

பெண் கல்வியின் அவசியத்தைத் துணிச்சலாகப் பேசியிருக்கும் ‘அயலி’ இணையத் தொடருக்கு பாராட்டுகள் குவிந்தபடியிருக்கின்றன. அதில் தமிழ்ச்செல்வி என்கிற முதன்மைக் கதாபாத்திரத்துக்கு தனது இயல்பான நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார் அபி நட்சத்திரா. ஒரு நட்சத்திர நடிகருக்கு இணையான புகழை ஒரே படைப்பின் மூலம் எட்டியிருக்கிறார். அவரிடம் ‘அயலி’ தொடரில் நடித்த தருணங்கள் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
தனது பள்ளிக் கல்வியைக் காப்பாற்றிக்கொள்ள, பருவமடைந்ததை மறைத்துவிடும் பெண்ணாக நடிப்பதற்குத் தயக்கம் இருந்ததா?
தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தைப் பற்றி இயக்குநர் சொன்னபோது எனக்கும் அப்பாவுக்கும் பிடித்திருந்தது. மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், இப்போதும் வெவ்வேறு வடிவங்களில் பெண்களை அடிமைப்படுத்தும் பழக்க, வழக்கங்களுக்கு எதிரான வசனங்களைப் பேச வேண்டியிருக்கும். அப்படிப் பேசி நடித்தால் விமர்சனங்கள் வரும் என்பதை முன்பே அறிந்திருந்தோம். எனினும் இதுபோன்ற வாய்ப்பைத் தவறவிட்டால் திரும்பவும் கிடைக்காமல் போய்விடலாம் என்பதால் ‘டபுள் ஓகே’ சொன்னோம்.
உங்கள் குடும்பப் பின்னணி என்ன? திரைக்குள் எப்படி வந்தீர்கள்?
என்னுடைய அப்பா மணிகண்டன் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் சாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். குடும்பச் சூழல் காரணமாக சினிமாவிலிருந்து விலகிவிட்டார். அவரது கனவை நான் தொடர விரும்பினேன். அதில் அப்பாவுக்கு மகிழ்ச்சி. ‘அயலி’ அமைவதற்கு முன், சில விளம்பரப் படங்களிலும், ‘ரஜினி முருகன்’, ‘தர்மதுரை’, ‘மூக்குத்தி அம்மன்’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறேன்.
மாதவிடாய் பிரச்சினை தொடர்பான காட்சிகளை எடுத்தபோது, அவற்றில் நடிப்பது சவாலாக இருந்ததா?
‘அயலி’யில் வருவது போன்ற ஒரு சம்பவம் எனக்கும் நடந்திருக்கிறது. ‘பெண் பிள்ளைக்குக் கல்லூரிப் படிப்புத் தேவையா?’ என என் பெற்றோரிடம் உறவினர்கள் கேட்டிருக்கின்றனர். அவற்றையெல்லாம் தாண்டித்தான் நான் படிக்கவும் திரைத்துறையில் நடிக்கவும் என்னுடைய பெற்றோர் எனக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதனால் தமிழ்ச்செல்வியாகக் கதாபாத்திரத்துடன் மனதைப் பொருத்திக்கொண்டு நடிக்க முடிந்தது. மாதவிடாய் தொடர்பான காட்சிகள், தாலியைக் கழற்றி எறியும் காட்சி ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் நடித்தற்கு, இயக்குநர் உட்பட படக்குழுவில் உள்ள அனைவரும் ஊக்கம் அளித்தனர்.
‘அயலி’யில் தமிழ்ச்செல்விக்கு ஒரு கனவு இருந்ததுபோல் நிஜ வாழ்க்கையில் உங்களுக்கும் இருக்கிறதா?
நிச்சயமாக.. நடிப்பைத் தவிர்த்து, திரைத் துறையில் இயங்குவது பற்றி நிறைய கற்றுக்கொள்கிறேன். இங்கே மற்ற பிரிவுகளில் இயங்கி வரும் பெண்கள் எனக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். ஒரு நாள் இயக்குநராக வேண்டுமென்பதும் என் கனவு!
தமிழ்ச்செல்விக்குக் கிடைத்த மறக்க முடியாதப் பாராட்டுகள்?
சேது மாமா (விஜய் சேதுபதி), பாலாஜி அண்ணா (ஆர்.ஜே.பாலாஜி), மூத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அழைத்துப் பாராட்டினார்கள். ‘அயலி’ சிறப்புத் திரையிடலைப் பார்த்த ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார், ‘உன்னை எங்கம்மா கண்டுபிடிச்சாங்க?!’ எனக் கேட்டுப் பாராட்டினார். வாழ்த்துகளும் பாராட்டுகளும் வந்தவண்ணமேயிருக்கின்றன. இதற்கு முன் சில விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறேன். உயரம் குறைவாக இருப்பதால் உருவக் கேலிக்கும் ஆளாகியிருக்கிறேன். சாய் பல்லவியின் இயல்பான நடிப்பு, அவரது ஈர்ப்பான நடனம், திரைக்குப் பின்னால் இருக்கும் அவரது எளிமை ஆகியவற்றை நானும் பின்பற்ற விரும்புகிறேன்.
அடுத்தது என்ன?
இரண்டு பெண் மையக் கதைகளில் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறேன். ‘அயலி’க்கு இவ்வளவு பெரிய வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. படிப்பையும் நடிப்பையும் சமநிலையில் வைத்திருக்க முயற்சி செய்கிறேன்.