

கடந்து போன வாழ்வின் அழியா நினைவுகளை மீட்டுத் தரும் அழகியலோடு பார்வையாளர்களைத் தொடர்பு கொள்பவை தங்கர் பச்சானின் படங்கள். ஓர் இடைவெளிக்குப் பிறகு ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் மூலம் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார். படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..
‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’ படங்களின் வரிசையைத் தாண்டிச் செல்லும் முனைப்பு படத்தின் தலைப்பில் தெரிகிறது.. பெரும்பாலான திரைப்படங்களில் புனையப்பட்ட கதாபாத்திரங்களின் கதை மட்டுமே இருக்கும். விறுவிறுப்பாக சித்தரிக்கப்பட்டிருக்குமே தவிர அவை பார்வையாளரின் வாழ்க்கைக்கு வெளியே இருக்கும். அத்தகைய படங்களை உடனடி உணவுபோல் உண்டு செரித்து மறந்து விடுவார்கள்.
ஆனால் ‘இது என்னுடைய கதை, இது எனக்கும் நேர்ந்திருக்கிறது, எனது நண்பனுக்கும் நேர்ந்திருக்கிறது, உறவினருக்கும் நேர்ந்திருக்கிறது, அதற்கு நானும் ஒரு நேரடி சாட்சி’ என்று பார்வையாளர்கள் சொல்லக்கூடிய, மனித வாழ்வைப் படியெடுக்கும் திரைப்படங்களே என்னுடையவை. ஏனென்றால் மனித உறவுகளின் உணர்வுகளைத் துல்லியமாக, நுணுக்கமாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களையே நான் படைக்க விரும்புகிறேன்.
நாம் எளிதாகக் கடந்துபோய்விடும், மீண்டும் திரும்பிப் பார்க்க வாய்ப்புத் தராத வாழ்க்கையில் புதையுண்டுபோன நினைவுகளை, அவற்றில் உறைந்திருக்கும் சம்பவங்களை உயிர்ப்பித்து பார்வையாளர்களுடன் உரையாடும் திரைப்படங்களையே இதுவரைத் தந்து வந்திருக்கிறேன்.. உங்கள் அவதானிப்பு சரிதான். ‘கருமேகங்கள் கலைகின்றன’ இந்த உணர்வு வரிசையின் அடுத்த கட்டம் எனப் படம் பார்த்தபின் கூறுவீர்கள்.
படத்தின் கதை பற்றி.. எனது சிறுகதையின் மையக் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, புதிய திரைக்கதை வடிவத்தில் இதைப் படைத்திருக்கிறேன். வாழ்வின் நெடும் பயணத்தில் கடந்துபோகும் மனித மனங்கள், அவர்களின் வாழ்நிலை, உறவு நிலை, அன்பு பகிர்தல், பிரிவு, துயர் ஆகியன குறித்தே இந்தப் படம் உரையாடுகிறது. ஒரு குற்றத்தைப் புரிந்துவிட்டு, மனிதர்கள் எளிதாக கடந்து சென்றுவிடுகிறார்கள். அந்தக் குற்றம் என்றைக்காவது ஒரு நாள் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டால்..!
கதை நாயகனாக இயக்குநர் இமயம் பாரதிராஜாவைத் தேர்ந்துகொள்ள என்ன காரணம்? - எனது ‘கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன’ சிறுகதையைப் படமாக்க வேண்டும் என்று நினைத்தபோது, திடீரென்று மனதில் தோன்றியவர்தான் பாரதிராஜா. அவரைத் தவிர, வேறொருவரைக் கொண்டு, இக்கதையைப் படமாக்க முடியும் என நான் நம்பவில்லை. 75 வயதைக் கடந்த ஒரு முதியவர், அவரது வாழ்க்கையில் தேடி ஓடும் சம்பவங்கள்தான் கதை.
பாரதிராஜாவின் தோற்றமும் அவரது உடலின் தளர்ச்சியும் அப்படியே ராமநாதன் என்கிற கதாபாத்திரத்துக்கு உயிர்ப்புடன் பொருந்தியிருக்கின்றன. ஒரு நடிகரைக் கொண்டு இக்கதையைப் படமாக்கினால், எங்காவது ஒரு செயற்கைத்தனம் வந்து ஒட்டிக்கொண்டு படைப்பைச் சிதைத்துவிடும்.
கேமராவின் முன்பாக நிற்கும்போது மட்டும், இவரா எனது படத்தில் நடிக்கிறார் என்கிற ஐயம் எனக்கு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. படப்பிடிப்புத் தளங்களில் என்னுடைய ராமநாதனாகத்தான் அவர் தெரிந்தாரே தவிர, அவரை நடிகராக நான் பார்க்கவே இல்லை.
இந்தப் படத்தை ஒப்புக்கொண்டபிறகு அவர் என்னிடம், “முழுமையா என்னை உங்கிட்ட ஒப்படைக்கிறேன். நீ என்ன சொல்றியோ அதை அப்படியே செய்றேன். இந்தக் கதையைச் சிதைக்காமல் படமாக்கிடு.. என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமா இருக்கும்” என்று கேட்டுக்கொண்டார். இந்தப் படத்தைக் காண பாரதிராஜாவும் எனது படங்களைத் தொடர்ந்து ஆதரித்துக் கொண்டாடி வந்துள்ள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். அவர்களை நானும் பாரதிராஜாவும் ஒருபோதும் ஏமாற்றமாட்டோம்.
பாரதிராஜாவுடன் கௌ தம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் என இயக்குநர்கள் அதிகமாக படத்தில் இடம் பிடித்திருக்கிறார்களே..! - நம்மிடம் சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள். அதேநேரம், அவர்களை சிறந்த நடிகர்களாக மிளிரச் செய்த கதாபாத்திரங்களை எழுதியவர்கள் சிறந்த இயக்குநர்கள்தான். அப்படிப் பார்த்தால், மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்கள் நடிகர்கள் மட்டுமே அல்ல; சிறந்த இயக்குநர்களாலும் அது சாத்தியம்.
அந்த வகையில் எனது கதாபாத்திரங்களுக்குப் பொருந்தக்கூடிய இயக்குநர்களை நான் இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். கோமகன் என்கிற கதாபாத்திரத்துக்காக கௌதம் மேனனை அழைத்தேன். அவர் அப்படியே பொருந்திக் கொண்டார்.
அதேபோல், வெங்கடேசன் என்கிற கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரும் முகுந்தன் என்கிற கதாபாத்திரத்தில் ஆர்.வி.உதயகுமாரும் பரோட்டா கடை ஒன்றின் முதலாளியாக இயக்குநர் தளபதியும் நெகிழ வைத்திருக்கிறார்கள். ஏதோ ஒரு ஆசைக்காக, திட்டமிட்டு இவ்வளவு இயக்குநர்களை நடிக்க வைக்கவில்லை. அது எனது வேலையுமில்லை; அதில் எந்தப் பெருமையும் கிடையாது.
பெண் கதாபாத்திரங்களை வலிமையாகப் படைப்பதில் கவனமாக இருப்பவர் நீங்கள். இதில் அதிதி பாலன்? - ‘அருவி’ படம் பார்த்துவிட்டு அதிதி பாலனை மறந்து போய்விட்டேன். இந்தப் படத்தின் மையக் கருவுக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய கண்மணி கதாபாத்திரத்துக்கு யாரைத் தேர்வு செய்வது என உதவியாளர்களுடன் விவாதித்தபோது பல நட்சத்திர நடிகர்களைப் பரிந்துரைத்தார்கள். ‘சரி .. பேசுங்கள்’ என்று சொன்னேன்.
பல மாதங்கள் ஓடின. ஆனால் பரிந்துரைகள் எதுவும் கைகூடவில்லை. இந்தப் படத்தில் என்றில்லை; கடந்த காலத்தில் எனக்குக் கிடைக்காதது எல்லாம் பின்னர் நல்லதாகவே முடிந்திருக்கிறது. அப்படித்தான், ‘அதிதி பாலனை ஏன் மறந்தாய்?’ என்று மனம் எடுத்துக்காட்டியது. உடனே தொலைபேசி வழியாக அழைத்துப் பேசினேன்.
அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். மிகச்சிறந்த பெண்மணி; அதனால்தான் அவர் மிகச்சிறந்த கலைஞராகவும் ஒளிர்கிறார். கண்மணி கதாபாத்திரத்தை எள்ளளவும் குறையாமல் உயிரூட்டியிருக்கிறார். இக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு அவர் தன்னை ஒப்புக்கொடுத்த விதமும் குரல் பதிவின்போது அவர் செலுத்திய உழைப்பும் சொல்லி மாளாது.
எடிட்டர் பி.லெனினை மீண்டும் படத்தொகுப்புப் பணிக்கு எப்படி இணங்க வைத்தீர்கள்? - ‘உதிரிப் பூக்கள்’ படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானவர் பி.லெனின். படத்தொகுப்பிலும் படைப்பாக்கத்திலும் தனித்த சாதனையாளர். ஒரு படத் தொகுப்பாளராக ‘அழகி’யை தனது இறுதிப் படம் என்று அறிவித்துவிட்டு, படங்களுக்குப் பணிபுரிவதை நிறுத்திக்கொண்டார். எப்படி பாரதிராஜாவை அல்லாமல் ராமநாதன் கதாபாத்திரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையோ அப்படித்தான் இந்தப் படத்துக்கு லெனின்.
அரை மனதுடன் நாங்கள் சந்தித்தபோது, அவரிடம் திரைக்கதையின் முழு வடிவத்தையும் கொடுத்தேன். அச்சந்திப்பிலேயே முழுத் திரைக்கதையும் வாசித்து முடித்துவிட்டு, சுறுசுறுப்பானார். இது நல்ல படைப்பாக வரும் என்று அவருக்கு மனதில் பட்டுவிட்டதை அவரது முகத்தில் தெரிந்த வெளிச்சக் கீற்றை வைத்துத் தெரிந்துகொண்டேன்.
யாரையும் அவர் பாராட்டி நான் பார்த்ததே இல்லை. தற்போது இந்தப் படைப்பின் ஒவ்வொரு பகுதியையும் செதுக்கிக்கொண்டிருக்கிறார். லெனின் இந்தக் கதைக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்டதை எனக்கும் எனது குழுவினருக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்.
பல ஊர்களில் படமாக்கியிருக்கிறீர்கள் என செய்திகள் வந்தன. எங்கே கதை நடக்கிறது? யார் ஒளிப்பதிவாளர்? - கிராமப்புறங்களில் படமாக்குவது எளிது. இந்தக் கதை சென்னை, திருச்சி, கும்பகோணம்,மானாமதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் போன்ற ஊர்களின் பின்னணியில் நகர்கிறது. இங்கெல்லாம் போய் வீட்டினுள் படமாக்கியதைவிட, தெருக்கள், பேருந்து நிலையங்கள், கடை வீதிகள் போன்ற மக்களின் வாழ்விடங்களில் படமாக்கப்பட்ட வெளிப்புறக் காட்சிகளே அதிகம்.
பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன் ஆகியோரை வெளிப்புறப் படப்பிடிப்பில் வைத்துக்கொண்டு படமாக்க ஒரு குழுவாக அரும்பாடுபட்டோம். இந்த இடத்தில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் ஆளுமையை நான் பாராட்டியே ஆக வேண்டும். என்னைப் பொறுத்துக்கொண்ட என் உதவியாளர்களின் அன்புக்குப் பெருங்கடன்பட்டிருக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக இப்படி ஒரு படைப்பை, அதன் மேன்மையை உணர்ந்து, அதை தயாரிக்க முன் வந்த துரை வீரசக்தியை தமிழ் திரையுலகத்துக்கு வணங்கி, வரவேற்கிறேன் .