டமைக்கப்பட்டது.
இப்படிச்செய்யப்பட்ட விமர்சனம் கூட நட்சத்திரப் புகழை முன்னிலைப் படுத்தியே செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். - சிவாஜி படங்களில் கதையின் முக்கிய நிகழ்வு, முன்னேற் றம், போராட்டம், வெற்றி ஆகியவை ஹீரோவின் வழியாகவே நிகழ்ந்தன.
இதனால், திரைக்கதையை ஹீரோ வுக்காக வடிவமைத்து எழுதும் ஒரு சட்டகம் உருவாகிக் கெட்டிதட்டிப் போனது. ஹீரோ அறிமுகம் தொடங்கி, அவருடைய போராட்டம், வெற்றி ஆகியவற்றுக்குத் தனி இசை, தனி ஒளிப்பதிவு எனக் காட்சிமொழி சட்டகச் சிறையில் அடைபட்டது.
சமரசமற்ற புதுமையாளர்: நாயக சினிமாவில் உருவான நட்சத்திரப் போட்டி, சினிமாவின் சமூகப் பொறுப்பைக் குறைத்து, பொழுது போக்கையும் நட்சத்திர மதிப்பையும் முக்கியமாகக் கொண்டு இயங்கத் தொடங்கியது. எம்.ஜி.ஆரையும் சிவாஜி கணேசனையும் பயன்படுத்தி, வசூல் லாபத்தை எதிர்நோக்கி ஊட்டி வளர்க்கப்பட்ட ஹீரோயிச முன்மாதிரியை அவர்களுக்கு அடுத்து வந்த ரஜினிகாந்த் - கமல்ஹாசன் தொடங்கி, நேற்று அறிமுகமான புதுமுக நாயக நடிகர்கள்வரை அட்டைப்பூச்சியைப் போல் பற்றிக் கொள்ளும் முன்மாதிரியாக உருவெடுத்து நிற்கிறது.