

ஈரானில் இரண்டு வெடிகுண்டுகள் வெடிப்பதைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் திரைப்படம். வேறு எந்தக் குண்டுகளையும் செயலிழக்கச் செய்யலாம், ஏன் அப்புறப்படுத்தி விடலாம். ஆனால் இந்தக் குண்டுகளை எதுவும் செய்ய முடியாது. நாடாளுமன்றத்தில் இயற்றப்படுகிற சட்டங்களாலும், நீதிமன்றத்தில் செய்யப்படுகிற விசாரணைகளாலும் இந்தக் குண்டுகள் வெடிப்பதைத் தடுக்கவோ தள்ளிப்போடவோ ஒருபோதும் முடியாது.
இரண்டு இதயங்களில் முட்டிமோதிய முரணிலிருந்து உருவாகி, இனி சேர்ந்திருக்கவே முடியாது என்கிற நிலையில் வெடித்துச் சிதறும் அந்தக் குண்டுகள், பிரியும் இரண்டு இதயங்களை மட்டுமல்ல, பார்த்துக்கொண்டிருக்கும் நம்மையும் நிலைகுலையச் செய்துவிடுகின்றன. பத்து வயது மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாதரும் சிமினும் விவாகரத்துப் பெற்று பிரிய நினைக்கிறார்கள். விவாகரத்திற்காக நீதிமன்றத்தை முதலில் நாடிய சிமினுக்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஏன், நாதருக்கும் இருக்கத்தான் செய்கின்றன காரணங்கள்.
இந்த உலகத்தில் சேர்வதும் பிரிவதும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதயத்தின் ஆழத்திலிருந்து அன்பு பெருக்கெடுத்தபோது இணைந்துகொள்வதும், அன்பின் ஊற்றுகள் ஒருகட்டத்தில் காணாமல் போகும்போது பிரியநேர்வதும் வலிதான். சேர்ந்திருப்பதற்கான காரணங்களை அழுத்திச் சொல்லும் அதே உதடுகள், பிரிவைத் தேர்ந்தெடுத்த பிறகு அதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டிருப்பது ஆச்சரியமானதுதான்.
இந்தத் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களான நாதரும் சிமினும் விவாகரத்திற்காக நீதிமன்றத்தின் முன்னால் காத்திருப்பதற்குக் காரணம்? தனிப்பட்டது என்று மேலோட்டமாகப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் இந்தத் திரைப்படம் ஈரானிலிருந்து வெளிவந்திருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் அஸ்கர் பர்ஹாதி.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் திரைப்படங்கள் எடுக்கப்படுவதைப்போல, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் திரைப்படங்கள் எடுக்கப்படுவதைப் போல, ஏன் அமெரிக்காவில் எடுக்கப்படுகிறதைப்போல, ஈரானில் அரசை விமர்சித்தும், மதத்தை விமர்சித்தும் திரைப்படங்கள் எடுப்பது சாதாரண காரியமல்ல.
ஆனால், கலையை அப்படியெல்லாம் இரும்புக்கரம் கொண்டோ, சங்கிலிகளைக் கொண்டோ கட்டுப்படுத்திவிட முடியாது. காற்றைப்போல ஏதாவதொரு துவாரத்தைக் கண்டறிந்து பாய்ந்து கொண்டுதான் இருக்கும். ஒளியைப்போல ஏதாவதொரு இடுக்கின் வழியாக ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கும்.
அப்படித்தான் ஈரானில் அரசின் கடுமையான கண்காணிப்பையும் தணிக்கையையும் தாண்டி உலகம் வியந்து பார்க்கக்கூடிய பல திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அடைக்கப்படும் வழிகளால் அதிர்ந்து போய் நிற்கவில்லை அந்தக் கலைஞர்கள், புதிய பாதைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
வெளிப்படையாக அரசியல் பேச முடியாத நிலைமையில் ஈரானிய திரைக்கலைஞர்கள் மறைபொருளாகத் தங்கள் திரைப்படங்களின் காட்சியமைப்பிலும் கவித்துவமான உரையாடல்களிலும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த வகையில் ஈரானின் புதிய அலை சினிமாவின் முன்னோடிகளான அப்பாஸ் கியாரோஸ்தமி, மொஹ்சென் மக்மல்பஃப் ஆகியோருக்குப் பிறகு உலகளவில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஈரானிய இயக்குநராகப் பர்ஹாதி திகழ்கிறார்.
ஈரானிய இதயங்களுக்குள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்த அரசியல் உணர்வுகளைப் படமாக்கிய அற்புதமான இயக்குநர் அஸ்கர் பர்ஹாதி. உலக சினிமாவில் தங்கள் நாட்டின் அரசியலை, வரலாறை, போர்களை, புரட்சிகளைத் திரைப்படமாக்கிய இயக்குநர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் வழியில்லாத அஸ்கர் பர்ஹாதி முடங்கிப் போகாமல் முற்றிலும் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
ஆம், ஒரு குடும்பத்தின் வழியாக, ஒரு விவாகரத்து வழக்கின் வழியாக, அதற்கான காரணங்களின் வழியாகச் சமூக அவலங்களை வெளிப்படுத்துகிறார். உதாரணத்திற்கு இந்தப் படத்தை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு குடும்பக்கதைபோல தெரியும், ஆனால் பார்த்து முடித்தபின் அந்த நாட்டின் அரசியலைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருப்பீர்கள். இதுதான் அஸ்கர் பர்ஹாதியின் தனித்துவம்.
”நான் நேரடியாக அரசியல் திரைப்படங்களை உருவாக்கவில்லை. ஆனால், மனிதர்களை அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்கவே முடியாதென்பதை உறுதியாக நம்புகிறேன்” என்று சொன்ன பர்ஹாதி இந்த வார்த்தைகளின் அடிப்படையிலேயே தன்னுடைய திரைப்படங்களை உருவாக்கினார்.
இரண்டுமுறை அகாடமி விருது, பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக்கரடி விருது, கான் திரைப்பட விழாவில் விருது எனப் பெற்ற அத்தனை விருதுகளுக்கும், அங்கீகாரத்திற்கும் தகுதியானதுதான் பர்ஹாதியின் படைப்புகள். “திரைப்படம் என்பது பதில்களைச் சொல்வதற்கான கலை அல்ல; வாழ்க்கையின் சிக்கல்களை நேர்மையாகக் காட்டுவதற்கான கலை” என்று சொன்ன பர்ஹாதி தன்னுடைய திரைப்படங்களில் வாழ்வின் சிக்கல்களை நேர்மையாகவே காட்டினார்.
அஸ்கர் பர்ஹாதி எழுதி, இயக்கிய மிக முக்கியமான இந்தத் திரைப்படம் 2011இல் வெளிவந்தது. 2012இல் நடைபெற்ற அகாடமி விருதில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. அந்த விருதை வென்ற முதல் ஈரானியத் திரைப்படம் இதுதான். அவரின் முந்தைய படத்தின் வெற்றி, இந்தப் பட த்திற்கான நிதி திரட்டுவதை மிக எளிதானதாக மாற்றியது. நிதி இருந்தாலும்கூட, திரைப்படத்தை அவ்வளவு சாதாரணமாக எடுத்துவிட முடியவில்லை.
2010 செப்டம்பரில் ஈரானின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் இந்தத் திரைப்படத்தை இயக்குவதற்கு பர்ஹாதிக்குத் தடை விதித்தது. அதற்குக் காரணமாக ஒரு விருது வழங்கும் விழாவைச் சுட்டிக்காட்டியது அமைச்சகம். விருது வழங்கும் விழாவில் விருதை மட்டும் வழங்காமல் வேறென்ன செய்தார்கள். ஒன்றுமில்லை பர்ஹாதி நன்றியுரை சொன்னார். அதற்காகவா என்று ஆச்சரியப்படாதீர்கள். அந்த உரையில் ஈரானியத் திரைப்பட ஆளுமைகள் இருவரைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
ஒன்று; ஈரானிலிருந்து நாடு கடத்தப்பட்ட இயக்குநர் மக்மல்பாஃப் மீண்டும் ஈரானிய சினிமாவிற்குத் திரும்ப வேண்டும். இரண்டு; சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் திரைப்பட இயக்குநர் ஜாபர் பனாஹிக்கு ஆதரவு தெரிவித்தது என இந்த இரண்டு விஷயங்கள்தான் பர்ஹாதி திரைப்படம் இயக்குவதற்குத் தடைவிதிக்கக் காரணமாக இருந்தவை. பிறகு தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக பர்ஹாதி வருத்தம் தெரிவித்த பிறகு தடை நீக்கிக்கொள்ளப்பட்டது.
இவ்வளவு தடைகளையும் தாண்டி வெளியான இந்தத் திரைப்படம் வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 8 லட்சம் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் 2.4 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை வசூல் செய்தது. மொத்தத்தில் இந்தப் படம் பெற்ற விருதுகளைப் பற்றி, உலகளாவிய அங்கீகாரங்களைப் பற்றித் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.
ஈரானின் தெஹ்ரான் நகரில் உயர் நடுத்தரவர்க்கத்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நாதரும் சிமினும். கூடவே பத்து வயது மகள் தெர்மே. சிமினுக்கு ஈரானில் வாழ்வது பிடிக்கவில்லை. வெளியேற விரும்புகிறாள். விசாக்களையும் தயார்செய்து வைத்திருக்கிறாள். ஆனால், நாதர் தன்னுடைய வயதான மற்றும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக அங்கேயே இருக்க விரும்புகிறான்.
சிமின் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்ல, இந்தக் காரணத்திற்கெல்லாம் விவாகரத்து கொடுக்க முடியாது என்று சொல்கிறது நீதிமன்றம். சிமின் தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல, தெர்மே அப்பாவுடன் தங்கிக் கொள்கிறாள்.
நகரின் வெளியே தொலைதூரத்தில் வசிக்கும் ராசியே என்கிற பெண்ணை பகலில் தந்தையைக் கவனிக்க நியமிக்கிறான் நாதர். அவள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவளாக இருக்கிறாள் என்பது முக்கியமானது. தனது மகள் சோமயேயுடன் வந்து கவனித்துக் கொள்கிறாள். ஒருநாள் வழக்கமான நேரத்திற்கு முன்னமே நாதரும் தெர்மேவும் வீட்டிற்கு வர, வீடு பூட்டியிருக்கிறது.
திறந்து உள்ளே சென்றால் தந்தை கட்டிலுக்குப் பக்கத்தில் விழுந்து கிடக்கிறார். அவர் கைகள் கட்டப்பட்டிருப்பதால் நாதர் கடும் கோபமடைகிறான். சிறிதுநேரம் கழித்து வந்த ராசியே நகரில் ஓர் அவசர வேலையிருந்ததாகச் சொல்கிறாள். இருவருக்கும் வாக்குவாதம் ஆக, நாதர் அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறான்.
ராசியே படிகளில் விழுந்ததாகத் தெரிகிறது. பின்னர் நாதரும் சிமினும் அவள் கருச்சிதைவு அடைந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து பதட்டத்தோடு மருத்துவமனை செல்கிறார்கள். நாதர் ராசியே கர்ப்பிணி என்பதை அறிந்திருந்தும் அவளைத் தள்ளியிருந்தால், அது கொலைக்குற்றமாக மாறலாம். இதனால் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்குகிறது.
ஒருபுறம் நாதர், சிமின், தெர்மே; மறுபுறம் ராசியே மற்றும் அவளது கணவன் ஹோஜாத். ஹோஜாத் சீக்கிரம் கோபப்படுபவன். காலணி தைக்கும் தனது நீண்டகால வேலையை இழந்ததால் அவன் மனக்கசப்புடனும் அவமான உணர்வுடனும் வாழ்கிறான். கடனாளிகளால் தொந்தரவு செய்யப்படுகிறான். பலமுறை நாதரைத் தாக்க முயல்கிறான். ராசியே, தன் கர்ப்பத்தை நாதர் அறிந்திருந்தார் என்று கூறுகிறாள்; காரணம், வீட்டில் தெர்மேவின் தனிப்பாட ஆசிரியருடன் மருத்துவரைப் பற்றிப் பேசியதை அவர் கேட்டதாக அவள் சொல்கிறாள். நாதர் அதை மறுக்கிறார்; ஆசிரியரும் முதலில் நாதருக்குச் சாதகமாக சாட்சி அளிக்கிறார்.
ஆனால் தெர்மே தந்தை பொய் சொல்கிறார் எனச் சந்தேகிக்கத் தொடங்குகிறாள். இறுதியில் நாதர், சிறைக்குச் செல்ல வேண்டாம் என்பதற்காகவும் தந்தையை காப்பாற்றுவதற்காகவும் பொய் சொன்னதாக ஒப்புக்கொள்கிறார். அதன்பின் ஆசிரியர் தனது சாட்சியை வாபஸ் பெறுகிறார். தந்தையைக் காப்பாற்ற தெர்மே நீதிபதியிடம், தன் தந்தைக்கு ராசியே கர்ப்பிணி என்பது தானே பின்னர் சொன்னதாகக் கூறுகிறாள். இதற்கிடையில் ராசியே, முதியவரைத் தேடி சென்றபோது ஒரு கார் மோதியதாகவும் அன்றிரவு வலி இருந்ததாகவும் சிமினிடம் ஒப்புக்கொள்கிறாள். அது நாதர் தள்ளியதற்கு முந்தைய நாள் நடந்த சம்பவம்.
ஹோஜாதின் வன்முறை தெர்மேவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கலாம் என்று சிமின் அஞ்சுகிறாள். எனவே ஹோஜாதுக்குப் பணம் கொடுத்து சமரசம் செய்ய நாதரைச் சம்மதிக்க வைக்கிறாள். ஆனால் பணம் கொடுப்பதற்கு முன், கருச்சிதைவுக்குத் தானே காரணம் என்று ராசியே குர்ஆன் மீது சத்தியம் செய்ய வேண்டும் என நாதர் கேட்கிறார். ராசியேவால் அதைச் செய்ய முடியவில்லை.
அவளை வற்புறுத்த முடியாமல் ஹோஜாத் கோபத்தில் தன்னைத்தானே அடித்துக்கொள்கிறான். இறுதியில் குடும்ப நீதிமன்றம் நாதரும் சிமினும் விவாகரத்து பெற அனுமதிக்கிறது. திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் அவர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே தனித்தனியாக காத்திருக்கிறார்கள்; தெர்மே நீதிபதியிடம் தாம் யாருடன் வாழ விரும்புகிறேன் என்பதைத் தெரிவிக்கக் காத்திருக்கிறாள். திரைப்படம் அந்தத் தேர்வை பார்வையாளர்களிடம் சொல்லாமல் முடிவடைகிறது.
தெர்மே யாரைத் தேர்வு செய்கிறார் என்று ஏன் சொல்லவில்லை என்பதற்கு பர்ஹாகி, “அந்தத் தேர்வு முக்கியமில்லை; அந்தத் தேர்வைச் செய்ய வேண்டிய நிலைக்கு ஒரு குழந்தை தள்ளப்பட்டிருப்பதுதான் முக்கியம்” என்கிறார். நீங்களே சொல்லுங்களேன், தயாராக வைக்கப்பட்டிருக்கும் காரணங்களால் எத்தனை பிரிவுகள் ஒவ்வொரு நாளும். அந்தப் பிரிவுகளால் அலைக்கழிக்கப்படுகிற குழந்தைகளின் தவிப்பிற்கும் அலைக்கழிப்பிற்கும் என்ன பதில் சொல்லப் போகிறோம்?
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com