

"ஒரு சில வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரும். அதைத் தவற விட நேர்ந்தால், தவறவிட்ட அந்த ஒரு வாய்ப்பை நினைத்தே மொத்த வாழ்வும் வீணாகிவிடும்". இது "காதலும் கடந்து போகும்" திரைப்படத்தில் கதிரவன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பேசும் ஒரு வசனம். அப்படி தவறவே விடக் கூடாத ஒரு நல்வாய்ப்பை மிக பிரமாதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் இயக்குநர் சிதம்பரம். முதலில் ‘ஜானே-மன்’, அடுத்து அதிக பட்ச கேரள மாநில விருதுகள் வாங்கி கொண்டாடப்பட்ட "மஞ்சும்மல் பாய்ஸ்"-க்குப் பிறகு சிதம்பரம் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம் இது. ஓர் ஒற்றைத் தாய் மகன் பாசப் போராட்டத்தை , த்ரில்லர் வடிவத்தில் தொகுக்கப்பட்டு மிகச் சரியாக எழுதி இயக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் தான் "பாலன்".
அடையாள சிக்கல்கள் கொண்டு, பெயர்களற்ற ஒரு தைரியசாலி ஒற்றைத் தாயும், அவளின் ஆறு வயது மகனும் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவருகிறார்கள். அவர்கள் இருவரையும் உள்வாங்கிக்கொள்ளும் உலகம் அத்தனை அழகானதாக இல்லை. இறுதி வரை ஓட்டத்திலியே இருக்கும் அவர்களுக்கு ஏன் பெயர்கள் இல்லை, அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சந்திக்கும் மாந்தர்கள், எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள் என்ன, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் கதை.
படம் தொடங்கும் முன்னர், "புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்" என்னும் வாசகத்தை திரைப்படத்தில் வரும் ஒரு மூதாட்டி பேசியிருக்கிறார். அதே மூதாட்டி , திரைப்படத்தில் ஒரு அசாதாரணமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இப்படி படம் துவங்குவதற்கு முன்னரே சுவாரசியங்கள் துவங்கி விடுகிறது. முதல் காட்சியில், சிறையில் ஒரு சுவரோவியமாக சொல்லப்படும் ஒரு கதையிலிருந்து முடிச்சுகள் துவங்குகின்றன. பின்னர் தன் வழி தானே தேடும் நதியாக பயணிக்கும் திரைக்கதையில் பார்வையாளர்களையும் பங்கேற்க வைத்திருப்பது , ஓர் அசாத்தியமான திரையனுபவத்தை பகிர்கிறது.
கதைக்கு பொருத்தமான நடிகர்கள் கிடைத்துவிட்டாலே படம் பாதி வெற்றி என்பார் இயக்குநர் கே.பாலச்சந்தர். அவ்வகையில் பெயரற்ற அன்னையாக வரும் ஃபர்சானா பலத்திங்கல் மற்றும் சிறுவயது மகனாக வரும் ஆதிசேஷன், மும்மது ஜினான், மற்றும் டாலி ஜூன் கதாபாத்திர வார்ப்புகளோடு மிகச் சரியாகப் பொருந்தியிருக்கின்றனர். தனித்த வீட்டில் உடல் நலம் குன்றியிருந்தபோதும், துணிச்சலாக வாழும் பாட்டி [டாலி ஜூனின் மின்னலான நடிப்பு ), ஒரு குழப்பமான காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், தேடப்படும் ஒரு பழைய குற்றவாளி [டோவினோ தாமஸ்] என பலரும் இக்கதையை சுமந்து நகர்த்துகின்றனர்.
அதில் குறிப்பாக சுதந்திரம், பயம், கடந்தகால கசப்புகள், மகன் மீது அதீதப் பற்று என அத்தனை உணர்வுகளையும், விருதுகள் குவிக்கப் போகும் நடிப்பையும் கண்களாலேயே வெளிப்படுத்தி விடுகிறார் ஃபர்சானா. அதேபோல அழுத்தமான ஒரு சிறுவனாக ஆதிசேஷனும் , பதின்ம வயது முகம்மது சினானும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில், தன் நட்சத்திர அந்தஸ்தை தூர எறிந்துவிட்டு, ஒரு சாதாரண குற்றவாளி அப்பாஸாக வரும் டோவினோ தாமஸ் நம்மை வெகுவாகக் கவர்கிறார். மலையாள இயக்குனர்கள் கிரிஷ் ஏடி, எஸ்.ஐ. பவித்ரனாக வரும் ஜீன் பால் லால் அனைவரும் பாந்தம்.
"எ வெட்னெஸ்டே" போலவே பிரதான கதை மாந்தர் இருவருக்கும் பெயர் கிடையாது என்பது பார்வையையாளர்களின் ஆர்வத்தை வெகுவாக தூண்டக்கூடியதொரு அம்சத்தை அழகாக பயன்படுத்துகிறார்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் தன் கடந்தகால கதையை விலங்குகள் கதையாக எட்வர்ட் எனும் குற்றவாளி பகிர்ந்திருப்பான். அதே போலொரு நாடோடிக் கதையை பெயரற்ற அன்னை தன் கடந்த காலத்திலிருந்து மூதாட்டியிடம் சொல்லும் காட்சி வெகு பிரமாதம். மற்றுமொரு காவல் நிலையக் காட்சியில் தன் கையறு நிலையை வெறும் ஆழமான மூச்சுகள் மூலமாகவே இளநிலை காவலர் பவித்ரன் வெளிப்படுத்துகிறார்.
பேசாத அவர் கோபம் நமக்கு வெகு நுணுக்கமாகப் புரிய வைக்கப்படுகிறது. "பேசாதே.. காட்டு !" என்னும் திரைக்கதையின் ஆதார விதியை அவ்வளவு அழகாக பயன்படுத்தி இருக்கிறது இப்படம் . கதையை 2016 காலகட்டத்திற்கு நகர்த்துவதால் சிசிடிவி, அலைபேசி, என சம கால மின்னணு விஷயங்களிலிருந்து கதை தப்பித்துக் கொள்கிறது. ஒரு குறையும் உள்ளது. இரண்டாம் பாதியில் வரும் கால நிலை மாற்றம் மட்டும், கதையின் தொடர்ச்சியில் ஓர் அதிர்வை நமக்கு தருகிறது ஆனால் அதுவும் கதைப் போக்கை பெரிதாக பாதிக்கவில்லை.
ஓர் இயக்குநரின் உச்ச வெற்றி படமே பின்னாளில் அவருக்கு தடையாகி போவதை திரை சரித்திரம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. ஆனால் மஞ்சும்மள் பாய்ஸின் இமாலய வெற்றி தன்னுடைய அனைத்து படைப்பில் எந்தவித தாக்கத்தையும் வெளிப்படுத்தாமல் அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொண்டது இயக்குநர் சிதம்பரத்தின் துணிச்சலை காட்டுகிறது. அதேபோல நானே கதை எழுதுவேன் என்று அடம் பிடிக்காமல் மற்றொரு இயக்குநரான ஜித்து மாதவனின் நல்ல கதையை தன் செய்நேர்த்தியால் மிக அழகாக மற்றுமொரு சிறந்த படைப்பாக வெளிக்கொண்டு வந்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கதை மாந்தர்களை போலவே நடக்கும் நகரத்திலிருந்து விலகிய சூழலும், நிலப்பரப்பும் கதையோடும் சேர்ந்தே பயணிக்கிறது. இருவேறு காலகட்டங்களின் நிலவியல் அழகை ஒளிப்பதிவில் நேர்த்தியாக செய்திருக்கிறார் ஷைஜு காலித். பாசப் போராட்டம் தான் மைய சரடு என்றாலும் த்ரில்லர் அழகியலை படம் முழுக்க பின்னணி இசையில் இன்னொரு தளத்தில் இன்னொரு கதை சொல்லியிருக்கிறார் இசையமைப்பாளர் சுசின் ஷியாம்.
"அடுத்த வினாடி ஒளித்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் அனேகம்". இது அன்பே சிவம் வசனம். அதை ஒட்டியே கதையின் எந்த ஒரு தருணத்தையும் மாந்தர்களையும் உளவியல் சிக்கல்களையும் சம்பவங்களையும் யூகிக்கவே முடியாதபடிக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு உணர்வுபூர்வமான நாடகக் கதையை கதற கதற வசனங்கள் வைத்திருக்க வேண்டிய வாய்ப்பையும், பாடல்களால் பிழிந்திருக்க வேண்டிய சோகத்தையும் இடது கையால் ஒதுக்கித் தவிர்த்திருப்பது வெகு ஆச்சரியம்.
மலையாள படவுலகின் முதல் பேசும் படம் 1938-இல் வெளிவந்த "பாலன்". விரைவில் ஒரு நூற்றாண்டு கடக்க போகும் மலையாள பேசும் சினிமாவிற்கு, நவீன நல்ல மலையாள படைப்புகள் வெளிவருகின்றன. அந்த வரிசையில் ஒளிர்ந்து அடங்கும் வணிக ஜிகினா துகள்களுக்கு மத்தியில் ஒரு சின்ன மின்மினிப்பூச்சி தான் "பாலன்"