

தமிழ் சினிமாவின் வரலாற்றில் தொண்ணூறுகளின் காலகட்டம் ஒரு முக்கிய திருப்புமுனை என்றே சொல்லலாம். டிஜிட்டல் யுகம் மெல்ல அறிமுகமாகிக் கொண்டிருந்த நேரத்தில், படச்சுருளில் தமிழ் சினிமா தன்னுடைய படங்களை எடுத்துக்கொண்டிருந்தது. என்றாலும் ‘ரெட்’, ‘அலெக்ஸா’ போன்ற புதிய வகை கேமராக்களும், கம்யூட்டரை இசையமைப்புக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியும், பன்னாட்டுத் திரைப்படங்களைக் காண்பதற்கு வழிவகை செய்த உலகமயமாக்கலின் தாக்கமும் என 90களின் சினிமா தமிழ் சினிமாவுக்கு ஏற்றம் தந்த 10 ஆண்டுகள் என்றால் அது மிகையில்லை.
ஏனென்றால், புதிய தொழில்நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர்களின் வரவால் இசை மொழியிலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கதை சொல்வதிலும் மாற்றங்கள் ஏற்பட்டதுபோலவே, புதிய அறிமுகப் படைப்பாளிகளின் வருகை, புதிய கதைக் களங்களில் கதை சொல்ல முயன்றது எனப் பல நிலைகளில் தமிழ் சினிமா தன்னை மறுவடிவமைப்பு செய்து கொண்ட காலம் என்று சொல்லலாம்.
90களின் தலைமுறையை ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற புதிய இசையமைப்பாளர்கள் பயன்படுத்திய புதிய ஒலிகள் கவர்ந்தன. பன்னாட்டு இசையை இந்தியத் தன்மைக்கு ஏற்ப உள்வாங்கிப் பிரதிபலித்ததன் மூலம் தொண்ணூறுகளின் தமிழ் சினிமா கதை, இசை, ஒலி, ஒளி எனப் பல மாற்றங்களை வெளிப்படுத்திய காலம் என்பதை, ‘தொண்ணூறுகளின் தமிழ் சினிமா’ என்கிற 376 பக்க நூலில் முனைவர் அ.பிச்சை, முக்கிய படங்களைக் குறிப்பிட்டு விரிவாக அலசியிருக்கிறார்.
1990களில் தமிழ் சினிமா அடைந்த வளர்ச்சி, புதிய நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் பற்றிய விவரங்கள், மற்றும் அக்காலப் படங்களின் வாயிலாக மட்டுமே அறியமுடிகிறது. 1992ஆம் ஆண்டு கே.எஸ் சேது மாதவன் இயக்கிய ‘மறுபக்கம்’ இந்தியாவின் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இவ்வாண்டில்தான் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய புதிய இயக்குநர்கள் தமிழ்த் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தனர்.
விக்கிரமனின் ‘புது வசந்தம்’, ரவிக்குமாரின் ‘புரியாத புதிர்’ போன்ற படங்கள் வெளிவந்தன. தொடர்ந்த ஆண்டுகளில், கிராமியக் கதைகளைக் கொண்ட ‘சின்ன கவுண்டர்’ (1992) உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன. இதனால், பல தயாரிப்பாளர்கள் கிராமியக் கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்துள்ளனர்.
ஜெயபாரதி இயக்கிய ‘உச்சி வெய்யில்’ (1990) இந்தக் கலாச்சாரச் சூழலிலும் மாற்றுத் திரைப்படம் மலர முடியும் என்பதை நிரூபித்தது. இது கொல்கத்தாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவிலும், கனடா நாட்டில் ரொறன்ரோவில் நடந்த திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விமர்சன ரீதியில் பாராட்டுப்பெற்றது.
மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ (1992) காஷ்மீர் தீவிரவாதிகள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கி வெற்றி கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்து - முஸ்லீம் உறவு பற்றிய கதையைக் கொண்ட பம்பாய் (1995) பல தடைகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டாலும் வெற்றிப்படமாக அமைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை இதன் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
90களின் தமிழ்த் திரைப்படங்களுக்கும் திரைக்கலைஞர்களுக்கும் பல விருதுகள் கிடைத்தன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருதும், அகத்தியனுக்கு சிறந்த இயக்குநர் விருதும், சிறந்த நடிகராக கமல்ஹாசனுக்கு வெள்ளித் தாமரை விருதும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதும், சித்ராவுக்கு சிறந்த பின்னணிப் பாடகி விருதும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்துக்கான விருது ‘காதல் கோட்டை’க்கும் கிடைத்தன. மிக முக்கிய திரைப்படம் குறித்த சிறந்த நூல் எழுதியமைக்காக மூத்த எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுக்கு தங்கத் தாமரை விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்காலத்தின் ஓடிடி காலகட்டத்தில், வேகமான உள்ளடக்கங்களைக் காணப் பழகிவிட்ட இன்றைய பார்வையாளர்களுக்கு, தொண்ணூறுகளின் சினிமா எப்படிப்பட்ட பரிமாணத்தை எட்டியிருந்தது, அதன் பயணம் எப்படிப்பட்டதாக அமைந்தது என்பதைப் புரிந்து கொள்ள ‘தொண்ணூறுகளில் தமிழ் சினிமா’ என்கிற நூல் உதவும்.
தமிழ் சினிமா இன்று எங்கு நிற்கிறது என்பதை அறிய, அது கடந்த வந்த பாதையை மீள் வாசிப்பது அவசியம் என்கிற அடிப்படையில் சினிமாவைக் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்குச் சினிமா ஆர்வலர்களுக்கும் இந்நூல் ஒரு காலப் பெட்டகம்.
- அ.பவித்ரா, பயிற்சி இதழாளர்