உலகம் சுற்றும் வாலிபன் 50: நெருக்கடிகளை மீறிய நெத்தியடி!

உலகம் சுற்றும் வாலிபன் 50: நெருக்கடிகளை மீறிய நெத்தியடி!
Updated on
4 min read

உழைக்கும் மக்களின் சினிமா ரசனையை மிக நுணுக்கமாகப் புரிந்துகொண்ட ஓர் உச்ச நட்சத்திரம் தமிழ் சினிமாவில் இருந்தார் என்றால் அவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அமைந்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆவலைத் தூண்டி, அடுத்து எந்தக் கதாநாயகியுடன், எந்த நாட்டில், எப்படிப்பட்ட நிலவெளியில் டூயட் பாடப்போகிறார் என்று எதிர்பார்க்க வைத்த ஒரு படம். அதை எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கியிருந்தார். 60 வயதை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் தன்னை ‘வாலிப’னாக முன்வைக்கும் தன்னம்பிக்கையும் துணிவையும் கொடுத்தவர்கள் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள்.

உலகைச் சுற்றிக் காட்டிய நாயகன்! - இன்று வெளிநாடுகளைச் சுற்றிக் காட்ட யூடியூபில் ‘ட்ராவல் பிளாக்கர்’கள் வந்துவிட்டார்கள். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன் வளர்ந்த நாடுகளின் நிலவெளியை, அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் காட்ட எந்த வாய்ப்பும் இல்லாதபோது, தன்னுடைய ரசிகர்களுக்கு இப்படத்தின் மூலம் எம்.ஜி.ஆர். பல நாடுகளைச் சுற்றிக்காட்டினார்.

எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவில் நெருக்கடி முற்றி, அதிலிருந்து நீக்கப்பட்ட அவர், அ.தி.மு.கவைத் தொடங்கியிருந்த நேரம் அது. வேறொரு கதாநாயகன் என்றால் பயந்து பின்வாங்கி, இருக்கும் இடம் தெரியாமல் ஏதோவொன்றை படமென எடுத்துவிட்டு, அதை வெளியிட அதிகாரத்தில் இருப்பவர்களை அண்டி, மண்டியிட்டிருப்பார்கள்.

ஆனால், சினிமாவின் அனைத்து துறைகளிலும் தனது தொழில்நுட்ப அறிவை விசாலமாக்கி வைத்திருந்த எம்.ஜி.ஆர்., அதுவரையிலான தனது அனைத்துச் சாதனைகளையும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ வழியாக முறியடிக்க விரும்பினார். இதற்காக, ‘எம்ஜியார் பிக்சர்ஸ் கதை இலாகா’வில் அங்கம் வகித்த ஆர்.எம்.வீரப்பன், எஸ்.கே.டி.சாமி, வித்வான் லட்சுமணன் இணைந்து உருவாக்கி எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த கதைதான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

இரட்டை வேடத்துக்காகப் பிறந்தவர்: வெகுஜன வணிக சினிமாவில் கதாநாயகர்களின் இருப்பை, ரசிகர்களிடம் உறுதி செய்வதில் ‘இரட்டை வேடக் கதைக’ளுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. இருப்பினும் இரட்டை வேடக் கதைகளுக்காகவே பிறந்தவர்போல் பொருந்திவிடும் வசீகரம் எம்.ஜி.ஆருக்கு வரம். இதிலும் அண்ணன் - தம்பி என இரட்டை வேடங்கள். தோற்ற மாறுபாட்டுக்கு இதில் சின்ன குறுந்தாடியை மட்டும் பொருத்திக்கொண்டாலும் அண்ண னாகவும் தம்பியாகவும் தனித்தனியே உணர வைத்துவிடுகிறார் எம்.ஜி.ஆர்.

மின்னலை ஆக்க சக்திக்குப் பயன்படுத்த முடியுமா என ஆராய்ச்சி செய்கிறார் விஞ்ஞானியான முருகன் (அண்ணன் எம்.ஜி.ஆர்). ஆய்வின் முடிவில் அது அழிவு சக்தியாக இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அதனால், மனித இனத்துக்குத் தீங்கு வந்து சேர்ந்துவிடக் கூடாது என்கிற ‘உலகைக் காக்கும் நாயக’னுக்கேயுரிய நல்லெண்ணத்துடன் தனது கண்டுபிடிப்புக் குறிப்புகளை அழித்துவிட்டதாக சக விஞ்ஞானிகளை நம்ப வைக்கிறார்.

ஆனால், உலகின் வளர்ச்சிக்கு அது ஒருநாள் உதவக்கூடும் என நம்பி, அதைப் பாதுகாப்பாக ஜப்பானில் ஒரு புத்த ஆலயத்தில், அங்குள்ள பௌத்த குருவிடம் கொடுத்துப் பாதுகாக்கச் சொல்கிறார். பைரவன் என்கிற போட்டி விஞ்ஞானி, இக்கண்டுபிடிப்பின் ரகசியத்தைக் கைப்பற்றிப் பல மடங்கு லாபம் பார்க்கத் திட்டமிடுகிறார். “மக்களுடைய அழிவில் நீங்க வாழ்ந்திடலாம்னு நினைக்காதீங்க.. அந்தப் பணமே உங்களை அழிச்சுடும்” என்று பைரவனுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு தனது காதலி விமலாவுடன் (மஞ்சுளா) உலகம் சுற்றக் கிளம்புகிறார்.

முருகனை வீழ்த்தி, கண்டுபிடிப்பு ரகசியத்தை அடைவதற்காக பைரவனும் அவரது குழுவும் ரகசியமாக அவர்களைப் பின்தொடர்கின்றனர். இப்போது சிங்கப்பூரில் ‘பயோ வெப்பன்’ துப்பாக்கியால் சுடப்படும் முருகன், காதலியைத் தொலைத்துவிட்டுச் சித்த பிரமை பிடித்தவர் போல் ஆகிவிடுகிறார். அவரைக் கண்டுபிடிக்க சிங்கப்பூருக்கு வருகிறார் போலீஸ் சி.ஐ.டியாக இருக்கும் முருகனின் தம்பியான ஜெயராஜ் (தம்பி எம்.ஜி.ஆர்).

அண்ணனின் ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கண்டுபிடித்து, அது பைரவனின் கைக்கு சென்றுவிடாமல் செய்யவும், அவரிடமிருந்து அண்ணனைக் காப்பாற்றவும் தம்பி மேற்கொள்ளும் உலகப் பயணம் எப்படி அமைந்தது, அப்பயணத்தில் தம்பி சந்தித்த பெண்கள் யார், அவர்கள் அவருக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதுதான் கதை.

அழகுணர்வு, நகைச்சுவை, ஆக் ஷன், பிரம்மாண்டம்: முருகனின் செயலாளராக இருந்து ஒரு கட்டத்தில் முருகனையும் பின்னர் அவருடைய தம்பி ராஜுவையும் காதலிக்கும் அழகான வில்லியான லில்லி (லதா), முருகனைத் திருமணம் செய்துகொள்ளக் காத்திருக்கும் விமலா, குடும்பத்தின் வறுமையைத் துடைக்க சிங்கப்பூருக்கு வந்து ‘பார் நடன’ மாபியாவிடம் சிக்கித் துன்புறும்போது தன்னை மீட்கும் ராஜுவின் இதயத்தில் இடம் பிடிக்கும் ரத்னா (சந்திரகலா), கண்ணில் படும் சிறு பொருள்களைத் திருடி, ஆடைக்குள் மறைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்ட மார்க்கண்டேயன் (நாகேஷ்), படம் முழுவதும் பயமுறுத்திக்கொண்டே சிரிக்க வைக்கும் ‘பைரவன்’ (அசோகன்) என்று வெகுமக்கள் நம்பும் அழகுணர்வும் நகைச்சுவையும் மிகுந்திருக்கும்படி படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள், அகண்ட நிலவெளிக் காட்சிகள், ஆடம்பரமான உள்ளரங்கக் காட்சிகள் ஆகியவை இப்படத்தின் பிரம்மாண்டத் தோற்றதுக்கு வலிமை சேர்த்தன.

எம்.எஸ்.விஸ்வநாதன்
எம்.எஸ்.விஸ்வநாதன்

வசூல் குவித்த எம்.ஜி.ஆரின் கலவை: ஹீரோயிசத்தை அதிகமும் முன்னிறுத்தும் எம்.ஜி.ஆர். ‘ஃபார்முலா’ படங்கள் அனைத்திலும் அவர் நன்மையின் குறியீடாக, சாகச இளைஞனாகத் தோன்றுவார். அநீதியைத் தட்டிக் கேட்டு, தீயவர்களை ஒழித்துக்கட்டுவார். திரைக்கதைக்குள் உலவும் அத்தனை இளம் பெண்களும் அவர் மீது மையல் கொள்வர்.

அவரோடு அழகிய நிலவெளிகளிலும் பளபளப்பான கனவு ‘அரங்கு’களிலும் சஞ்சரித்தபடி ஐந்து நிமிடத்துக்குக் குறையாத டூயட் பாடலில் தோன்றுவார்கள். இதற்காகப் புதிய புதிய இளம் நடிகைகளைத் தேர்ந்தெடுத்து தனக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். அவரது இந்தப் ஃபார்முலாவில், சர்வதேசப் பயணக் கதைக் களமாக விரிந்த பிரம்மாண்ட ‘கேன்வாஸ்’தான் ’உலகம் சுற்றும் வாலிபன்’.

ஜப்பானில் நடந்த ‘எக்ஸ்போ 70’ கண்காட்சி, ஜப்பானின் காமகூரா என்கிற நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த ஆலயம், சிங்கப்பூரின் டைகர் பாம் கார்டன், அங்கு அன்றைக்கு மிக உயரமான நட்சத்திர விடுதியாக இருந்த ‘ஸீ வியூ ஹோட்டல்’ ,ஹாங்காங், கோலாலம்பூர் விமான நிலையங்கள், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் என பல நாடுகளில் காட்சிகளைப் படமாக்கியிருந்தார்.

காமகூரா புத்த ஆலயத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளின் படச் சுருள் டப்பாக்கள் சரக்கு விமானத்தில் கொண்டுவரப்படும்போது அவைத் திறந்து கொண்டதில் சில காட்சிகள் ‘எக்ஸ்போஸ்’ ஆகிவிட்டன. அப்போது படத்தின் மொத்த நெகட்டிவும் எரிந்துவிட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. படம் வராது என்றே எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் கதறித் துடித்தனர். ஆனால் எம்.ஜி.ஆர். விடவில்லை.

அந்த புத்தக் கோயிலை அப்படியே அச்சு அசலாக சத்யா ஸ்டுடியோவில் ‘செட்’ போட்டார். ‘எக்ஸ்போஸ்’ ஆன காட்சிகளை அங்கே படம் பிடித்தார். படம் வெளியானபோது எது ‘செட்’டில் படமான காட்சி, எது ஜப்பான் புத்தக் கோயிலில் படமான காட்சி என்பதைத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு கலை இயக்குநர் பி.அங்கமுத்து புத்தக் கோயிலை அமைத்திருந்தார்.

8 பாடல்கள் செய்த மாயம்: ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் படப் பெட்டிகள் திரையரங்குகளைச் சென்று சேரவே முடியாது என்கிற சூழல் உருவாக்கப்பட்டிருந்த நேரத்தில், ஒரு சுவரொட்டிகூட ஒட்டப்படாமல் வெளியானது ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அவ்வளவு அரசியல் நெருக்கடிகளையும் மீறிய எம்.ஜி.ஆரின் நெத்தியடியாக மாறி, அதற்கு முன்பு ‘ரிக் ஷாகாரன்’ செய்திருந்த வசூல் சாதனையை முறியடித்தது.

ஜப்பானிய வெகுமக்கள் இசையில் அங்கமாகிவிட்ட ‘கோட்டோஹார்ப்’, ‘ஷாக்குஹாச்சி ப்ளூட்’, ‘டாய்க்கோ ட்ரம்ஸ்’, ‘ஷாமி சென்பாஞ்சோ’ ஆகிய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, ரசிகர்களை மாயத்தில் ஆழ்த்திய 8 பாடல்களையும் புதுமையான தீம் இசைக் கோவைகளையும் கொடுத்தார் எம்.எஸ்.வி. அவருக்கு, கண்ணதாசன் ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘லில்லி மலருக்குக் கொண்டாட்டம்’, ‘உலகம்... உலகம்’ ஆகிய பாடல்களையும் வாலி ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே’, ’நிலவு ஒரு பெண்ணாகி’, ‘பன்சாயி...’ ஆகிய பாடல்களையும் புலமைப்பித்தன் ‘சிரித்து வாழ வேண்டும்’ பாடலையும் எழுதினார்கள்.

‘நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்’ என்று தொடங்கும் டைட்டில் பாடலை, சீர்காழி கோவிந்தராஜன் பாட, அதை புலவர் வேதா எழுதியிருந்தார். இத்தனை பாடலாசிரியர்களின் கற்பனை வளத்துடன், டி.எம்.எஸ்., கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி.பி ஆகியோரின் குரல்கள் பாடல்களில் குழைய, எம்.ஜி.ஆர். இன்னும் இளமையாகிப் போனார். 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு சில நாள் முன்னதாக வெளியாகி, அவரது கட்சித் தொண்டர்களை உற்சாகத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.இப்போது வெளியானாலும் திரையரங்கில் கூட்டம் நிறையும் ஒரு ‘மெயின் ஸ்ட்ரீம்’ ஆச்சர்யம் இந்த ‘உ.சு.வா’!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in