

வெற்றிபெறும் மலையாளத் திரைப்படங்களை தமிழில் மறுஆக்கம் செய்வது ஒரு போக்கு. மலையாள இயக்குநர்களே நேரடியாகக் கோடம்பாக்கத்துக்கு வந்து தமிழ் படங்களை இயக்குவது புதிய போக்கு. மம்மூட்டி, மோகன்லால் ஆகிய இருவரையும் இயக்கியிருக்கும் மூத்த இயக்குநர்களில் ஒருவர் ஆர்.சுகுமாரன்.
அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி அனுபவம் பெற்ற ஷ்யாம் - பிரவீன் ஆகிய இருவரும் இணைந்து, தமிழில் ‘மெமரீஸ்’ என்கிற தங்களது முதல் படத்தை இயக்கியிருக்கிறார்கள். இப்புதிய இயக்குநர் இணையில் ஷ்யாமுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.
‘மெமரீஸ்’ என்கிற தலைப்பில் வரும் ’நினைவுகள்’ யாருடையவை? தலைப்பின் வடிவமைப்பில் சுத்தியல், தேள் கொடுக்கு போன்றவை எதற்கு?
நாயகனுடைய நினைவுகளைக் குறிக்கிறது. அவரை ஏழு நாள்களாக தப்பிக்க வழியில்லாத இடமொன்றில் அடைத்து வைத்திருக்கிறார் ஒரு நபர். மயக்க நிலையில் இருந்த நாயகன் கண் விழிக்கும்போது, தான் யார் என்பதே அவருக்குத் தெரியவில்லை. தனது பெயர், ஊர் உள்ளிட்ட நினைவுகளின் பெரும்பகுதியை அவர் இழந்திருக்கிறார். அடையாளம் தெரியாத அந்த நபரிடம் ‘எதற்காக என்னை இங்கே அடைத்து வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார் ‘நீ ஒரு கொலையைச் செய்துவிட்டு ஒன்றுமே நடக்காதவன்போல் இருக்கிறாய்.
அதற்கான தண்டனைதான் இது’ என்கிறார். தான் யார் என்பது தனக்குத் தெரிந்தால்தான், அடைத்து வைத்தவர் கூறும் கொலைப் பழி குறித்த உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். அதற்காக அந்தக் கொட்டடியிலிருந்து நாயகன் எப்படித் தப்பிக்கிறார், தன்னைப் பற்றிய ரகசியங்களை கண்டுபிடிக்க அவர் மேற்கொண்ட பயணம் என்ன என்பதுதான் கதை. இது வன்முறை கலந்த உளவியல் த்ரில்லர். சுத்தியலும் தேள் கொடுக்கும் இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களின் குணங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.
இயக்குநர் இணையாக ஒரு கதைக் கருவை முடிவுசெய்வது, திரைக்கதையை சேர்ந்து எழுதுவது ஆகியவற்றில் எவ்வாறான செயல்முறையை இருவரும் பின்பற்றினீர்கள்?
நாங்கள் இருவரும் பார்த்த ஓர் அந்நிய மொழித் திரைப்படத்தின் பாதிப்பிலிருந்து கதைக் கருவை முடிவு செய்தோம். நமது வாழ்க்கைச் சூழலில் நடக்கச் சாத்தியமுள்ள கதைக் கருவாக அதை மாற்றினோம். அதன்பிறகு, குடும்பம், காதல், நட்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவமுள்ள நமது கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகக் கதாபாத்திரங்களை உருவாக்கினோம்.
அதன்பிறகு திரைக்கதையின் முதல் பிரதியை பிரவீனும் இரண்டாம் பிரதியை நானும் எழுதினோம். அதற்கு முன் கதை விவாதத்தின்போது ஒருவர் மற்றவர் உருவாக்கும் காட்சிகளை அங்கீகரிப்பதில் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். பல சண்டைகளுக்குப் பிறகே திருப்திகரமான திரைக்கதை உருவானது.
வெற்றியை நாயகனாகத் தேர்வுசெய்ய என்ன காரணம்?
‘8 தோட்டாக்கள்’ தொடங்கி ‘ஜீவி’ வரிசைப் படங்கள் வரை அவரை கவனித்து வருகிறோம். எளிய தோற்றம் இருந்தாலும் ஆழமான, அமைதியான நடிப்பைக் கொடுக்கிறார். வணிக சினிமா நாயகனுக்கான எந்த எத்தனிப்பும் அவரிடம் இல்லை. அதனால் அவரால் இத்தனை ‘வெரைட்டி’யாக கேரக்டர்களைச் செய்ய முடிகிறது.
இந்தப் படத்தில் நான்கு பரிமாணங்களில் அவரது கதாபாத்திரம் வெளிப்படும். அதில் ஒரு பரிமாணம் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். அது புதிதாகவும் இருக்கும். அதேபோல் இதில் கதாநாயகிகளாக நடித்துள்ள ’பாரி’ படப் புகழ் பார்வதி, மலையாளத்தில் பிரபலமாகி வரும் டயானா ஆகியோரின் நடிப்பும் ரசிகர்களுக்குப் பிடித்துவிடும்.
முதல் படம் வெளி வரும் முன்பே இரண்டாவது படம் தொடங்கி விட்டீர்கள்..
ஆமாம்! சரத்குமார் சார்தான் ஹீரோ. ‘தி ஸ்மைல் மேன்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருக்கிறோம். இது அவருக்கு 150வது படம். 80 சதவீதப் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.