

தூரிகைப் போராளி என்று போற்றப்பட்டவர் நவீன ஓவியர் வீரசந்தானம். அவரை முதன் முதலில் ‘சந்தியாராகம்’ படத்தில் துணைக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைத்தார் பாலுமகேந்திரா. அவரைக் கதையின் நாயகனாகக் கொண்டு ‘ஞானச்செருக்கு’ என்கிற படத்தை எழுதி, இயக்கியவர் தரணி ராஜேந்திரன்.
சர்வதேசப் பட விழாக்களில் பல விருதுகளையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற அப்படத்தைத் தொடர்ந்து அவர் இரண்டாவதாக இயக்கியுள்ள படம் ‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில், தென்னகம் வென்று ஆட்சி செய்த ரணதீரப் பாண்டியன் வரலாற்றுடன் புனைவை இணைக்கும் இப்படத்தின் உருவாக்கம் ஏற்கெனவே பேசுபொருளாகியிருக்கிறது. இந்நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
பாண்டிய மாமன்னன், கோச்சடையான் ரணதீரன் குறித்து ஒரு வரலாற்றுப் புனைவுப் படம் எடுக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்? - பாண்டியர்களைப் பற்றிய வரலாற்று ஆய்வுகளை அடிப்படையாக வைத்து புனைவுத் திரைப்படங்கள் வருவதேயில்லை. பாண்டியர் வரலாற்றை புனைவுக் கதைகள்தான் எல்லாரிடமும் எடுத்து செல்லும். அதனால் பாண்டியர்களைப் பற்றி எடுக்க நினைத்தேன். என் கதைக் களத்துக்கு ரணதீரன் பொருத்தமாக இருந்தான்.
‘எய்னர்கள்’ என்போரைப் பாலை நிலக் குறுங்குடிகளாகவும் போர்த்தொழில் பழகியவர்களாகவும் வரலாறு காட்டுகிறது. அந்த இனக் கூட்டத்திலிருந்து எதிர் கதாநாயகனை உருவாக்க என்ன காரணம்? - பாலை நில மாந்தர்கள் தான் இக்கதைக்குத் தேவைப்பட்டார்கள். நம் நிலத்தில் செழுமையான பகுதிகள் நிறையவே உண்டு.
ஆனால் ’எய்னர்’கள் ஏன் பாலை நிலத்தில் வசிக்க வேண்டும்? இந்தக் கேள்வி, அவர்கள் போரால் வீழ்ந்து நாடோடி சமூகமாகியிருக்கக்கூடும் என எண்ணத் தோன்றியது. வீழ்த்தப்பட்டவர்களின் சமூகத்திலிருந்து ஒருவன் அதிகாரத்தை அடைய வேண்டும் என நினைக்கிறான். அவன்தான் ரணதீரனை எதிர்த்து நிற்கும் ‘கொதி’ என்கிற அக்கதாபாத்திரம்.
வரலாற்றுடன் புனைவைக் கலக்கும்போது எதிர்கொண்ட சவால் என்ன? ஆய்வுக்கும் திரைக்கதை எழுதவும் எவ்வளவு காலம் தேவைப்பட்டது? சங்க காலச் சொற்களை உரையாடலில் பயன்படுத்தியது ஏன்? - வரலாற்றுப் படமாக இருந்தாலும் அதற்குப் புனைவே அடிப்படைத் தேவையாக இருக்கிறது. உதாரணமாகப் போர்க் காட்சிகளை எடுத்துக்கொண்டால், ஓர் அரசன் இன்னொரு அரசனை வென்றான் என பதிவுகள் இருக்கின்றன.
ஆனால், ஏழாம் நூற்றாண்டில் போர்க் களங்கள் எவ்வளவு உக்கிரமாக இருந்தன என்பதற்கு அவ்வளவாகப் பதிவுகள் இல்லை. அதைக் காட்சிமொழியில் கொண்டு வர புனைவு அவசியமாகிப்போனது.
இந்தக் கதைக் களத்துக்கான ஆய்வுக்கும் திரைக்கதைக்கும் ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. சங்கத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தக் காரணம், அந்தக் காலகட்டத்தின் உணர்வையும் உண்மைத் தன்மையையும் கொடுக்க எடுத்த முயற்சிதான். இந்த முயற்சி, படமாகப் பார்க்கும்போது நல்ல அனுபவமாக இருக்கும். புதிய முயற்சியை ரசிகர்கள் எப்போதும் ஏற்று ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கைதான்.
ஏழாம் நூற்றாண்டைச் சித்தரிக்க ‘புரொடக் ஷன் டிசைன்’, கலை இயக்கம் ஆகியவற்றுக்கு எவ்வளவு காலமும் உழைப்பும் தேவைப்பட்டன? எங்கெல்லாம் படமாக்கீனீர்கள்? - தொடக்கத்திலிருந்து மொத்தமாக மூன்று ஆண்டுகள் வேலைகள் நடந்தன. ஐந்து கட்டமாகப் படப்பிடிப்புக்குப் போனோம். ஒவ்வொரு கட்டப் படப்பிடிப்புக்கு முன்னரும் துல்லிமான முன் தயாரிப்புடன் சென்றோம். தேனி, கம்பம், செஞ்சி, காஞ்சிபுரம், உடையார்பாளையம், கொல்லி மலை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.
ஒரு வரலாற்றுப் புனைவுத் திரைக்கதையுடன் தயாரிப்பாளரைத் தேடி அடைந்த அனுபவம் எப்படி இருந்தது? - தயாரிப்பாளரை அணுகுவதற்கு முன்பே என்னுடையத் தொழில்நுட்பக் கலைஞர்கள் குழுவைப் பலமாக அமைத்துக்கொண்டேன்.
தயாரிப்பாளரிடம் கதையாகச் சொல்லும்போது அவர் புரிந்துகொண்டு பாராட்டினாலும் அதை எங்கள் குழு காட்சியாக எப்படிக் கொண்டு வருவோம் என்கிற கேள்வி இருந்தது. நாங்கள் கொல்லிமலை முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்து அந்தக் காட்சிகளைக் தயாரிப்பாளருக்குக் காட்டினோம்.
அப்போது எங்கள் குழு மீது முழு நம்பிக்கை வைத்தார். தயாரிப்பாளர் தந்த தாராளமும் வைத்த நம்பிக்கையாலும்தான், மொழி, ஆடை வடிவமைப்பு, படப்பிடிப்புத் தளம், ஆயுதங்கள் இப்படி எல்லா விதத்திலும் உருவாக்கத்தின் தரம் உயர்ந்தது. ஏழாம் நூற்றாண்டை ரசிகர்கள் உணரும்படி செய்யும் இந்தக் கூட்டு முயற்சியில் எங்கள் குழு கடின உழைப்பைக் கொட்டியிருக்கிறது.
‘ஞானச்செருக்கு’ திரைப்படம் உங்களுக்குக் கொடுத்த ஞானம் என்ன? - ‘ஞானச்செருக்கு’ தான் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. திரையுலகை எதிர்கொள்வதற்கான துணிவைக் கொடுத்தது.