கலைதான் எங்களை இணைத்தது! - ஸ்ருதி ஹாசன் நேர்காணல்

கலைதான் எங்களை இணைத்தது! - ஸ்ருதி ஹாசன் நேர்காணல்
Updated on
3 min read

சிரஞ்சீவியுடன் ‘வால்டர் வீரைய்யா’, பாலகிருஷ்ணாவுடன் ‘வீரசிம்ஹா ரெட்டி’ என இரண்டு தெலுங்குப் படங்களின் ‘பிளாக் பஸ்டர்’ வெற்றியை ஆண்டின் தொடக்கத்திலேயே ருசித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். தற்போது ’கே.ஜி.எஃப்’ பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

பல மொழிகளில் உருவாகும் இதன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களைச் சந்திக்க வருகிறார். “ஆயிரமிருந்தாலும் நான் சென்னையின் செல்லப் பெண்.. இது எனக்குச் சிறந்த பால்யத்தைக் கொடுத்த ஊர். இதை எப்படி நான் மறக்கமுடியும்!” எனும் மும்பைவாசியாகிவிட்ட ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

மும்பையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டீர்கள். உங்களுடைய அம்மாவின் ஊர் என்பது காரணமா? அல்லது உங்களுடைய காதலர் சாந்தனு ஹசாரிகாவின் ஊர் என்பதாலா? - சாந்தனுவின் சொந்த ஊர் குவாஹாட்டி. சென்னைதான் எப்போதும் எனக்குச் சொந்த ஊர். சின்ன வயதில் கோடை விடுமுறைக்கு வந்தபோவதாகட்டும், பிறகு பெற்றோர் பிரிந்த பிறகாகட்டும், நாங்கள் மும்பைக்குத்தான் வந்தோம். அம்மாவுடைய ஊர் என்பது இயற்கையாக அமைந்த தொடர்பு.

என்றாலும் அங்கே அதிக நாள்களைச் செலவிடத் தொடங்கியபின், மும்பை வாழ்வதற்கான ஒரு மனநிலையை உருவாக்கித் தந்துவிட்டது. தற்போது, தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலுமே மகிழ்ச்சி வழிந்தோடும் நிறைவான அத்தியாயங்களைக் கொண்ட வாழ்க்கையை அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

உங்களையும் சாந்தனு ஹசாரிகாவையும் எது இணைத்தது? - கலைதான் எங்களை இணைத்தது. சாந்தனு என்னைவிடப் பத்து மடங்கு தோழமை உணர்வு கொண்டவர். உயிர்மநேயம் மிக்கவர். அவர் தனது ‘கிளாரா’ என்கிறச் செல்லப் பூனையின் முகத்தை கையில் பச்சை குத்தி வைத்திருக்கிறார். தன் காதலியின் பெயரையோ உருவத்தையோ அல்ல. பல விதங்களில் இருவருமே ‘பேக் பெஞ்ச்’ மாணவர்களாக உணர்ந்தோம். அது இன்னும் எங்களை நெருக்கமாக்கியது.

தெலுங்குத் திரையுலகில் விட்ட இடத்தைப் பிடித்து விட்டீர்களா? - எனது இடம் அங்கே அப்படியேதான் இருந்தது, இருக்கிறது. பெருந்தொற்றின் முடக்கத்தில் இருந்தபோது அந்த இரண்டு ஆண்டுகளில் நான் அதிக நாள்கள் நடிக்கவில்லை. அப்பா - அம்மாவின் பேச்சைக் கேட்டு நல்லப் பிள்ளையாக, நான் உண்டு, என் இசை உண்டு என இருந்தேன். அதற்கு முன்பே தமிழில் நடித்ததுதான் ‘லாபம்’. பிறகு அமேசன் இந்தி இணையத் தொடர், தெலுங்குப் படங்கள், ‘சலார்’ என்று பிசியாகவே நடித்துக்கொண்டிருக்கிறேன்.

‘சலார்’ படத்தில் நடித்து முடித்து விட்டீர்களா? - ஆமாம்! எனது காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டன. ஆத்யா என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறேன். இன்னும் ‘டப்பிங்’ பேசவில்லை. தென்னிந்திய சினிமாதான் இன்று இந்திய சினிமாவை ஆள்கிறது. இந்தியா என்பதைக் கடந்து உலகச் சந்தையையே மிரள வைத்துக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ‘கே.ஜி.எஃப்’ படத்தில் கதை சொன்ன முறைக்காகவும் அதன் காட்சியாக்கத்துக்காகவும் பெயர் பெற்றிருக்கிறார் பிரசாந்த் நீல். அவர் ‘சலார்’ மூலம் ‘கே.ஜி.எஃபை’ தாண்டிச் செல்ல முயன்றிருக்கிறார். இது ஏதோ புகழ் வார்த்தைகளுக்காக அல்ல. அதில் ஒரு முக்கிய அங்கம் என்பதால் சொல்கிறேன்.

உங்கள் தந்தையர் வயதுடைய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? - ஒரு தலைமுறைக்கு முந்தைய கதாநாயகிகளிடம் முதலில் கேட்டுவிட்டு, பிறகு என்னிடம் வாருங்கள். அதேபோல், இந்தக் கேள்வியை மூத்த கதாநாயகர் களைப் பார்த்தும் கேட்டுவிடுங்கள். இங்கே இது நடைமுறையில் இருப்பதுதானே? நான் மட்டும் இதில் மாறி என்ன செய்யட்டும்? இது எதிர்காலத்தில் மாறும் என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான்.

‘தி ஐ’ (The Eye) என்கிற ஹாலிவுட் படத்தில் கதாநாயகியாக நடிப்பதாகச் செய்திகள் வெளியானதே? - ஆமாம். நடித்து முடித்துவிட்டேன். மிகச்சிறந்த கதை. அதைவிட ஆச்சரியம்! தயாரிப்பாளர், இயக்குநர், கதாசிரியர் தொடங்கி முழுவதும் பெண்களால் நிறைந்த படக்குழுவுடன் பணி புரிந்ததை மறக்க முடியாது. காதல், திருமணம், இழப்பு, வலி என ஒரு பெண் தனது வாழ்க்கையின் பயணத்தில் மகிழ்ச்சி, துன்பம் என இரண்டையும் அடுத்தடுத்து எதிர்கொள்வதே கதை. இதையொரு ‘மெயின் ஸ்ட்ரீம்’ படம் என்று சொல்ல முடியாது. ஒரு சுயாதீனப் படம். ஆனால், என்னுள் இருக்கும் திறமையை எனக்கு அடையாளம் காட்டியுள்ள படம் என்பேன்.

சர்வதேச சுயாதீன இசையுலகில் ஒரு நட்சத்திரம் ஆக வேண்டும் என்கிற லட்சியத்திலிருந்து பின் வாங்கி விட்டீர்களா? - இல்லவே இல்லை. அதற்கு நான் அமெரிக்கா விலேயே இருக்க வேண்டும். ஏனென்றால் சர்வதேச சுயாதீன இசையுலகம் அமெரிக்கா, ஐரோப்பாவை மையமாக வைத்துத்தான் இயங்குகிறது.

இசை ஆர்வலர்களும் நாம் எங்கிருந்து இயங்குகிறோம் என்பதைக் கவனித்தே நம்முடன் தொடர்பில் வருகிறார்கள். தற்போது நான் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். ஒரே நேரத்தில் இரட்டைப் பயணம் சாத்தியமில்லை. இருப்பினும் எனது சர்வதேச ஆல்பங்கள் வந்துகொண்டே இருக்கும்.

அப்பா உங்களுக்கும் நீங்கள் அப்பாவுக்கும் செய்ய நினைக்கிற, திட்டமிட்டுள்ள விஷயம் என்று ஏதாவது இருக்கிறதா? - பரஸ்பர மதிப்பும் பாசமும் மட்டும்தான். எனக்கு உதவியோ, அறிவுரையோ தேவைப்பட்டால் அப்போது நான் அப்பாவைத்தான் முதலில் தொடர்பு கொள்வேன். இன்று நான் சுயமாக, சொந்த உழைப்பில் வாழ்கிறேன் என்றால் அதற்கு அப்பாவிடமிருந்து பெற்ற ஞானம்தான் காரணம். திறந்த புத்தகமாக இருக்கவும் அவரே எனக்கு ரோல் மாடல்.

கரோனா காலத்தில் ‘மனப் பதற்றத்தால் (Anxiety) கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும்’ என்று சொன்னீர்கள் நினைவில் இருக்கிறதா? -

வ்வ்வ்வ்மறக்கவில்லை. அவ்வளவு மோசமான காலகட்டம் அது. நானே அப்போது மனப் பதற்றம் அடைந்திருந்தேன். அப்போது வசதியிருப்பவர்கள் அனைவரும் மருத்துவரிடம் சென்று, மருந்து உட்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள். நான் அவ்வாறு செய்யவில்லை. அப்பாவுடன் அம்மாவுடன் தங்கையுடன் நண்பருடன் உரையாடியதன் வழியாக ‘ஆன்சைட்டி’யிலிருந்து விடுதலை பெற்றேன்.

அது எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் வரலாம். குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு மருந்து உட்கொள்ளாமல் மனநல ஆலோசனையின் வழியாக சிகிச்சை கொடுக்கும் ஒரு தன்னார்வ அமைப்பை எதிர்காலத்தில் தொடங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in