

ரோமானிய நாட்டார் கதை மரபில் புகழ்பெற்றது ‘ரோடபிஸ்’ (Rhodopis) என்கிற இளவரசியின் கதை. சிற்றன்னையால் துன்பத்துக்கு ஆளாகும் ஒரு பிரபுவின் மகள், எதிர்பாராத அதிர்ஷ்டத்தினால் எகிப்தியப் பேரரசனை மணந்து அரசியாகும் கதை. அதுவே பின்னர் ஐரோப்பிய நாட்டார் கதை மரபில், ‘சிண்ட்ரெல்லா’வின் கதையாக (Cinderella story) மறுகூறல் வடிவத்தில் புகழ்பெற்றது. ‘உணர்ச்சிமயமான’ அக்கதை, உலகம் முழுவதும் பரவி, அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றம் பெற்ற நூற்றுக்கணக்கான ‘சிண்ட்ரெல்லா’ கதைகள் இருக்கின்றன.
தென்னகத்திலும் புகழ்பெற்ற அப்படியொரு பழமையான ‘சிண்ட்ரெல்லா’ கதையே ‘ஞான சௌந்தரி அம்மாள் விலாசம்’. தமிழ் நாடக மரபில் 200 ஆண்டுகளுக்கு முன்பே தெருக்கூத்தாக நிகழ்த்தப்பட்டுப் புகழ்பெற்றது. அதன்பின்னர் சங்கரதாஸ் சுவாமிகள் அதிலிருந்த பாடல்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்து, எளிய நடையில் உரையாடல் மிகுந்த நாடகமாக ‘ஞான சௌந்தரி’யை அரங்கப் பிரதியாகப் பயிற்றுவித்தார். அதில் சில மாற்றங்கள் செய்து மேடையேற்றினார் நவாப் ராஜமாணிக்கம்.
தளியத் - எஃப். நாகூர் கூட்டணி
தமிழ் சினிமா பேசத் தொடங்கியதும் அந்த நாடகத்துக்கு ’சினாரியோ’ எழுதி, அதைப் படமாக்கினார், பேசும் பட முன்னோடியான ஏ.நாராயணன். 1935இல் வெளியான அப்படத்தில் ‘ஞான சௌந்தரி’யாக சரோஜினி நடித்தார். சிற்றன்னை அனுப்பிய கூலிக் கொலையாளிகள், ஞான சௌந்தரியைக் காட்டுக்குத் தூக்கிச் சென்று அவரது கைகள் இரண்டையும் வெட்டி எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஞான சௌந்தரியைக் காட்டிலிருந்து காப்பாற்றிவந்து சிகிச்சையளித்து, தன்னுடைய ராணியாக முடிசூட்டி கண்ணெனக் காக்கும் மென்மனம் கொண்ட பக்கத்து நாட்டின் சிற்றரசன் பிலேந்திரனாக சீனிவாச ராவும் நடித்தனர். ‘போட்டோ நாடக’மாக உருவான இப்படம் வெற்றிபெறவில்லை.
அந்தப் படம் வெளியான 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘ஞான சௌந்தரி’ கதையைத் தன்னுடைய முதல் படமாக உருவாக்க முன்வந்தார் ஒரு கேரளத்து இளைஞர். அவர்தான் ஜோஸப் தளியத் ஜூனியர்.
திருவனந்தபுரம் உயர் நீதி மன்ற நீதிபதியாக இருந்தார் தளியத்தின் அப்பா. பி.ஏ.ஹானர்ஸ் முடித்து பட்டதாரி ஆனதும் சினிமா இயக்குநராக வேண்டும் என்கிற தனது விருப்பத்தைச் சொன்னார். கண்டிப்பான தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாக, சினிமாவைக் கற்றுக்கொள்ள சென்னைக்கு வந்தார்.
தமிழ் சினிமா முன்னோடிகளில் ஒருவரான எஸ். சௌந்தர்ராஜனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி ‘ஸ்டுடியோ முறை’ படமாக்கத்தைக் கற்றுக்கொண்டார். முதல் படத்தை உருவாக்க முடிவு செய்தபோது, கலை இயக்குநரும் பின்னாளில், கீழ்பாக்கம் நியூடோன் ஸ்டுடியோவில் தயாரான பல வெற்றிப் படங்களை இயக்கியவருமான எஃப்.நாகூருடன் கூட்டணி அமைத்துக்கொண்டார்.
தன்னுடைய தந்தையின் பாராட்டினைப் பெறும் விதமாக ஒரு திரைப்படத்தை எடுக்க விரும்பிய தளியத், பக்தியும் அறமும் நிறைந்த கதையாக விளங்கிய ‘ஞான சௌந்தரி’யைத் தேர்ந்தெடுத்தார்.
அடிப்படையான நாடகக் கதையை வைத்துக்கொண்டாலும் நாகூரும் தளியத்தும் இணைந்து திரைப்படத்துக்கான கதையை ஜனரஞ்சகமாக எழுதினார்கள். படத்தைத் தயாரிக்க சிட்டாடல் பிலிம் கார்ப்பரேசன் என்கிற பட நிறுவனத்தைத் தொடங்கிய தளியத், நாகூருடன் இணைந்து நியூடோன் ஸ்டுடியோவில் படத்தைத் தயாரித்தார். நாகூர் படத்தை இயக்கினார்.
பானுமதியை ‘டைட்டில் ரோல்’ கதாபாத்திரத்துக்கும் டி.ஆர்.மகாலிங்கத்தை பிலேந்திரன் வேடத்துக்கும் ஒப்பந்தம் செய்துகொண்டு முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார்கள். ஆனால், இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு வராமல் தெலுங்குப் படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தார் பானுமதி. அப்போது அவர் படத் தயாரிப்பாளராகவும் மாறியிருந்ததால், பானுமதியின் ஆளுமையைச் சமாளிக்க முடியாமல் இருவரும் திணறினார்கள்.
பானுமதிக்கு மாற்றாக..
பானுமதியை வைத்துப் படத்தை முடிக்க முடியாது என உணர்ந்துகொண்ட இருவரும் பானுமதிக்கு மாற்றீடாகத் தேர்வு செய்த கதாநாயகிதான் எம்.வி.ராஜம்மா. குப்பி வீரண்ணா நாடக் குழுவில் மேடை நடிப்பைப் பயின்றிருந்த அவர், கர்நாடகத்திலிருந்து முதன்முதலாக வந்து, ‘யயாதி’(1938) படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் கணக்கைத் தொடங்கிய முதல் கன்னடப் பெண்.
அறிமுகப் படம் கேட்பாரற்றுப் போனது. ஆனால் அடுத்த படத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் காத்துக்கொண்டிருந்தது. தமிழ் சினிமாவின் முதல் இரட்டைவேடப் படமான ‘உத்தமபுத்திர’னில் பி.யு. சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றிருந்தார் ராஜம்மா.
‘என்ன ஓர் அழகு! என்ன ஒரு நளினம்! கன்னடப் பெண்ணாக இருந்தாலும் தமிழைச் சுத்தமாக உச்சரிக்கிறாரே!’ என்று வியந்த டி.கே.எஸ். சகோதரர்கள், தங்களது ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தைப் படமாக்கியபோது அதில் ராஜம்மாவைத்தான் கதாநாயகி ஆக்கினார்கள். ஆனால் ராஜம்மாவை புகழின் உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தது 1948இல் வெளியான ‘ஞானசௌந்தரி’.
ஜிக்கி - பி.ஏ.பெரிய நாயகி ஆகியோரின் குழைவான குரலில் இன்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் ‘அருள்தரும் தேவ மாதாவே.. ஆதியே.. இன்ப ஜோதியே’ ஒரு புகழ்பெற்ற பாடல். அதற்குக் காதுகொடுக்கும்போதெல்லாம் அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் மனத்திரையில் ராஜம்மாவின் நிர்மலமான அழகு முகம் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.
சிற்றன்னையின் கொடுமையின்போதும், பின்னர், காப்பாற்றப்பட்ட பிறகு பிலேந்திரனின் பெற்றோர், இரட்டைக் குழந்தைகளோடு மீண்டும் காட்டில் விடும்போதும் அப்படியொரு உருக்கமான நடிப்பைக் கொடுத்த ராஜம்மா, டி.ஆர். மகாலிங்கத்தின் காதலை வெல்லும் காட்சிகளில் அலட்டல் இல்லாத சிருங்கார நடிப்பால் வசீகரித்தார். அவருக்காக எடுத்தப் படம்போல் ஆனது ‘ஞான சௌந்தரி’. அதன்பிறகு தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகள் நடித்தார்.
போட்டி போட்டு உருவான படங்கள்
எம்.வி.ராஜம்மா - டி.ஆர்.மகாலிங்கம் ஜோடியின் ஒத்திசைவு பெரிதும் பேசப்பட்டது. அந்தோணியாக நடித்த புளிமூட்டை ராமசாமி, ஆரோக்கியமாக நடித்த பி.ஆர்.மங்களம் ஆகிய துணை நடிகர்களின் நகைச்சுவை நடிப்புக் கொண்டாடப்பட்டது. ஒரு பாடல் காட்சியில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை உணர்ச்சிகரமாகப் படமாக்கினார் தளியத்.
அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் அயனாவரத்தில் புகழ்பெற்ற ‘பாஸ்கா’ நாடகக் குழுவாக விளங்கியது மதராஸ் கத்தோலிக் மெடிக்கல் கில்ட். அவர்களை அழைத்து அக்காட்சியைப் படமாக்கினார். படம் வெளியானபோது அதுவும் பேசப்பட்டது.
எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் அமைந்த 16 பாடல்கள் வசியம் செய்தன. ஐம்பதுகளில் புகழ்பெற்றிருந்த நாஞ்சில் நாடு டி.என்.ராஜப்பா மக்கள் மொழில் எழுதிய வசனம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது . ஜித்தன் பேனர்ஜியின் ஒளிப்பதிவும் எஃப்.நாகூரின் ஆடை வடிவமைப்பு, கலை இயக்கம், பட இயக்கம் ஆகியவை ஞான சௌந்தரியை பிரம்மாண்டமாகக் காட்டின.
தளியத்தும் எஃப். நாகூரும் ‘ஞான சௌந்தரி’யை தயாரித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் எஸ். எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டுடியோவும் ‘ஞான சௌந்தரி’ கதையை அதே தலைப்பில் தயாரித்தனர். அதில் பி.கண்ணாம்பாவும் டி.ஆர். ராமச்சந்திரனும் முதன்மை வேடங்களை ஏற்றிருந்தனர்.
சிட்டாடலின் ’ஞான சௌந்தரி’ மே 21, 1948இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு மாதம் கடந்தபின், ஜூன் 18, 1948இல் வெளியான ஜெமினியின் ‘ஞான சௌந்தரி’யில் கதாபாத்திரங்கள் அனைவத்தும் செந்தமிழ் வசனம் பேசின. வெளியான மூன்றாம் நாள் படத்துக்கு பார்வையாளர்களின் வருகை அடியோடு குறைந்தது. ‘சிட்டாடல்’ ஞான சௌந்தரி படத்தைப் பார்த்த வாசன், வெளியிட்ட சில தினங்களிலேயே தனது ‘ஞான சௌந்தரி’யைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு அந்தப் படத்தை அவர் வெளியிடவே இல்லை.
மக்கள் படங்களின் இயக்குநர்
‘ஞான சௌந்தரி’யின் வெற்றியைத் தொடர்ந்து, தனது சொந்த ஸ்டுடியோவை கீழ்பாக்கத்தில் நிறுவி அதற்கு ‘சிட்டாடல்’ ஸ்டுடியோஸ்’ என்று பெயரிட்டார். 1950இல் ‘இதய கீதம்’ என்கிற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்தார். அதுவும் வெற்றிபெற, ‘ஜீவா தாரா’ என்கிற பெயரில் இந்தியில் அதை மொழிமாற்றம் செய்து வெளியிட்டு பாலிவுட்டிலும் நுழைந்தார்.
மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி நீதியையும் அறத்தையும் போதிக்கும் பொழுதுபோக்குப் படங்களின் வெற்றிகரமான இயக்குநராகத் தடம் பதித்த தளியத், ‘விஜயபுரி வீரன்’ படத்தின் மூலம் சி.எல். ஆனந்தனையும் ‘இரவும் பகலும்’ படத்தின் மூலம் ஜெய்சங்கரையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
படங்கள் உதவி: ஞானம்
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in