

கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் பிருந்தா மாஸ்டர். கடந்த ஆண்டு வெளியான ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராகவும் முகம் காட்டினார். தற்போது ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ என்கிற தலைப்பில் தனது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார். ஹிருது ஹாரூன் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், பாபி சிம்ஹா, முனிஷ்காந்த், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
உங்களது இயக்கத்தில் வெளியான முதல் படத்தில் துல்கர் சல்மான், காஜல், அதிதி என முன்னணி நட்சத்திரங்கள் இருந்தார்கள். ஆனால், இரண்டாவது படத்தில் ஒரு அறிமுக நடிகருடன் களமிறங்கியிருக்கிறீர்களே?
கதையும் கதாபாத்திரங்களும் நன்றாக இருந்தால் போதும். சினிமா வாசனையே இல்லாதவர்கள்கூட அதில் ஒன்றிவிடுவார்கள். நான் ஒரு புதுமுகமாக சினிமா நடனத் துறையில் நுழைந்தபோது என்னை வேண்டாம் என்று சொன்னவர்கள் நிறைய பேர். ‘இந்தப் பெண்ணைப் பார்த்தா கோரியோகிராஃப் செய்கிறவர்போல் தெரியல, பாப்புலரான ஆளைக் கூப்பிடுங்க’ என்று என் முகத்துக்கு நேராகக் கூறியிருக்கிறார்கள். நான் திறமையானவள் என்கிற எனது நம்பிக்கைதான் இந்த இடம் வரை என்னை அழைத்து வந்திருக்கிறது. முதன் முதலில் எனக்குப் பாடல் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கேபி சார். தொடர்ந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா சார். அன்றைக்குச் சிலர் செய்த தவறுகளை இன்று நானும் செய்யக் கூடாது அல்லவா? ஹிருது ஹாரூன் ஒரு தமிழ்ப் பையன். நல்ல திறமை உண்டு. கண்கள் வழியாக நடிப்பை வெளிப்படுத்தத் தெரிகிறது. இந்தியில் ஏற்கெனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இவரோடு பாபி சிம்ஹா, முனிஷ்காந்த் போன்ற பிரபலங்கள் இணைந்திருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ப்ரியேஷ் குருசாமி என்கிற புதியவரையும் ஒளிப்பதிவாளராக இதில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அனஸ்வரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். கதையை நம்பி, என்னை நம்பி இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் - ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
‘ஹே சினாமிகா’ ஒரு முழு நீளக் காதல் படம். இரண்டாவது படத்திலேயே குற்றவுலகம், ஆக்ஷன் என்று இறங்கியது எதற்காக?
நான் நடன இயக்கம் செய்த இரண்டாயிரம் பாடல்களையும் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஒரே மாதிரி ‘கோரியோகிராஃப்’ செய்திருக்க மாட்டேன். பாடலின் தன்மைக்கு ஏற்ப, அதன் ஸ்டைல் இருக்கும். எனது படங்களும் அப்படியே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இது வட்டார வாழ்க்கையைப் பேசும் படம். ரொம்பவும் ‘ராவா’ன ஆனால் ரத்தமும் சதையுமான ஒரு கதை. அதனால், இதில் மண்ணும் மனிதர்களும் நிலப்பரப்பும் தெரிய வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக ஒரு இடத்தில்கூட ‘ஜூம் லென்ஸ்’ பயன்படுத்தவில்லை. இது இந்தக் கதை தேர்ந்துகொண்ட ஜானர். இதை மணிரத்னம் சாரிடமிருந்து நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். சினிமா இயக்கத்தில் எனக்கு அவர்தான் குரு. ஒரு படத்தின் அத்தனை அம்சங்களும் சிறப்பாக வரவேண்டும் என்பதில் பிடிவாதக்காரர். சிறப்பாக வரும்வரை விடமாட்டார். நானும் அப்படித்தான்.
‘தக்ஸ்’ என்கிற ஆங்கிலத் தலைப்பு எதற்காக, என்ன கதை?
‘நீ பெரிய ரவுடியா?’ என்று கேட்பதை, ‘நீ பெரிய ‘தக்’கா என்று கேட்கிற ஒரு தலைமுறை வந்துவிட்டது. ஆங்கில வார்த்தையாக இருந்தாலும் இன்று படம் பார்க்க வருகிற இளவயது ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்ட சொல்தான். அதனுடன் கதை நிகழும் களத்தையும் சேர்க்க வேண்டும் என்பதற்காக ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ என வைத்தோம். வெவ்வேறு காரணங்களுக்காக சிறை தண்டனையை அனுபவித்து வரும் ஏழு பேர், சிறையிலிருந்து தப்பிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களுடைய பூர்வ கதை என்ன, சிறையிலிருந்து தப்பித்தார்களா என்பது கதை. காட்சிகளை மொத்தமாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ்ஸிடம் கொடுத்துவிட்டேன். அவர் அத்தனை காட்சிகளுக்கும் முன்னதாகவே பின்னணி இசையைக் கொடுத்துவிட்டார். பாடல் காட்சிகளை ஒலிக்கவிட்டு எடுப்பதுபோல், பின்னணி இசையை ஒலிக்கவிட்டுக் காட்சிகளை எடுத்தேன். பின்னணி இசை, நடிகர்களின் நடிப்பை இன்னும் தூண்டிவிடுகிறது. இந்தப் படத்தில் கலை இயக்குநராகப் பணிபுரிந்துள்ள ஜோசப் சார் பற்றிக் கூறியே ஆகவேண்டும். அவர் மலையாள சினிமாவில் 99 படங்களுக்குப் பணிபுரிந்தவர். பல முறை விருது பெற்றவர். இது அவருக்கு 100வது படம். சிறைச்சாலையை அவ்வளவு இயல்பாகச் சித்தரித்ததிலும் மற்ற காட்சிகளில் குமரி மாவட்டத்தின் வட்டாரத் தன்மையைக் கொண்டு வந்ததிலும் கலை இயக்கம் என்பதே தெரியாமல் மிரட்டியிருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பணிபுரிந்த மாலினிதான் ஆடை வடிவமைப்பாளர்.
இத்தனை வருடங்களுக்குப் பின்னர் படம் இயக்க வந்தது ஏன்?
15 வருடங்களுக்கு முன்பே படம் இயக்கும்படி என்னிடம் பல தயாரிப்பாளர்கள் கேட்டார்கள். அப்போது முழு வீச்சில் ஓய்வின்றி நடன இயக்கத்தில் ஈடுபட்டிருந்தேன். செய்கிற வேலையைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமே என்று அப்போது ‘டைரக்ஷன்’ வாய்ப்புகளைப் பணிவுடன் மறுத்தேன். இப்போது ஆண்களுக்கு இணையாக பெண்கள் டைரக்ஷனில் சாதித்துக்கொண்டிருக்கும் காலம். இதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நான் எண்ணியபோது ‘ஹே சினாமிகா’ பட வாய்ப்பு தேடி வந்தது. என்னுடைய ‘டைரக்ஷன்’ வேலைகள் பாதிக்காத வகையில் நடன இயக்கத்தையும் தொடர்ந்து வருகிறேன். இந்தப் படத்தின் பாடல்களுக்கும் நான்தான் நடனம் அமைத்திருக்கிறேன்.