

சு
ட்டுவிரல் அசைவில், ரயிலை வந்தவழியே திருப்பி அனுப்பும் மகா கனம் பொருந்திய கதாநாயகர்களைக் கொண்டது தெலுங்கு சினிமா. பல நேரங்களில் அவர்களது அறிமுகக் காட்சியில், காய்ந்த சருகுகளை அள்ளியிறைத்தபடி எங்கிருந்தோ உள்நுழையும் சூறாவளிப் புயல், அவர்களது காலடியில் அமைதியடையும். உலகமே மாறினாலும் தெலுங்கு சினிமாவின் இதுபோன்ற பிரதாபங்கள் மட்டும் மாறாது என்று நம்பிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தனக்கான அடையாளத்தை அது தேடத் தொடங்கியிருப்பதற்கு சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அசத்தலான சான்று.
கச்சாத்தனம் மிகுந்த கதாபாத்திரங்களைச் சமகால வாழ்க்கைமுறையிலிருந்து எழுதுவதும், அக்கதாபாத்திரங்களின் உணர்வுகளைத் திரிக்காமல் ஒளிக்காமல் உண்மைக்கு மிக நெருக்கமாகத் திரையில் துணிவுடன் சித்தரிப்பதும் ஓர் அசலான சினிமாவுக்கான அடிப்படைத் தேவை என்பதை ‘அர்ஜுன் ரெட்டி’ உணர்த்திவிடுகிறது.
அர்ஜுன் ரெட்டி எனும் கதநாயகனை, அவனது முரட்டுத் தனத்தை, திறமைகளை, உண்மையைப் பிடிவாதமாக நேசிக்கும் அவனது துணிவை, அவனது பலவீனங்களை, அவன் காதலை, பிரிவை, அதன்பின் தன்னை வருத்தி, சீரழித்துக்கொள்வதை, பின் அதிலிருந்து அவன் மீண்டெழுவதை எல்லாம் எவ்விதப் பாசாங்கும் இல்லாமல் நம் முன்னால் வைக்கிறது படம். அர்ஜுனின் வீழ்ச்சி, எழுச்சி மூலம் பார்வையாளர்கள் கற்றுக்கொள்ளவும் கைவிடவும் நிறையவே இருக்கின்றன படத்தில்.
செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தின் இரண்டாவது வாரிசான அர்ஜுன் மருத்துவக் கல்லூரி மாணவன். அங்கே பயில வரும் முதலாண்டு மாணவி ப்ரீத்தி மீது காதல் கொள்கிறான். கல்லூரி வளாகத்தின் முரட்டுக் காதல்போல் முதலில் தோற்றம் காட்டும் அர்ஜுன் – ப்ரீத்தி இடையிலான உறவு, ஒரு தற்காலிகப் பிரிவுக்குப்பின் நீண்ட முத்தங்களோடு தீவிரம் கொள்கிறது. மனங்கள் கலந்த பிறகு உடல்கள் கலப்பதும் அந்தக் காதலர்களுக்கு உறுத்தலாக இல்லை.
அந்த ஆண்டு கல்லூரி முடிந்ததும் ப்ரீத்தியை மணந்துகொள்ளும் விருப்பத்துடன் அவளது வீட்டுக்கு வருகிறான். ஆனால், ப்ரீத்தியின் தந்தையை அர்ஜுனால் சமாதானப்படுத்த முடியாமல் தோற்றுப்போகிறான். அவனது தோல்விக்குக் காதலர்களுக்கு இடையிலான நெருக்கமும் சாதியும் காரணமாகிவிடுகின்றன.
அதன் பிறகு நவயுகத்தின் ‘தேவதாஸ்’ ஆக மாறித் தன்னை வருத்திக்கொள்ளும் அர்ஜுன், எப்படி மீண்டு வருகிறான் என்பதற்கு அவனது உணர்வு நிலைகளையே ஆதாரங்களாகப் பயன்படுத்தி, யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாகக் காட்சிகளை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா.
முதன்மைக் கதாபாத்திரங்கள், அவர்களைச் சுற்றிச் சுழலும் துணைக் கதாபாத்திரங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையில் முதல் காட்சியிலிருந்தே நம்பகத் தன்மையை உருவாக்கிவிடுவதால் பாடல் காட்சிகளின்போது கூடப் பார்வையாளர்கள் கதையோட்டத்திலிருந்து விலக முடியாத அதிசயத்தைப் படம் நிகழ்த்துகிறது.
முத்தக் காட்சிகளிலோ காதலர்கள் உடல்ரீதியாகத் தங்களைப் பகிர்ந்துகொள்ளும் நெருக்கமான காட்சிகளிலோ பார்வையாளர்கள் நெளியவில்லை. அர்ஜுன் -ப்ரீத்தியின் காதலுக்குள் சினிமாத்தனம் என்ற வாசனையை உள்நுழைத்துவிடாமல் நெருக்கமான காட்சிகளைச் சட்டெனக் கடந்துசெல்லும் காட்சிகளாக அமைத்திருக்கிறார் இயக்குநர். அதேநேரம் கதையில் நிகழும் சிறுசிறு திருப்பங்களாக அந்தக் காட்சிகளைக் கையாண்டிருக்கும் உத்தி, நவீன காதல் காவியமாக படம் உருக்கொள்ள உதவியிருக்கிறது.
குத்துப்பாடல், கொண்டாட்டப் பாடல் என எதுவும் இல்லாத இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் கதையின் போக்கைத் தாங்கிப்பிடிக்கும் திரைக்கதையின் ஒரு பகுதியாக மாறியிருக்கின்றன. கதையின் நாயகன் மருத்துவக் கல்லூரி மாணவன் என்பது, பின்னர் அறுவைசிகிச்சை நிபுணராக அவன் பணியாற்றுவது, மருத்துவராக அவன் தகுதியிழப்பது ஆகியவை கதையின் பின்புலத்துக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளன.
அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்குக் கூடுதல் காரணங்களாக அமைந்தவை நட்சத்திரத் தேர்வும் கலைஞர்களின் நடிப்பும். அடங்க மறுக்கும் கோபத்தை, அடங்கிய பின்னான அன்பு கலந்த கெஞ்சலை, உண்மைக்கும் சுதந்திரத்துக்கும் ஏங்கும் புதிய தலைமுறை இளைஞனாக கடைசிவரை இருக்க விரும்புவதை, அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரது நடிப்புக்கு விருது அங்கீகாரங்கள் கிடைக்கலாம். தன்னை எதிர்த்துக்கொண்டேயிருக்கும் முரட்டு மாணவனை அடித்துவிட்டு, பின் அவனுக்கு சிகரெட் பற்றவைத்து சமாதானப்படுத்தி, “ ப்ரீத்தி என் உயிர்டா. அவளுக்கு உன்னால எதுவும் ஆகிடக் கூடாது. பிராமிஸ் பண்ணு” எனக் கைகள் நடுங்கியபடி அவனிடம் கெஞ்சுவது, ப்ரீத்தியின் வீட்டுக்கு முதல்முறை வரும்போது, மொட்டை மாடியில் அவளை முத்தமிடும் தருணத்தில் அங்கே எதிர்பாராமல் அவருடைய அப்பா வந்துவிட, அந்தக் காட்சியைக் கண்டுகொதித்தெழும் அவரிடம், “இது எங்கள் பிரைவேட் ஸ்பேஸ், இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” என்று குரலை உயர்த்தாமல் வாதிடுவது, பாட்டியின் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றும்போது, ஒருவர் “பாடிய பார்த்துத் தூக்குங்க” என்று சொல்ல, “ எவண்டா பாடின்னு சொன்னது..?” என்று சீறுவதுவரை எல்லாக் காட்சிகளிலும் அர்ஜுன் ரெட்டியாக வாழ்ந்திருக்கிறார்.
ப்ரீத்தியாக நடித்திருக்கும் ஷாலினி பாண்டேவின் நடிப்பு மட்டுமல்ல அவரது தோற்றமும் தெலுங்கு சினிமா உருவாக்கி வைத்திருக்கும் ஜிகினா கதாநாயகியின் இலக்கணத்துக்குள் அடங்காத ஒன்று. துணைக் கதாபாத்திரங்களில், அர்ஜுனின் நண்பன் சிவாவாக நடித்திருக்கும் ராகுல் ராமகிருஷ்ணா, வாழ்வின் அசலான தருணங்களில் இயல்பாக எதிர்ப்படும் நகைச்சுவையை வசனங்களால் நிரப்பும்போது, அர்ஜுனின் வலிமிகுந்த போராட்டம் ‘அழுவாச்சி காவியமாக’ மாறாமல், அதை இலகுவானதாக மாற்றிவிடுகிறது.
அர்ஜுனின் பாட்டியாக நடித்திருக்கும் பழம்பெரும் கதாநாயகி ‘காதலிக்க நேரமில்லை’ காஞ்சனா, தலைமுறை இடைவெளியைக் களைந்தெறிந்த முதிர்ச்சியுடன் வருகிறார். அர்ஜுன் பிரிவால் தன்னை வருத்திக்கொண்டு துன்புறும்போது, அர்ஜுனின் நண்பன் சிவாவிடம் “Suffering is personal, Let him suffer” எனும்போது திரையரங்கில் ‘க்ளாஸ்” என்ற கமெண்ட் ஒலிக்கிறது. ‘அர்ஜுன் ரெட்டி’போன்ற படங்கள் அதிகரித்தால் தெலுங்கு சினிமா சீக்கிரமே தன் பழைய அடையாளத்தை உதறித்தள்ளும்.