

அரசுப் பள்ளிகளின் தரம் குறித்த தவறான பரப்புரைகளின் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதைக் கதைக் களமாகக் கொண்டு ஜோதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘ராட்சசி’ படத்தை இயக்கியிருந்தார். சை.கௌதம் ராஜ். தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்கிற தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அருள்நிதி ‘டைட்டில்’ கதாபாத்திரம் ஏற்றிருக்கும் இப்படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
படத்தின் தலைப்பு, ‘மலையூர் மப்பட்டியான்’, ‘கரிமேடு கருவாயன்’ பாணியில் இருக்கிறது. இக்கதையின் நாயகன் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த கதாபாத்திரமா? - நாயகன் தற்காலத்தில் வாழும் ஒரு கதாபாத்திரம்தான். இது ‘பீரியட்’ படம் இல்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது. அங்கே வாழும் ஒரு சாமானிய விவசாயியின் மகன்தான் ஹீரோ. ஒரு காலத்தில் அக்கிராமத்தின் பெயர் ‘கழுவேற்றுவான்குளம்’ என்றிருந்தது. கழுமரம் என்பது அரசியல் ரீதியாக மரணத் தண்டனை பெற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கொலைக் கருவி.
இயேசு கிறிஸ்துவைக் கொல்லப் பயன்படுத்திய சிலுவை, எப்படி இன்று புனிதமாகப் பார்க்கப்படுகிறதோ.. அதைப்போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கழுமரம் புனிதமாக வழிபடப்படுகிறது. இதில் கழுமரத்தில் தண்டனைபெற்று அல்லது தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களின் புனிதம் பற்றிப் பேசவில்லை. கழுவேற்றம் குறித்து நாயகன் வாழும் கிராமத்துடன் ஒரு வரலாற்றுத் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறேன். அது படத்தின் தொடக்கத்தில் வரும். அதனால்தான் இப்படியொரு தலைப்பு.
நாயகன் யாரையும் கழுமரத்தில் ஏற்றுகிறாரா? - இக்கேள்விக்கான பதிலைச் சொன்னால் முழுக் கதையையும் கூற வேண்டியிருக்கும். நாயகனின் காதல், நட்பு, அரசியல் புரிதல், அவனது கோபம் எல்லாம் கலந்த பொழுதுபோக்குப் படம் இது. அதைத் தாண்டி ரசிகர்கள் எதை எடுத்துக்கொண்டு போகிறார்கள் என்பதே ஒரு தரமான பொழுதுபோக்குப் படத்தின் அஜெண்டாவாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படியொரு அட்டகாசமான, மக்களை நோக்கிய ‘டேக் அவே’ இருக்கிறது.
ஓட்டுப் பொறுக்கும் கட்சி அரசியலானது, வாக்காளர்களாக இருக்கும் எளிய மக்களைத் தங்களுக்கு ஏற்ப எப்படி அரசியல்மயப்படுத்துகிறது என்பதுதான் கதையில் உள்ள முக்கியப் பிரச்சினை. ‘அந்த அரசியலுக்குள் என்னையும் என் ஊர் மக்களையும் வற்புறுத்தி நுழைக்காதே..
எங்களைப் பின்னோக்கி இழுக்காதே..’ என்று குமுறும் கிராமத்துச் சாமானியன் ஒருவனுடைய மூர்க்கமான கோபம், எப்படிப்பட்டச் சூழலில், என்ன மாதிரியான துணைக் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் உருவாகிறது, அது எதில் போய் முடிந்தது என்பதை நோக்கித் திரைக்கதை நகரும்.
அருள்நிதி முறுக்கு மீசை தோற்றத்துடன் இருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்துக்கு அவரை ஏன் தேர்வு செய்தீர்கள்? -நாயகனின் மீசை என்பது வட்டாரக் கலாச்சாரத்தின் ஓர் அடையாளம். தொடக்கம் முதலே, தனக்கு நல்லக் கதைகளைத் தேடித் தேடிச் சேர்த்துக்கொண்டவர் அருள்நிதி. அப்படித்தான் அவரே தேடி வந்து இதையும் எடுத்துக்கொண்டார். 2019இல் கரோனா முதல் அலைக்கு முன்னர், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் விஜய் நடிப்பில் இந்தப் படத்தை இயக்குவது என முடிவாகிவிட்டது.
ஆனால், பொது முடக்கத்தால் நடக்க வில்லை. பின்னர் ராகவா லாரன்ஸ் கதையைக் கேட்டு நான் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். அதுவும் நடக்கவில்லை. அதன்பிறகு இந்தக் கதையைக் கேள்விப்பட்டு, ‘இது எனக்கான கதை’ என்று கூறி அருள்நிதி வந்து பொருந்திக்கொண்டார். இந்தப் படத்தில் அவரது பக்குவப்பட்ட நடிப்பையும் ஆக்ரோஷமான ஆக் ஷன் நடிப்பைப் பார்க்க முடியும்.
வேறு யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? படக்குழு பற்றியும் கூறுங்கள்.. அருள்நிதி ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். யார் கண்ணன் அருள்நிதியின் அப்பாவாக நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் ‘பூ’ ராமு. மிகச் சிறந்த கலைஞர். அவரை வைத்து மூன்று நாள் படப்பிடிப்பு நடத்தியிருந்த நிலையில் திடீரென இறந்துவிட்டார்.
முனீஸ்காந்த் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். ‘சார்பட்டா பரம்பரை’ சந்தோஷ் பிரதாப், ‘கன்னிமாடம்’ புகழ் சாயாதேவி. ராஜசிம்மன், சரத் லோகித்தாஷ்வா, பத்மன், ஜக்குபாண்டி எனப் பலர் நடித்திருக்கிறார்கள். தர் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத் திருக்கிறார்.