

தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து 2017இல் தமிழில் வெளியான முதல் படம் ‘என் மகன் மகிழ்வன்’. இந்திய உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான நடுவர்கள் விருதை வென்ற இப்படம், “மை சன் இஸ் கே’ என்கிற தலைப்பில் இந்தியில் வெளியாகி தேசிய அளவிலும் கவனம் பெற்றது.
அதை இயக்கியவர் லோகேஷ் குமார். தற்போது இவர், ‘என்4’ என்கிற க்ரைம் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கி முடித்திருக்கிறார். மாற்றுத் திரைப்பட இயக்குநராக அடையாளம் பெற்றவர், இரண்டாவது படத்திலேயே வணிக சினிமா நோக்கி ‘யூ டெர்ன்’ அடித்தது ஏன்? அவரிடம் உரையாடியதிலிருந்து..
‘என்4’ என்பது வடசென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் எண் தானே? - ஆமாம்! இது காசிமேடு பகுதியைக் கதைக் களமாகக் கொண்ட படம். என்4 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு சம்பவம் நடக்கிறது.
ஒரு குளத்தில் கல்லெறிந்தால் அது எப்படி நீர் வளையங்களை உருவாக்கிக்கொண்டே செல்லுமோ அதைப்போல், அந்த சம்பவத்துக்குப்பின் அங்கே வாழும் இரண்டு இளம் ஜோடிகள், இன்னும் இரு மனிதர்கள் ஆகிய நால்வரின் அமைதியான வாழ்வில் அது எந்த மாதிரியான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை.
நடந்த சம்பவத்துக்கும் கதை மாந்தர்களுக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. என்றாலும் அவர்கள் வாழும் பகுதியில் நிகழும் குற்றமொன்றின் அலையில் குருவிகளைப்போல் எப்படிச் சிக்குகிறார்கள், அதிலிருந்து அவர்களால் மீள முடிந்ததா, இல்லையா என்பதுதான் படம்.
‘மை சன் இஸ் கே’ போன்ற ஒரு சுயாதீனப் படத்தைக் கொடுத்துவிட்டு, வணிக சினிமாவுக்குள் குதித்துவிட்டீர்களே ஏன்? - எனது முதல் படம்போல் பத்து படங்கள் எடுக்க வேண்டும் என்றால் ‘மெயின் ஸ்ட்ரீம்’ சினிமா சந்தையில் வணிக வெற்றி தேவைப்படுகிறது. அந்த அங்கீகாரம், நல்ல படங்களைத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர்களிடம் என்னை அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தை முழுமையான வணிக சினிமாவாக எடுத்திருந்தாலும் தரத்தில் கீழிறங்கவில்லை. இது வழக்கமான வடசென்னை படமல்ல; வடசென்னையை குற்றவுலகமாக தூற்றவும் இல்லை. கதாபாத்திரங்களின் வாழ்விடம் அவர்களது அன்றாட வாழ்க்கையுடன் எவ்வளவு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதுதான் படத்தின் இதயம். மொத்தம் நான்கு கதைகள், ஒரு சம்பவம் உருவாக்கும் மையப் புள்ளியில் இணைகின்றன.
யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? - ‘பர்மா’ படப் புகழ் மைக்கேல் தங்கதுரை, ‘சுந்தரி’ சின்னத்திரை தொடர் புகழ் கேப்ரில்லா, அப்சல், வினுஷா, பிரக்யா, அக் ஷய் கமல் உட்படப் பல திறமையான, பார்வையாளர்களுக்குப் பரிச்சயமான புதுமுகங்களை நம்பிக் களமிறங்கியிருக்கிறேன்.