திரை (இசைக்) கடலோடி 28 | விதியோடு விளையாடும் ராகம்!

திரை (இசைக்) கடலோடி 28 | விதியோடு விளையாடும் ராகம்!
Updated on
4 min read

இசை - இரண்டு எழுத்து வார்த்தைதான். ஆனால் இந்த ஒற்றைச்சொல்லுக்கு இருக்கும் மகத்துவமோ மிக்க வீரியம் வாய்ந்தது. மனதில் எழும் கவலைகளை மறக்கவைத்து மனித குலத்தை அமைதிப்படுத்த இறைவன் அளித்த அருட்கொடை தான் இசை.

மனதிற்கு மட்டுமல்லாமல் மருத்துவ குணத்துடன் உடலுக்கு ஏற்படும் நோய்நொடிகளையும் கூடக் குணப்படுத்த இசையால் முடியும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. உயிராபத்தான நிலையில் இருப்பவரை கூட இசையால் காப்பாற்றி விடலாம் என்பதற்கு முகலாயப் பேரரசர் அக்பரின் அரசவைக் கவிஞராக இருந்த தான்சேன் ‘தீபக்’ ராகத்தைப் பாடி தீபங்களில் ஒளிவரச் செய்து உயிராபத்தான நிலையில் இருந்த அக்பரின் மகளை காப்பாற்றினார் என்று இசையின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் செவிவழிக்கதை ஒன்று உலவி வருகிறது. இந்தச் செவி வழிக்கதையை பாடல் காட்சியாக்கி அந்தப் பாடலைக் கல்வெட்டாக மக்கள் மனங்களில் பதியவைக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறார் இயக்குநர் முக்தா வி. சீனிவாசன்.

1972ஆம் ஆண்டு முக்தா பிலிம்ஸ் தயாரித்து வெளிவந்த 'தவப்புதல்வன்' படத்தில் இப்படி ஒரு காட்சி பாடலாக வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் திலகத்துக்கு இணையாக புன்னகை அரசி கே.ஆர். விஜயா நடித்திருந்தார். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் தனது தாயின் உடல்நலம் கருதி அந்த உண்மையை மறைக்கப்போக அதனால் அவன் சந்திக்க நேரும் சிக்கல்களை மையமாக வைத்து தூயவன் எழுதிய கதையை அருமையாகப் படமாக்கி இருந்தார் முக்தா வி. சீனிவாசன்.

படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நான்கு. அவற்றில் ஆங்கிலமும் தமிழும் பாடலில் இடம் பெற்ற ஆங்கில வார்த்தைகளை ராண்டார் கை எழுதி இருந்தார். இதே போல இந்தியும், தமிழும் கைகோர்த்த ஒரு போட்டிப் பாடலில் இந்திப் பகுதிக்கான பாடல் வரிகளைப் தாமே புனைந்து பாடியவர் பி.பி. ஸ்ரீனிவாஸ் .

இனி இந்தவாரம் நாம் ரசிக்கப்போகும் பாடல் முத்தினைப் பார்ப்போம்;

தொடக்கத்தில் குறிப்பிட்டது போல பேரரசர் அக்பரின் மகளின் உயிரை இசையால் தான்சேன் மீட்டுத்தரும் காட்சி. கவியரசர் பாடலை முதலில் எழுதிக் கொடுத்த பிறகு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மெட்டுப் போட்ட பாடல் இது. இந்தப் பாடலை கவியரசர் காட்சிக்காக எழுதினாரா அல்லது தனது ஆருயிர் நண்பனிடம் இருக்கும் பணிவு என்னும் உயர்ந்த குணத்தை பறைசாற்ற எழுதினாரா என்று தோன்றும் வகையில் அமைந்திருக்கும் பாடல் இது.

அதேபோல் இசை அமைத்த எம்.எஸ்.வி. கவிஞரை மனதில் நினைத்துக்கொண்டு இசை அமைத்தாரோ என்று எண்ணத் தோன்றும் வகையில் அவ்வளவு அற்புதமாக பாடலும் இசையும் சங்கமித்திருக்கும் ஒரு அற்புதப் பாடல் இது.

இன்னொரு அற்புதமான இணைவும் இந்தப் பாடலில் உண்டு. அதுதான் பாடியிருக்கும் தெய்வப்பாடகர் டி.எம். சௌந்தரராஜன். இசையில் உச்சம் தொட்ட ஒரு பாடகனின் பெருமிதம், கம்பீரம் அதே சமயம் அவனிடம் குடிகொண்டிருந்த பணிவு அனைத்தையும் தனது குரலில் அப்படியே கொண்டு வந்து நம் மனக்கண் முன்னால் தான்சேன் என்னும் ஒப்புயர்வற்ற இசைக்கலைஞனையே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்.

இந்த மூன்று மகாநதிகளின் திறமைகளும் ஒன்றாகச் சங்கமித்த இடம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்னும் மாபெரும் நடிப்புச் சக்கரவர்த்தியிடம்தான்.

இப்படி அனைத்திலும் உச்சம் தொட்ட சிகரங்களின் கூட்டணி காலத்தை வென்ற ஒரு மகத்தான பாடல் முத்தைத் திரை இசைக்கடலில் மிதக்க விட்டிருக்கிறது.

இந்தப் பாடலை கல்யாணி ராகத்தில் (ஹிந்துஸ்தானியில் இதை 'யமன்' என்பார்கள்) அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். ஆரம்பத்தில் ஒரு சிறு ஆலாபனை கல்யாணி ராகத்தின் முழுவடிவையும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. அது முடிந்ததும் சித்தாரில் ஒரு உணர்வுப் பூர்வமான சுழற்சி.

'இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ ஆரம்ப வரிகளிலேயே தனது இசைத்திறமையால் ஒருவனுக்கு ஏற்படும் பெருமித உணர்வு கம்பீரமாக வெளிப்படுகிறது. அடுத்த வரியில் அதே கம்பீரம் சட்டென்று குழைந்து பணிவைக் கூட்டி, 'அது இறைவன் அருளாகும்' என்று தன்னடக்கத்தை வெளிப்படுத்துகிறது.

இப்படி முதல் வரியில் கம்பீரத்தையும் அடுத்த வரியில் பணிவையும் தேக்கி மெல்லிசை மன்னர் இசையமைக்க அந்த உணர்வுகளை அப்படியே தனது கம்பீரக்குரலின் மூலம் நூற்றாண்டு காணும் டி.எம். சௌந்தரராஜன் என்னும் மகத்தான பாடகர் பிரதிபலிக்க ஆரம்பத்திலேயே பாடல் நம்மை கவர்ந்து விடுகிறது.

அந்த அருளினால் ..

'ஏழாம் கடலும் வானும் நிலவும்
என்னுடன் விளையாடும் இசை
என்னிடம் உருவாகும்'

பல்லவி முடிந்ததும் தொடரும் இணைப்பிசையில் சித்தாரின் மீட்டல்களும் அதனைத் தொடரும் வயலின் வீச்சுக்களும் மூன்று ஆவர்த்தங்கள்.

அவற்றை அடுத்து சித்தார் மீட்டல்கள் ஆரோகண வரிசையில் உச்சம் தொட்டு முடியும் இடத்தில் வயலின் வீச்சுக்கள் அவரோகண வரிசையில் இறங்கி முடியும் லாவகம் என்று எண்ணிப் பதினாறே நொடிகளுக்குள் கல்யாணி ராகத்தின் முழு வடிவையும் நம் செவிகளில் கடத்தி மனதை நிறைக்கிறார் மெல்லிசை மன்னர்.

தொடரும் சரணத்தை கவியரசர் அமைத்திருக்கும் விதம் மெல்லிசை மன்னரே சொல்வது போல இருக்கிறது.

'என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய்தீர்க்கும் மருந்தாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாதலால்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்'

தனது இசையில் அமைந்த பாடல் உங்கள் செவிகள் கேட்கும் விருந்தாக இருக்கவும் இருக்கலாம். அது கொடிய நோயைத் தீர்க்கும் மருந்தாக ஆனாலும் ஆகலாம். (சர்வ நிச்சயமாக அப்படித்தான் இருக்கும் என்று சொல்லாமல் ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம் என்று சந்தேகத்துடனேயே சொல்வது போல பாடலும் இசையும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கு அழகே தனி.) அப்படி இருக்க எரியாத தீபத்தில் ஒளி வர நான் எந்த தைரியத்தில் இப்படி வேண்டுகிறேன் என்ற கேள்வியை எழுப்புகிறார் கவியரசர்.

அதற்கு மெல்லிசை மன்னர் இசையால் அளிக்கும் பதில் ஒற்றை வார்த்தைதான். ‘எனக்கு இப்போது இந்த இசையால் ஏற்பட்டிருக்கும் மேலான நிலையே இறைவன் எனக்கு அளித்த அருள் என்று நான் கருதுவதால்தான் அந்த இறை அருளையே வேண்டி நிற்கிறேன்’

மெல்லிசை மன்னர் இசைக்கோர்வையை வார்த்தளிக்க டி.எம். எஸ். அவர்களின் கம்பீரமும் கார்வையும் நிறைந்த குரல் அதை வழிமொழிகிறது.

தொடர்ந்து விறுவிறுப்பான சித்தார் மற்றும் வயலின்களின் மீட்டல்களும், வீச்சுக்களும் காட்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் இணைப்பிசையாக பின்னல் ஸ்வரங்களைக் கோர்க்கும் அழகே தனி. இணைப்பிசை முடியும் நேரத்தில் வரும் புல்லாங்குழலின் சிறு பிட் என்று இருபத்தொரு நொடிகளுக்குள் இப்படி ஒரு அற்புத இசைக்கோர்வையை நம் செவிகளில் தேனாக பாயவைக்க மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஒருவரால் மட்டுமே முடியும்.

தொடரும் சரணத்தை முழுக்க முழுக்க தான்சேனின் வேண்டுதலாக அமைத்திருக்கிறார் கவியரசர். ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி உண்டு. கதைப்படி தான்சேன் 'தீபக்' ராகம் பாடித்தான் தீபஒளி வீசச் செய்தார். ஆனால் இங்கு நம் கவியரசரோ குறிப்பிட்ட ஒரு ராகம் மட்டும்தான் நோய்தீர்க்கக்கூடியது என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்காமல் அனைத்து ராகங்களையுமே உயிர் காக்க அழைக்கிறார்.

இதோ கவியரசரின் அந்த எளிமை பொங்கும் அற்புத வரிகள்:

‘விதியோடு விளையாடும் ராகங்களே
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
கனலேந்தி வாருங்கள் தீபங்களே
கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே’

அங்கே படுக்கையில் சக்ரவர்த்தியின் மகள் கண்விழிக்காமல் இருக்கிறாள். இங்கோ இன்னும் தீபங்களில் ஒளி வரவில்லை. தான்சேன் என்னும் அற்புதக்கலைஞரின் மனம் தவிக்கும் தவிப்பை தொடரும் வயலின்களின் சிறு வீச்சு அற்புதமாகப் படம் பிடித்துக்காட்டுகிறது.

அந்தத் தவிப்பில் அடுத்த சரண வரிகள் பிரவாகமாக பரிதவிப்புடன் வருவது போல அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.

டி.எம். சௌந்தரராஜன் என்னும் அற்புதக் கலைஞரின் குரலில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த சஞ்சாரங்கள் சவால் விடுவது போல தெறித்து விழுகின்றன.

‘தத்தும் கடலலை ஓடி ஓடி வரும்
எந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் - தீபங்களே
எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்
இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன தீபங்களே.

கண்ணில் கனல் வரப்பாடல் வேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே
தீபங்களே.. தீபங்களே.
தீபங்களே.. தீபங்களே.’
- என்று கல்யாணி ராகத்தை உச்சத்தில் ஏற்றிப் பாடலை நிறுத்துகிறார் மெல்லிசை மன்னர்.

அந்த அளவில் ஒவ்வொரு விளக்காக ஒளி வீச ஆரம்பிப்பதை தொடர்ந்து வரும் பின்னணி இசையின் மூலம் திரைப்படத்தைப் பார்க்காதவர்களையும் கூட உணர வைக்கிறார் மெல்லிசை மன்னர்.

இறுதியாக தனது வேண்டுதல் பலித்ததனால் நெஞ்சம் நெகிழ பெருமிதத்துடன் ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்’ என்று நிறைவுடன் பணிவைத் தேக்கி பாடல் நிறைவடைகிறது.

கேட்கும் நமது மனங்கள் முழுவதும் இசையின் மகத்துவத்தால் நிறைவும் அமைதியும் வியாபிப்பதை நம்மாலும் உணர முடிகிறதே..

அதுவே இந்தப் பாடலுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.

(தொடர்ந்து முத்தெடுப்போம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in