

ஜனவரி 2-ஆம் தேதி வெளியான இந்து டாக்கீஸ் பக்கத்தில் ‘தாக்கம் தந்த 10 படங்கள்’ என்கிற தலைப்பில், 2025-இன் குறிப்பிடத்தக்க மிடில் சினிமாக்களைக் கவனப்படுத்தியிருந்தோம். அந்தப் பட்டியலின் தொடர்ச்சியாக, 2025-இல் மேலும் பல ரசனையான முயற்சிகளை இந்து டாக்கீஸ் கவனப்படுத்த விரும்புகிறது. உள்ளடக்கம், உயர்வான காட்சியாக்கம், நல்ல நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்களோடு தூய பொழுதுபோக்குத் தன்மையிலும் சிறந்து விளங்கி ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட மேலும் பல படங்களில் முதலில் ‘பயாஸ்கோப்’ படம் குறித்துப் பற்றிப் பார்க்கலாம்.
அரிதான முயற்சிகளைப் பிரபலமான படைப்பாளிகள் செய்யும்போது கிடைக்கும் அங்கீகாரம், புதியவர்கள் செய்யும்போது கிடைக்காமல்போவது தமிழ் சினிமாவின் சாபங்களில் ஒன்று. அப்படித்தான் சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய ‘பயாஸ்கோப்’ என்கிற அசலான தமிழ் சினிமா உரிய கவனம்பெறாமல் போனது.
கடந்த 2011-இல் மூடநம்பிக்கைக்கு, குறிப்பாக நரபலிக்கு எதிராகவும் கிராமியக் கலைஞர்கள் நடத்தப்படும் விதத்தை எடுத்துக்காட்டியும் ‘வெங்காயம்’ படத்தை எடுத்திருந்தார் அந்த ஆண்டில் அறிமுக இயக்குநர்களில் ஒருவரான சங்ககிரி ராஜ்குமார். அவர் தற்போது ‘ஒன்’ என்கிற உலகச் சாதனை திரைப்படம் ஒன்றை அதன் அத்தனைப் படைப்பாக்கத் துறைகளையும் தனியொரு கலைஞனாகப் பங்களித்து உருவாக்கியிருக்கிறார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
அதற்கிடையில் தான், அவரது எழுத்து, இயக்கத்துடன் அவர் நாயகனாகவும் நடித்து, துணைக் கதாபாத்திரங்களில் முழுவதும் கிராமத்து மனிதர்களை மட்டுமே பயன்படுத்தி உருவான படம்தான் ’பயாஸ்கோப்’. 2025-இன் தொடக்கத்திலேயே படம் வெளியானது. சந்தேகமில்லாமல், ‘பயாஸ்கோப்’ தமிழின் அட்டகாசமான சுயாதீன சினிமா. அதுவும் கிராமத்து மனிதர்கள் இணைந்து சினிமா எடுப்பது பற்றிய ஒரு சுயாதீன சினிமா எனும்போது நகைச்சுவை களம் எவ்வளவு ரகளையாக இருக்கும் என்பதை வாசித்து அறியமுடியாது. அந்தப் படத்தைக் காண்பதன் மூலம்தான் உணரமுடியும்.
இந்தப் படம் 2021இல் வெளியான ‘சினிமா பண்டி’ என்கிற தெலுங்கு சுயாதீன நகைச்சுவை சினிமாவின் கதைக்களத்தை ஒத்திருந்தாலும் சங்ககிரி ராஜ்குமார், கிராம மக்கள் இணைந்து ஒரு திரைப்படம் எடுக்கும் கதையின் வழியாக ‘ஜாதகம்’ என்கிற ஜோதிட நம்பிக்கைக்கு எதிராக இப்படத்தில் சாட்டை சுழற்றிக் காட்டியிருந்தார்
‘சினிமா பண்டி’யுடன் பயஸ்கோப்பை ஒப்பிட்டால், இரண்டில் எந்தப் படம் உள்ளடக்க ரீதியாகவும் ஒரு திரைப்படமாக உருப்பெற்ற வகையிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்றால் அது ‘பயாஸ்கோப்’தான்.
கிராமிய ஆந்திராவில் வீரபாபு ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவர் தற்செயலாக ஒரு விலையுயர்ந்த டிஜிட்டல் கேமராவைக் கண்டெடுக்கிறார். முதலில் அதை விற்றுவிடத் தீர்மானித்தவர், பிறகு அந்தக் கேமராவை வைத்துத் திரைப்படம் எடுக்க முடிவு செய்கிறார். உள்ளூர் திருமண ஒளிப்படக்காரரான கணபதியைக் கேமராமேன் ஆக்குகிறார். சலூன் கடை நடத்தும் இளைஞரான மரிடேஷ் பாபுவை கதாநாயகனாகவும் காய்கறி வியாபாரம் செய்யும் மங்காவை கதாநாயகியாகவும் நடிக்க வைக்கிறார். ஷாட் வித்தியாசம் கூட தெரியாத வீரபாபு தான் விரும்பிய படத்தை எடுத்தாரா? சக கிராமவாசிகள் அவருக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என எளியவர்கள் சினிமா எடுக்கும் கதையைக் கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான நகைச்சுவையுடன் சித்தரித்தது.
‘சினிமா பண்டி’ முற்றிலும் ஒரு கற்பனையான கதைக் களம். ஆனால், சங்ககிரி ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘பயாஸ்கோப்’ ரத்தமும் சதையுமான கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தித்தனத்தையும் அவர்களுடைய கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவற்றைச் சித்தரிப்பதன் வழியாக, தொழில்முறை சினிமா மேக்கிங்கையே பகடி செய்திருந்தது. தமிழ் சினிமா பேசத் தயங்கும் பொருளை, சமரசமில்லாமலும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் விமர்சனம் செய்திருந்த வகையிலும் காத்திரமான படைப்பு. சினிமாவைப் பற்றி வெளிவந்த சினிமாக்களுக்கெல்லாம் இப்படம் கிரீடம் என்றால் அது மிகையில்லை.
ஜோதிடத்தால் விளைந்த தனது சொந்த இழப்பை உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்கிற தவிப்புடன், அதையே கதையின் உள்ளடக்கமாகக் கொண்டு சுயாதீனப் படமெடுக்கக் கிளம்புகிறார் ஒரு கிராமத்துப் பட்டதாரி இளைஞர்.
உள்ளூர் ஜோதிடரின் பொல்லாப்புடன் ‘வெங்காயம்’ என்கிற அந்தப் படத்தை எடுக்கும் செயல்முறையில், படக் கருவிகள் தயாரிப்பு, அவற்றை இயக்கவும் பயன்படுத்தவுமான தொழில் நுட்பக் கலைஞர்களாக, தன்னுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பயிற்சியளித்துப் பயன்படுத்துவது, கிராமத்து மக்களையே நடிக்க வைப்பது, படத்தை முடிக்க முடியாமல் பணத்துக்கு அல்லாடுவது, அதன்பிறகு சென்னைக்கு வந்து அதைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான சந்தைப் படுத்துதலில் எதிர்கொள்ளும் பாடுகள், இறுதியாக அந்தப் படைப்பை உருவாக்கியவருக்கு வந்து சேரும் உண்மையான ‘லாபம்’ என்பதுவரை ஒரு திரைப்படம் உருவாகும் பின்னணியில் இருக்கும் போராட்டத்தையும் வலிகளையும் சூழ்நிலை உருவாக்கும் தூய நகைச்சுவையில் நனைத்துக் கொடுத்திருந்தார்.
சுயாதீன பட முயற்சியின் பாதையில் நிறைந்திருக்கும் வலி என்கிற உணர்வை, நகைச்சுவையைக் கடந்து பார்வையாளர்களை உணர வைப்பதில் இயக்குநர் சங்கரி ராஜ்குமாரின் ஆளுமை படம் முழுவதும் பரவிக்கிடந்தது. ஓடிடியில் இப்போது பார்த்தாலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படமாக ‘பயாஸ்கோப்’ 2025இன் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்று.