

மாமன்னன் ராஜராஜ சோழனின் வரலாற்றைத் தொட்டுக்கொண்டு, சுவாரஸ்யப் புனைவாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படைத்தார் கல்கி கிருஷ்ணமூர்த்தி. அந்நாவல் தொடராக வெளிவந்த 1954 இல் பெற்ற வரவேற்பு, பின்னர், புத்தகமாகப் பல பதிப்புகள் கண்டு, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி, இன்னமும் விற்றுக்கொண்டிருக்கிறது. பிறகு, ஆங்கில மொழிபெயர்ப்பு, மேடை நாடகம் என மேலும் நகர்ந்தது.
புத்தாயிரத்தில் பாம்பே கண்ணன் குழுவினரால் உயர்தர ஒலிப் புத்தகமாக (2013) வெளியாகி இளைய தலைமுறையினரையும் கவர்ந்து, கடந்த 69 ஆண்டுகளாகத் தமிழ் வாழ்க்கையில் தொடர்ந்து பயணித்து வருகிறது. அந்த நாவலை வாசித்த, கேட்ட அவ்வளவு பேரையும் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படத்தின் மூலம் திருப்திப்படுத்தியிருந்தது மணி ரத்னம் தலைமையிலான படக் குழு. அதன் இரண்டாம் பாகத்தையும் காணத் தயாராகி விட்டார்கள் ரசிகர்கள்.
ஆனால், வந்தியத் தேவனும் நந்தினியும் ரவிதாசனும் இல்லாத ராஜராஜசோழனின் வரலாறு, பிரம்மாண்டத் திரைப்படமானதை மறந்துவிட்டோம். அவர், தஞ்சை பிரகதீஸ்வரர் பேராலயத்தைக் கட்டி முடித்து குடமுழுக்கு செய்த வரலாற்றை முன்னிலைப்படுத்தி உருவான அந்தப் படம் ‘ராஜராஜ சோழன்’. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் 31.03.1973இல் வெளியானது.
ராஜராஜ சோழனின் ஆட்சியும் வாழ்வும் பிரம்மாண்டமானது என்பதைக் காட்டுவதற்காக, தென்னிந்தியாவின் முதல் ‘சினிமாஸ்கோப்’ வண்ணப் படமாக அதைத் தயாரித்தார் ஜி. உமாபதி. சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்றிருந்த ஆனந்த் திரையரங்கின் உரிமையாளர். சென்னையின் முதல் 70 எம்.எம். அகலத் திரையாக தனது திரையரங்கை உருவாக்கியவர். மணி ரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் வில்லனாக வந்தாரே அவரேதான்.
நடிகர் திலகம் கொடுத்த சாயல்! - செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, கொடி காத்த குமரன், கட்டபொம்மன் போல் நாம் காணாத வரலாற்று நாயகர்களை நடிப்பின் வழியாக நமக்குக் காட்டியவர் நடிகர் திலகம். அந்த வரிசையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜராஜ சோழன் இப்படித்தான் இருந்திருப்பார் என்று தனது கம்பீரமான நடிப்பால் நம்ப வைத்தார் இந்தப் படத்தில்! உரையாடலை அதிகம் நம்பியிருந்த திரைக்கதை என்றபோதும், நடிகர் திலகம், தனது உடல்மொழியின் மீது நடிப்பை நிலை நிறுத்தி, அதில் மிகை வெளிப்பாட்டினைக் கட்டுப்படுத்திக் காட்டிய படங்களில் இது முக்கியமான படைப்பு.
குடி மக்கள் மீது ராஜராஜன் கொண்டிருந்த அக்கறை, அவரது சிவ பக்தி, எதிரிகளை மன்னிக்கும் தமிழரின் மாண்பை அவர் கடைப்பிடித்த விதம், எதிரிகளைக் கையாண்ட ராஜதந்திரம், கலப்பு மணத்தை மனத் தடையின்றி ஆதரித்தவர் எனத் திரைக்கதை நெடுகிலும் ராஜராஜனின் புகழ்க் கொடியைப் பறக்க விட்டிருந்தனர் திரைக்கதையை இணைந்து எழுதியிருந்த அரு.ராமநாதனும் இயக்குநர் ஏ.பி.நாகராஜனும்.
உலகைக் கலக்கிய நாடகம்! - டி.கே.எஸ்.சகோதரர்கள் 1945இல் நாடக ஆசிரியர்களுக்காக நடத்திய நாடகப் போட்டியில் அரு.ராமநாதன் என்கிற 20 வயது இளைஞர் எழுதிய ‘ராஜராஜ சோழன்’ நாடகம் இரண்டாம் பரிசு பெற்றது. அரு.ராமநாதன் தான் பின்னாளில் ‘வீரபாண்டியன் மனைவி’ என்கிற புகழ்பெற்ற வரலாற்றுப் புதினத்தைப் படைத்தார். மேடைக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்துகொண்ட டி.கே.எஸ். சகோதரர்கள், ‘ராஜராஜ சோழன்’ நாடகத்தை 1955இல் அரங்கேற்றினார்கள்.
டி.கே.சண்முகம், ராஜராஜனாகவும் சண்முகத்தின் சகோதரர் பகவதி, ராஜேந்திரனாகவும் நடித்தனர். தமிழ்நாடெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்று 1500 காட்சிகள் நடத்தப்பட்டன. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் மட்டும் 500 காட்சிகள்! திருச்சியில் நடத்தப்பட்ட ஒரு காட்சிக்கு வருகை தந்து தலைமை வகித்துப் பாராட்டினார் ஈ.வெ.ரா.பெரியார்.
அனுமதி மறுப்பும் பிரம்மாண்ட அரங்கும்! - அதைத்தான் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தார் திரையரங்க அதிபர் உமாபதி. தஞ்சை பெரிய கோயில் வளாகத்திலேயே படமாக்க வேண்டும் என அவர் முயன்றபோது, மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. அதற்காகவெல்லாம் அவர் பின்வாங்கவில்லை. கலை இயக்குநர் கங்காவை நம்பினார்.
சென்னையின் சாலிகிராமத்தில் இருந்த வாசு ஸ்டுடியோவில் தஞ்சைப் பெரிய கோவில் செட், நந்தி சிலையுடன் பிரம்மாண்டமாகப் போடப்பட்டது. பிரசாத் ஸ்டுடியோவில் அரண்மனை உள்ளரங்கக் காட்சிகளுக்கான செட்கள் போடப்பட்டன. கோட்டை செட், வீனஸ் ஸ்டுடியோவில் போடப்பட்டது. தமிழ் சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் என்று முடிவானதும் படத்தின் ஒளிப்பதிவாளர் டபிள்யூ ஆர். சுப்பா ராவ் மும்பை சென்றார்.
அங்கிருந்த டுவெண்டியத் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தில் ‘சினிமாஸ் கோப்’பில் படம்பிடிப்பதற்கான தொழில்நுட்பக் காப்புரிமை அனுமதியைப் பெற்றுக்கொண்டார். அன்றைக்கு ஒரு சில திரையரங்குகளைத் தவிர, சினிமாஸ்கோப் திரையிடுவதற்கான 70 எம்.எம் லென்ஸ் கிடையாது.
இதை மனதில் கொண்டு 35 எம்.எம்.கேமராவிலேயே ‘கம்பிரெஸ்’ முறையில் சினிமாஸ்கோப்பாக படமாக்கினார் சுப்பா ராவ். வெளியீட்டின்போது, படத்தை சினிமாஸ்கோப்பில் திரையிட, படம் ரிலீஸான 115 திரையரங்குகளுக்கு தயாரிப்பாளரே ‘அடாப்டர்’ லென்ஸையும் வாங்கிக் கொடுத்து தொழில்நுட்ப சவாலை எதிர்கொண்டார்.
அசத்திய கலைஞர்கள்! - ராஜராஜனாக சிவாஜியின் தோற்றமும் நடிப்பும் படத்தின் ஆன்மாவாக அமைந்தன என்றாலும் அவரது மகன் ராஜேந்திரனாக சிவகுமார், மகள் குந்தவையாக லட்சுமி, ராஜராஜனின் அக்காள் குந்தவையாக எஸ்.வரலட்சுமி, சாளுக்கிய அரசன் விமலாதித்தனாக முத்துராமன், எதிரி நாட்டின் ராஜ தந்திரி பால தேவராக எம்.என்.நம்பியார், நம்பியாண்டார் நம்பியாக சீர்காழி கோவிந்த ராஜன், ராஜராஜரின் ரகசிய உளவாளி பூங்கோதையாக மனோரமா என நடித்த அத்தனை கலைஞர்களும் அசத்தியிருப்பார்கள். ஆர்.எஸ்.மனோகர், டி.ஆர்.மகாலிங்கம் போன்ற கலைஞர்கள் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
எஸ்.வரலட்சுமி குந்தவையாக நடித்துப் பாடிய ‘ஏடு தந்தானடி தில்லையிலே’ என்கிற பாடல் இப்போதும் அவரது குரலின் இனிமைக்கும் குன்னக்குடி வைத்தியநாதனின் இசை வளமைக்கும் சாட்சியமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. பி.சுசீலா பாடிய ‘நாதனைக் கண்டேனடி’ பாடலும் அப்போது மிகப் பெரிய ஹிட்! இப்படத்தில் ‘மாதென்னைப் படைத்தான்’ என்கிற பாடலில் பன்னிரண்டு தமிழ் மாதங்களின் பெயர்கள் இடம்பெறும் வண்ணம் எழுதியிருந்தார் கவியரசு கண்ணதாசன்!
சமாதானத்தில் முடிந்த போர்! - இன்றுபோல் அன்றைக்கு கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் வசதிகள் இல்லை. போர்க்களக் காட்சிகளில் அதிக எண்ணிக் கையில் குதிரைகள், யானைகள், காலாட் படைக்கான வீரர்கள் என பிரம்மாண்டம் காட்ட முடியாது என்கிற நிலை. கோயில், கோட்டை, அரண்மனை உள்ளரங்க செட்களுக்கே பெருந்தொகை செலவாகிவிட்டது. இதை அறிந்து, தயாரிப்பாளரைக் கஷ்டப்படுத்த விரும்பாத இயக்குநர் ஏ.பி.நாகராஜன், தனது புத்திசாலித்தனத்தைப் பிரயோகித்தார்.
ராஜேந்திர சோழனுக்கும் விமலாதித்தனுக்கும் நடக்கும் போரை, இருவருக்குமான ‘ஒத்தைக்கு ஒத்தை’ வாள் வீச்சாக மாற்றி, அதையும் சமாதானத்தில் முடியும் ஒன்றாகச் சித்தரித்தார். பெரும் போர்க் காட்சிகளை எதிர்பார்த்து வந்த ஒரு பகுதி ரசிகர்களுக்குப் படம் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
ஆனால், நடிகர் திலகம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பு, கங்காவின் கலை இயக்கம், குன்னக்குடி வைத்தியநாதனின் இசை, ஏ.பி.நாகராஜனின் உரையாடல், இயக்கம் ஆகியன பெரும்பகுதி ரசிகர்களைக் கவர்ந்தன. தமிழ் சினிமாவின் பிரம்மாண்டப் படங்களில் ஒன்றாகவே மூத்த ரசிகர்களால் நினைவுகூரப்பட்டாலும் ராஜராஜ சோழனின் வரலாறு விவாதப் பொருளாகியிருக்கும் இக்கால கட்டத்தில் இப்படியொரு படம் வந்ததே இன்று மறக்கப்பட்டுவிட்டது.
படங்கள் உதவி: ஞானம்
- jesudoss.c@hindutamil.co.in