‘பொம்மை’யைப் பேச வைத்தார்! | கண் விழித்த சினிமா 48

‘பொம்மை’ | படம் உதவி: ஞானம்

‘பொம்மை’ | படம் உதவி: ஞானம்

Updated on
4 min read

கதைத் தேர்வு, அந்தக் கதைக்கு ஏற்ற அல்லது அக்கதை கோரும் திரைக்கதையை அமைத்தல், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்தல், அவர்களுக்கான தோற்றத்தை முடிவுசெய்தல் (Get up), அவர்கள் நடிக்க வேண்டிய அளவு உள்பட ஓர் இயக்குநராக எஸ்.பாலசந்தர் காட்டியிருக்கும் நிறை ஆளுமை ஓர் அசலான முன்மாதிரி.

வசனங்களால் சொல்லக் கூடாதவற்றைக் காட்சியின் மூலம் உணர்த்தும் ஒளிப்பதிவைக் கதை சொல்லும் கருவியாக (Narrative Cinematography) அவர் கையாண்ட விதம், அதன் பிறகான தமிழ் சினிமா ஒளிப்பதிவுக்கு உயிர் ஊட்டியது.

மிகக் குறிப்பாக, காட்சி கோரும் அழகியலை (Cinematic Aesthetics) ஓர் இயக்குநரின் திரைமொழியாகக் காட்ட ஒளியமைப்பு, கேமரா கோணங்கள், நகர்வு ஆகிய அம்சங்களைக் காட்சியின் ஓர்மையில் (Visual Composition) ஒருங்கிணைப்பதில் கலையையும் தொழில்நுட்பத்தையும் ‘அந்த நாள்’ படம் தொடங்கி அவர் செய்து காட்டிய ரசவாதம், தலை முறைகள் கடந்து மகேந்திரன், மணிரத்னம், மிஷ்கின், கார்த்திக் சுப்புராஜ், நித்திலன் சாமிநாதன்வரை பெரும் தொடர்ச்சியாக உருவெடுத்து நிற்கிறது.

இதை இந்த இயக்குநர்கள் அனைவரும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருப்பதையும் மனதில் வைத்து எஸ்.பாலசந்தருடைய திரை மொழித் தாக்கத்தின் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும். இன்னொரு பிரபலமான தொடர்ச்சி யிலும் எஸ்.பி. வேரோடிக் கிடக்கிறார்.

தற்கால மலையாள சஸ்பென்ஸ் த்ரில்லர் சினிமாக்கள், தென்கொரிய சஸ்பென்ஸ் த்ரில்லர்களின் பாரியதாக்கத்தை உள்வாங்கி வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், புதிய தலைமுறை தமிழ் சினிமா இயக்கு நர்கள் பெரிதும் விரும்பிச் செய்யும் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படங்களில், எஸ்.பாலசந்தர் என்கிற ஆணிவேர் தென்படுவதைக் காணலாம்.

இவ்வகை சமூக, அரசியல் த்ரில்லர் படங்களின் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கும் திருப்பங்களை, எவ்வாறு திரை யரங்கத் தருணங்களாக (Theater moments) மாற்றியமைப்பது என்பதற்கு, எஸ்.பியின் ‘அந்த நாள்’, ‘அவனா இவன்?’, 'பொம்மை’, ‘நடு இரவில்’ ஆகிய நான்கு படங்கள் காட்டிச்சென்ற புதிய பாதை, இன்று பெரும் ராஜபாட்டையாகித் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இருவேறு இசைகளின் இணைப்பு: தற்கால சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் பின்னணி இசைக்குத் தரப்படும் முக்கியத்துவமும்கூட எஸ்.பி. உருவாக்கிச் சென்ற பாதை தான். அவர் இன்னும் ஒருபடி மேலே சென்று பாடல்களையும் கதையின் திருப்பமாக, கதையை நகர்த்தும் உத்தியாகக் கையாண்டர்.

அவரது தொடக்கக் காலப் படமான ‘இது நிஜமா’வில் இரட்டைச் சகோதரர்கள் வேடம் ஏற்று, அவரே இணை இயக்கம் செய்து, இசையமைத்து, பாடி நடித்தார். அந்த இருவரில் லண்டனில் படிக்கும் மாது அங்கேயே கொல்லப் பட்டுவிடுவான். சென்னையில் இசைக்கருவிகள் பழுதுநீக்கும் கடை வைத்திருக்கும் கோபால் இன்னொருவன்.

மாதுவைக் கொன்றவன், எதற்காக அவனைக் கொன்றானோ அந்த நோக்கத்தின் பலனை அடைய சென்னைக்கு வருகிறான். தான் எதற்காக, எவ்வாறு கொல்லப் பட்டோம் என்பதைத் தன் சகோதரன் கோபாலிடம் சொல்லவும், தன்னைக் கொன்றவனைப் பழிவாங்கவும் ஆவியாக சென்னைக்கு வந்து விடுகிறான் மாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in