

இந்தியத் திரைப் படம் ஒன்றுக்கு ஹாலிவுட், மேற்கத்திய திரைப்பட இசையமைப்பாளர் இசையமைப்பது இது முதல் முறையல்ல. கனேடிய இசையமைப்பாளர் மைக்கல் தன்னா (Mychael Danna) இந்தி, ஆங்கிலத்தில் தயாரான மீரா நாயரின் ‘மான்சூன் வெட்டிங்’ (2001), தீபா மேத்தாவின் ‘வாட்டர்’ (2005) உள்ளிட்ட சில படங்களுக்குப் பின்னணி இசை வழங்கினார்.
அதேபோல் அமெரிக்க இசையமைப்பாளர் வேய்ன் ஷார்ப் (Wayne Sharpe) ‘கங்காஜல்’ (2003), ‘அபாஹரன்’ (2005), ‘ராஜ்நீதி (2010), ‘அரக்ஷான்’ (2011) ஆகிய இந்திப் படங்களுக்குப் பின்னணி இசையமைத்தார்.
இன்னும் பின்னோக்கிச் சென்றால், ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ (1982) படத்தில் பண்டிட் ரவிஷங்கருடன் பிரிட்டிஷ் இசையமைப்பாளர் ஜார்ஜ் ஃபென்டன் இணைந்து இசையமைத்தார். இந்தச் சின்ன ‘ப்ளாஷ்பேக்’, கடந்த வாரம் வெளியான ‘ராமாயணா’ படத்தின் ட்ரைலரும் அப்படத்தின் இசைக் கூட்டணியும், இந்தியப் பார்வையாளர்களிடம் உருவாக்கியிருக்கும் எதிர்பார்ப்பைக் குறிப்பிடுவதற்காகத் தான்.
இந்தி உள்படப் பல்வேறு இந்திய மொழிகளில் கறுப்பு - வெள்ளை காலம் தொட்டே பலமுறை ராமாயணம் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போதைய ‘ராமாயணா’ வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பண்பாட்டு ரீதியாக மட்டுமல்ல; நட்சத்திரரீதியாகவும் இணைக்கும் படமாக உருவாகியிருக்கிறது.