

‘சட்டம் என் கையில்’(1978) படத்தில் அறிமுகமாகி 45 ஆண்டுகளாக 250 படங்களைக் கடந்து தனது திரைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார் ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ். கடந்த ஆண்டு, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘வீட்ல விசேஷம்’, ‘பிரின்ஸ்’, ‘லவ் டுடே’ என அரை டஜன் வெற்றிப் படங்களில் அழுத்தமான குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் வந்து அசரடித்தார். தற்போது அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘தீர்க்கதரிசி’. அதையொட்டி அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.
45 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? - இப்போதுதான் நடிக்க வந்த மாதிரி இருக்கிறது. நான் சிவாஜி சாருடன் ‘புதிய வானம்’ படத்தில் நடித்தபோது அவர் சொன்னார், “டேய்.. இப்போதான் ‘பராசக்தி’யில நடிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள அந்தப் படம் வந்து 35 வருசம் ஆகிப்போச்சா?” என்று ஆச்சர்யப்பட்டார். அப்படித்தான் நானும் உணர்கிறேன்.
டி.என்.பாலு இயக்கி, தயாரித்து, கமல் - ஸ்ரீப்ரியா நடித்த ‘சட்டம் என் கையில்’ படத்தில் விக்கி என்கிற வில்லன் ரோலில் நடித்தேன். சின்ன கேரக்டர்தான் என்றாலும் அறிமுகமே அசத்தலாக அமைந்தது. பெரிய லட்சியத்தோடெல்லாம் நான் சினிமாவுக்குள் வரவில்லை.
‘மாடி வீட்டு ஏழை’ என்று சொல்வார்கள் இல்லையா? ஒரு கட்டத்தில் எங்கள் குடும்பத்தில் அப்படியொரு நிலைமை. அப்போது ‘அன்னக்கிளி’ படப்பிடிப்புக்காக சிவகுமார் அண்ணன் ஈரோடு அருகேயுள்ள பண்ணாரிக்கு வந்திருந்தார். அங்கே அவரைச் சந்தித்தபோது உற்சாகப்படுத்தினார். அவர் இருக்கும் தைரியத்தில் சென்னை வந்து சினிமாவில் சேர்ந்து முதலில் புரொடக் ஷன் மேனேஜர் வேலைதான் பார்த்தேன்.
பின்னர்தான் நடித்துப் பார்க்கலாம் எனத் தோன்றியது. இப்போது இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். நடிகர் திலகம் நமக்கு எவ்வளவு பெரிய சொத்து! அவரிடம் கேட்டபோது சொன்னார், “நான் பெரியார் வேடத்தில் நடித்துவிட வேணும்டா” என்று. அந்தப் பெரியார் கதாபாத்திரத்திலும் நடித்துவிட்டேன். இதற்குமேல் என்ன வேண்டும்!
‘பாகுபலி’ படத்தின் அடையாளம் எதுவும் இருக்கக் கூடாது என்றுதான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மணி ரத்னம் உங்களைத் தவிர்த்தாரா? - இல்லை. என்னுடைய கால்ஷீட் தேதிகள் ஒத்துவரவில்லை. ‘நண்பன்’ படம் வெளியான சமயத்தில் மணி ரத்னம் ‘பொன்னியின் செல்வ’னைத் திட்டமிட்டார். விஜய், மகேஷ் பாபு நடிக்க இருந்தனர். அதில் பெரிய பழுவேட்டரையராக நடிக்க நான்தான் அவருடைய முதல் தேர்வாக இருந்தேன்.
ஐஸ்வர்யா ராயை காதலித்து, நடிப்பது கைநழுவிப் போய்விட்டதே? - அது என்ன பிரமாதம்! ‘நடிகன்’ படத்தில் மனோரமா ஆச்சிக்கு ஜோடியாக நடித்ததையே நான் பெருமையாக நினைக்கிறேன். எப்பேர்பட்ட ஒரு நட்சத்திரம்! அதில் குஷ்பு, ஆச்சி இருவரையுமே காதலிக்கும் எனது கதாபத்திரம் எப்படிப்பட்டது! அதில் நான், ஆச்சியம்மா, கவண்டமணி அண்ணன், இயக்குநர் வாசு நால்வரும் சேர்ந்து ஒரு ஐபிஎல்லே ஆடியிருப்போமே..!
போலீஸ் ஹீரோயிசப் படங்களுக்கு வலிமை சேர்த்தவர் நீங்கள். ஆனால், ‘ஜெய் பீம்’, ‘ரைட்டர்’, ‘விடுதலை’ என்று காவல் துறையை தமிழ் சினிமா அணுகத் தொடங்கியிருக்கும் விதம் மாறிவிட்டதே? - மலையாளத்தில் இந்தப் போக்கு சத்யன் மாஸ்டர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. இப்போது நமக்கான காலம். இந்திய சினிமாவே நமது யதார்த்தப் படங்களைத் திரும்பிப் பார்க்கிறது. இதை மதிக்கிறேன். இந்தத் தலைமுறை இயக்குநர்களைப் பார்த்து வியக்கிறேன்.
‘தீர்க்கதரிசி’ படத்தில் ஏற்றுள்ள கதாபாத்திரம் பற்றிக் கூறுங்கள்.. பி.ஜி.மோகன் - எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்கியிருக்கிறார்கள். பி.சதீஷ்குமார் திரைக்கதை எழுதி, படத்தைத் தயாரித்திருக்கிறார். இதுவொரு கமர்ஷியல் படம். என்னுடன் அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், ஆடுகளம் நரேன், பூர்ணிமா பாக்யராஜ், தேவதர்ஷினி என முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தொலைபேசி அழைப்புகள், அவற்றுக்குக் காவல் துறையினர் எப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதுதான் கதைக் களம். ‘ட்ரேஸ்’ செய்ய முடியாத ஒரு தொலைபேசி அழைப்பு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதில், எதிர்வரும் நாள்களில் நடக்க இருப்பதை ஒருவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் சொல்பவை அனைத்தும் நடக்கின்றன.
அவர் யார் என்பது திரைக்கதையின்படி ஆடியன்ஸுக்குத் தெரியும் ஆனால், மற்ற கதாபாத்திரங்களுக்குத் தெரியாது. தீர்க்கதரிசிகள் வாழ்ந்ததாகவும் அவர்கள் சொல்லிச் சென்றவற்றில் பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் சொல்வார்கள். நான் ஏற்றுள்ள தீர்க்கதரிசி கதாபாத்திரம் இன்றைய நவீன வாழ்க்கையுடன் தொடர்புடையது.
இது ஒரு ஆக் ஷன் த்ரில்லர். கிருஷ்ணன் - பஞ்சு, தேவராஜ் - மோகன், திருமலை - மகாலிங்கம், பாரதி - வாசு, தொடங்கி இன்றைய புஷ்கர் - காயத்ரி வரை பல இயக்குநர் இணைகள் தமிழ் சினிமாவில் சாதித்திருக்கிறார்கள். மோகன் - சுந்தரபாண்டியும் சாதிப்பார்கள் என்பதை ரசிகர்கள் படம் பார்த்த பின் சொல்வார்கள்.
நீங்கள் ஒரு பகுத்தறிவுவாதி. இப்படியொரு கதாபாத்திரத்தில் எப்படி? - அப்படிக் கொள்கை பார்த்து நடித்திருந்தால் நான் பத்துப் படங்களில்தான் நடித்திருக்க முடியும். எம்.ஆர்.ராதா எத்தனை பெரிய பகுத்தறிவுவாதி! அவர் நடிக்காத பக்திக் கதாபாத்திரங்களா? இந்தப் படத்தில் நான் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசியா, இல்லையா என்பதைச் சித்தரித்த விதம்தான் இந்தக் கதாபாத்திரத்தை நான் ஏற்று நடிக்கக் காரணம்.
‘நூறாவது நாள்’ படத்தின் கதையைக் கேட்டு வியந்ததுபோல் இதையும் கேட்டு வியந்தேன். அந்தப் படத்தில் நளினிக்கு நடக்கவிருக்கும் சம்பவங்கள் எல்லாம் டெலிபதி மூலம் தெரியவரும். அப்படி அவருக்கு டெலிபதியாகத் தெரியும் காட்சிகள் எப்படி நடக்கப்போகின்றன என்பதைக் காட்சிப்படுத்தியதில்தான் எனது நண்பர் மணிவண்ணன் இயக்குநராக ஜெயித்தார்.
அப்படித்தான் இந்தப் படத்தில் என்ன நடக்கப்போகிறது என்று எனது கதாபாத்திரம் சொன்னாலும் எப்படி நடக்கப்போகிறது என்பதை இயக்குநர்கள் சித்தரித்துள்ள விதம் ரசிகர்களை ஈர்க்கும்.
உங்கள் நண்பர் மணிவண்ணன் இல்லாத வெற்றிடத்தை உணர்கிறீர்களா? - நிறைய.. கட்சித் தலைவர்களே ஒருவரை ஒருவர் ‘அமைதிப்படை அமாவாசை’ என்று கூறி கிண்டல் செய்துகொள்கிறார்கள். ‘அமைதிப்படை’ அரசியல் பகடி வகைப் படத்துக்கு இன்று வரை ஒரு ‘லேண்ட் மார்க் பிலிம்’. யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ பார்த்து ரசித்தேன்.
அதுவொரு வகை. ஆனால், ‘அமைதிப்படை’யின் பகடியை நினைவூட்ட இதுவரை ஒரு படம்கூட வரவில்லை. இன்னொன்றையும் நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்; இன்றைக்கு ‘பொலிட்டிகல் சட்டயர்’ அனைத்தும் சமூக ஊடகங்களில் காணொளிகளாக வந்துவிடுகின்றன.
மீண்டும் வில்லனாக ஒரு படத்தில் நடிக்கும் எண்ணம் இருக்கிறதா? - நிச்சயமாக இருக்கிறது. ஆனால், அதற்கான சூழல் தற்போது சினிமாவில் இல்லை. கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் எல்லாம் வளர்ந்துவிட்டதால், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஹீரோயிசக் காட்சிகளை வடிவமைக்கிறார்கள். நான் ‘சர்காஸ்டிக்’ வில்லன் கதாபாத்திரங்களுக்காக அறியப்பட்டவன். இப்போதைய அதீத ஹீரோயிசத்தில் வில்லனாக நடிப்பவர்கள் பலிகடாவாகத்தான் தோன்ற முடியுமே தவிர, நாம் திருப்பிப் பந்து வீச முடியாது.
தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி.. எப்போதும்போல் தமிழில்தான் அதிகமாக நடித்துக்கொண்டிருக்கிறேன். மலையாளத்தில் ரசூல் பூக்குட்டி இயக்கும் ‘ஒட்டா’ என்கிற படத்தில் நடிக்கிறேன். ஒரு இந்திப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். இப்போதைக்கு வேறு தெலுங்குப் படங்கள் எதுவும் இல்லை.