

அறிமுக இயக்குநர் எம்.ஆர். மாதவன் இயக்கத்தில், கேலக்ஸி பிக்சர்ஸ் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘டைனோசர்ஸ்’. உதய் கார்த்திக் நாயகனாகவும் ‘அட்டு’ படப் புகழ் ரிஷி ரித்விக் இரண்டாம் நாயகனாகவும் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் மிஷ்கின், நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இயக்குநர் ஹெச்.வினோத் சிபாரிசில் இப்படத்தை இயக்கும் வாய்ப்பினை எம்.ஆர். மாதவனுக்கு கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர். வடசென்னையைக் கதைக் களமாகக் கொண்ட ‘கேங்ஸ்டர் காமெடி’ படமாக உருவாகியிருக்கிறது.
திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’! - ‘பாகுபலி’க்குப் பிறகுக் காவியத்தன்மை கொண்ட படம் எதிலும் நடிக்காமலிருந்தார் பிரபாஸ். ஆனால், தற்போது அவர் ராமபிரான் அவதாரத்தில் நடிக்கும் ‘ஆதி புருஷ்’, ஐமேக்ஸ், 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வெளியீட்டுக்கும் தயாராகிவிட்டது. ஓம் ராவத் இயக்கியிருக்கும் இதில் பிரபாஸுடன் இணைந்து கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டி சீரிஸ் - ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டிரிபெகா சர்வதேசத் திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரீமியர் காட்சியாகத் திரையிட ‘ஆதி புருஷ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தோனியின் முதல் படம்! - நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, நடிகர் விஜய் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்களுடன் நெருக்கம் காட்டி வருபவர். அவர் தற்போது மனைவி சாக் ஷியைத் தமிழ்ப் படத் தயாரிப்பாளராகக் களமிறக்கியிருக்கிறார். இதற்காக தோனி என்டர்டெய்ன்மென்ட் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ‘எல்.ஜி.எம்’ என்கிற தமிழ்ப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இதை இசையமைப்பாளரும் இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கி வருகிறார். ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் ‘லவ் டுடே’ புகழ் இவானா நாயகியாகவும் நடித்து வரும் இப்படத்தில், நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். குடும்பச் சித்திரமாக உருவாகிவரும் இப்படத்தின் முதல் தோற்றத்தை எம். எஸ்.தோனி வெளியிட்டிருக்கிறார்.