

சமூக அக்கறை கொண்ட யூடியூபர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல தளங்களில் பிரபலமாகியிருப்பவர் ராஜ்மோகன் ஆறுமுகம். அவர் தற்போது, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் ’பாபா பிளாக் ஷீப்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரிடம் படம் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
பிரபலமான சிறார் ’ரைம்’ பாடலின் முதல் வரியைத் தலைப்பாக வைக்க என்ன காரணம்? - கதைதான் காரணம். ’பாபா பிளாக் ஷீப்’ பாடல் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் ஒரு புரட்சிகரமான பாடல். இந்தப் பாடல்தான், கதையில், இரண்டு குழுவாகப் பள்ளியில் பிரிந்து கிடக்கும் மாணவர்களை ஒன்று சேர்க்கும். ‘பிளாக் ஷீப் யூடியூப்’ சேனல் வழியாகப் புகழ்பெற்ற இளைஞர்கள் இதில் நடித்திருப்பதும்கூட இந்தத் தலைப்புக்கு எதிர்பாராத பொருத்தம். முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ’ஆர்ஜே’ விக்னேஷ் காந்த், நரேந்திர பிரசாத் இருவருமே அந்த சேனல் வழியாகப் புகழ்பெற்றவர்கள்தான்.
குழந்தை நட்சத்திரமாக நடித்துப் புகழ்பெற்ற அம்மு அபிராமியை இதில் கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறேன். இவர்கள் தவிர, ’விருமாண்டி’ அபிராமி, அயாஸ், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன், சேட்டை ஷெஃரீப், மதுரை முத்து, கே.பி.ஒய். பழனி உள்படப் பலர் நடித்திருக்கிறார்கள்.
என்ன கதை, என்ன வகைப் படம்? - இது இன்றைய தலைமுறைக்கான பள்ளிக்கூட சினிமா. இன்றைய தலைமுறை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய மூன்று தரப்புக்குமான படம். எப்போதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருக்கும் இரண்டு பள்ளிக்கூட மாணவர்கள் தரப்பு, அவர்களுக்குள் ஏற்படும் நட்பு, பிரிவு, அதற்குக் காரணமாக இருக்கும் ஒருவர், அவர் யார், ஏன் மாணவர்களைப் பிரித்து வைக்கிறார் என்பதற்கான விடையாக விறுவிறுவென்று படம் நகரும்.
இன்று பல மாணவர்களிடம் விரக்தி, கழிவிரக்கம், நம்பிக்கையின்மை, தற்கொலை எண்ணம் என பல மனச் சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் அவர்கள் வழியிலேயே போய் களைந்தெறிவதுதான் திரைக்கதையின் ’ட்ரீட்மெண்ட்’ஆக இருக்கும்.
சமுத்திரக்கனி நடித்த ’சாட்டை’ படம் போல் அறிவுரைகளைச் சொடுக்கும் படமா? - சத்தியமாக இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பள்ளியில் நடந்த சம்பவம் செய்திகளில் அடிபட்டபோது, அது குறித்து பொதுச் சமூகத்தில் எந்த விவாதமோ, பேச்சோ எழவில்லை. அந்த வருத்தம் என் மனதில் தங்கியிருந்தது. அதனோடு கற்பனை, இயல்பான நகைச்சுவை இரண்டையும் இணைத்துப் படமாக்கியிருக்கிறேன்.
இதில் ’விருமாண்டி’ புகழ் அபிராமி, ஓர் அம்மா கதாபாத்திரம் ஏற்றுள்ளார். அவரைப் போன்ற ஓர் அம்மாவிடம் கொஞ்சம் நேரம் பேசினாலே போதும். இன்றைக்குத் தப்பான பாதையில் போகும் மாணவர்கள் உடனே மாறிவிடுவார்கள். அந்த அம்மா கதாபாத்திரம் இயல்பாகக் கேட்கும் சில கேள்விகள் இந்தக் கதையையே மாற்றும். அந்தக் கேள்விகள் அனைத்தும் சமூகத்தைப் பார்த்துக் கேட்பவைதான். ஆனால் அவை போதனையாக இருக்காது.
தொழில்நுட்பக் குழு? - ஒளிப்பதிவாளர் சுதர்சன் நயன்தாரா நடித்த ‘ஐரா’வுக்கு ஒளிப்பதிவு செய்தவர். ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணிபுரிந்த சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். அஜித் நடித்த ‘துணிவு’ படத்தின் எடிட்டர் விஜய் வேலுக் குட்டிதான் இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர். ராஜ்மோகன் ஆறுமுகம்