

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் - 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார் உட்படப் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களுடன் இத்திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக 'வீரா ராஜ வீர’ பாடல் திரைப்படக் காட்சியாகக் கவனத்தை ஈர்த்தது. பாடல் வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்; சங்கர் மகாதேவன், கே.எஸ்.சித்ரா, ஹரிணி ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர். இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் உஸ்தாத் வாசிஃபுதின் தாகர் என்பவர் இப்பாடலின் இசை அவருடைய முன்னோர்களின் பாடலிலிருந்து எடுக்கப்பட்டதாகப் புகார் தெரிவித்திருக்கிறார்.
அந்த மூலப் பாடலை தாகர் சகோதரர்கள் ’அடாநா’ ராகத்தில் உருவாக்கியிருந்தனர். ஹிந்துஸ்தானி இசையில் பிரபல இசைக் கலைஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் தாகர் சகோதரர்கள். 1978இல் ஹாலந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியிலும் அந்தப் பாடலை அவர்கள் பாடியுள்ளனர். இந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெறாமல், ரஹ்மான் அதைப் பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தியிருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து அவர் ரஹ்மானுக்குக் கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் குழு பதில் அளித்துள்ளது. அந்தப் பதிலில், 'வீரா ராஜ வீர’ பாடல் 13ஆம் நூற்றாண்டில் நாராயண பண்டிதசாரியால் இயற்றப்பட்ட இசையைத் தழுவி எடுக்கப்பட்டது, இது அனைவருக்கும் பொதுவானது என்கிற வாதத்தை முன்வைத்துள்ளது. மேலும், இப்பாடல் ‘பாரம்பரிய தகர்வணி த்ருபத்’ இசைப்பாணியில் இயற்றப்பட்டது என்பதை திரைப்படத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விளம்பர, லாப நோக்கத்துக்காக உஸ்தாத் வாசிஃபுதின் தாகர் பொன்னியின் செல்வன் படக்குழு மீதும், ரஹ்மான் மீதும் புகார் அளித்திருப்பதாக மெட்ராஸ் டாக்கீஸ் வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் மீது வைக்கப்பட்டிருக்கும் இக்குற்றச்சாட்டு இசை ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நெட்டிசன்கள் காப்பி அடிப்பதும், ஒரு படைப்பைத் தழுவி இன்னொரு படைப்பை இயற்றுவதும் வேறு. ரஹ்மான் தழுவி இயற்றிருப்பார் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தாகர் சகோதரர்களின் பாடல்: