

தேசிய விருதுபெற்ற ‘ஆடுகளம்’ படத்தின் வசன கர்த்தாவாக அறியப்பட்டவர் பாலுமகேந்திராவின் மாணவரான விக்ரம் சுகுமாரன். அவரது இயக்கத்தில் ‘மதயானைக் கூட்டம்’ வெளியானபோது ‘யார் இவர்?’ என ரசிகர்களைத் தேட வைத்தார்.
இடையில் ‘கொடி வீரன்’ படத்தில் நடிகராகவும் முகம் காட்டிய இவர், தற்போது ‘இராவண கோட்டம்’ என்கிற தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்து தமிழ் திசைக்காக அவருடன் பிரத்யேகமாக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
பாலுமகேந்திரா உயிரோடு இருக்கும்போதே ‘ஆடுகளம்’, ‘மதயானைக் கூட்டம்’ படங்கள் வெளிவந்துவிட்டன. அவற்றைப் பார்த்து உங்கள் குரு சொன்னவை நினைவிருக்கிறதா?
என்றைக்கும் மறக்காது. 1999இல் தொடங்கி 2000இன் இறுதி வரைக் ‘கதை நேரம்’ வரிசையில் வெளியான 56 குறும்படங்களில் பணிபுரிந்தபோதுதான் அவரிடம் சினிமா மொழியைக் கற்றுக்கொண்டேன். அதன்பிறகு ‘ஜூலி கணபதி’யிலும் பணிபுரிந்தேன்.
அவருடைய மாணவர்களாக நாங்கள் ஒரு பக்கம் எங்களது முதல் படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோது அவரும் கம்பீரமாகப் படம் இயக்கிக்கொண்டிருந்தார். “நீ எப்போ ‘மதயானைக் கூட்ட’த்தை ரிலீஸ் பண்றடா..? நானும் ‘தலைமுறைகள்’ ரிலீஸுக்குத் தயாராகணும்” என்று சொன்னார்.
’மதயானைக் கூட்டம்’ படம் பார்த்துவிட்டு “வன்முறை அதிகமாகத்தான் இருக்கு. வன்மத்துக்கு மூர்க்கம் என்கிற ரத்தவெறி பிடித்துவிடும்போது அது மனிதனையும் விலங்காக மாற்றிவிடுகிறது. அப்படிப்பட்ட மனித விலங்குகள் பற்றி எடுத்திருக்கிறாய்” என்று பாராட்டினார். ‘ஆடுகளம்’ பார்த்துவிட்டு வசனம் குறித்து வெற்றிமாறனிடம் என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது.
‘இராவண கோட்டம்’ கோட்டம் என்கிற தலைப்பு எதையோ குறியீடாகச் சொல்கிறதே?
தமிழ்நாடு என்றுதான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். இராவணன் ஒரு தமிழ் அரசன். அவனது எல்லைக்கு உட்பட்ட ஆட்சிப்பகுதி தமிழ்நாடாகத்தானே இருக்க முடியும். அதனால்தான் இந்தத் தலைப்பு. இராமநாதபுரம் மாவட்டத்தில் கதை நடக்கிறது. கருவேல மர அரசியலைப் பின்புலமாக வைத்துப் பின்னப்பட்ட கதை. 1957இல் முதுகுளத்தூர் அருகில் உள்ள தூவல் என்கிற கிராமத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைத் தாக்கமாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறேன்.
கருவேல மர அரசியல் எனும்போது இதில் சுற்றுச்சூழல் குறித்துப் பேசியிருக்கிறீர்களா?
இல்லை. பசுமைப் புரட்சி என்கிற பெயரில் காமராசர் ஆட்சிக்காலத்தில் வறண்டு கிடந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக் கருவேல மர விதைகள் தூவப்பட்டன. மண்ணின் வளத்தை அழித்து, நீரை உறிஞ்சிவிடும் சீமைக் கருவேல மரங்கள் பலருக்கு வாழ்வாதாரமாகவும் விளங்குவதை மறுக்கமுடியாது. அன்றைக்கு காமராசருக்கே இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வறட்சியும் வெயிலும் வாட்டியெடுக்கும் ஒரு நிலப்பரப்பில் கருவேல மரங்கள் உருவாக்கிய புழுக்கமும் வறட்சியும் மனிதர்களின் மனங்களிலும் ஊடுருவிய கதை இது. ஏற்கெனவே சாதி என்கிற வெயில், காலம் காலமாக அங்கே காய்ந்துகொண்டிருக்கும்போது அதற்குள் அரசியல்வாதிகளும் கார்ப்பரேட்டுகளும் புகுந்தால் என்னவாகும் என்பதைப் பேசியிருக்கிறேன். படத்தின் எல்லாக் காட்சிகளிலும் பின்புலமாகச் சீமைக் கருவேல மரங்கள் இருக்கும்.
மாநகரப் பின்னணியில் எடுக்கப்பட்டப் படங்களில் சாந்தனு பாக்யராஜ் அதிகமாக நடித்தவர். அவரை ஒரு கிராமியக் களத்துக்குள் பொருத்த முடிந்ததா?
சாந்தனு நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பமும் அதற்காகத் தன்னைத் தயாரித்துக்கொள்கிற ஆர்வமும் அவரிடம் அதிகமாகவே இருந்தன. அவருக்குக் கபடி விளையாடத் தெரியவில்லை. இராமநாதபுரத்துக்கு அழைத்துப்போய் என்னுடன் தங்க வைத்து, கபடி விளையாடக் கற்றுக்கொடுத்து, அங்குள்ள மக்களுடன் வெயிலிலும் புழுதியிலும் பழக வைத்தேன். அவரது உடல்மொழி, உச்சரிப்பு என அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டேன். நீங்கள் மாநகரத்தின் சாந்தனுவை இதில் காண முடியாது. அப்படியொரு இயல்பான மண்ணின் மகனாக இதில் வருகிறார்.
வேறு யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? - இளைய திலகம் பிரபு சார் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகவும் இளவரசு அண்ணன் மற்றொரு சமூகத்தின் பிரதிநிதியாகவும் முக்கியக் கதாபாத்திரங்களில் வருகிறார்கள். கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இவர்களுடன் தீபா ஷங்கர், ‘பருத்தி வீரன்’ சுஜாதா எனப் பலர் நடித்திருக்கிறார்கள் இராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சியையும் வெயிலையும் காட்சிப்படுத்துவதற்கு ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் மிகவும் உறுதுணையாக செயல்பட்டார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார். மதுரைக்காரரான ஜஸ்டின் பிரபாகரனின் இசை மீது எப்போதும் எனக்கு ஈர்ப்பு உண்டு. அவரது மெலடிகள் அவ்வளவு பிடிக்கும். அவர்தான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
‘கொடிவீரன்’ படத்தில் உங்கள் நடிப்பை விமர்சகர்கள் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார்கள். நடிப்பை ஏன் தொடரவில்லை? - நடிப்பதற்காக ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவர்களில் நானும் ஒருவன். நான் நன்றாக நடிக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் பாலுமகேந்திரா சார்தான். ’கொடிவீர’னுக்குப் பிறகு ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் வந்தன. தவிர்த்துவிட்டேன். நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன்.