ஆளுமை மிக்கத் தலைவர் தேவை! - கலைப்புலி ஜி. சேகரன் பேட்டி

கலைப்புலி ஜி. சேகரன்
கலைப்புலி ஜி. சேகரன்
Updated on
4 min read

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், தொழிற்சங்கவாதி என பல தளங்களில் இயங்கி வருபவர் கலைப்புலி ஜி. சேகரன். திரையுலகில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவரான இவர், சிறு முதலீட்டுப் படங்களின் மீது அக்கறையும் கரிசனமும் கொண்டவர். இந்து தமிழ் திசைக்காக அவருடன் பிரத்யேகமாக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

தமிழ்நாட்டில் மொத்தம் 8 விநியோக ஏரியாக்கள் இருக்கின்றன. அந்தந்தப் பகுதியில் அனுபவம் மிகுந்த விநியோகஸ்தர்களுக்குத் தயாரிப்பாளர்கள் தனித் தனியே படத்தை விற்பார்கள். விநியோகஸ்தர்கள்தான் திரையரங்குகளுக்கு ‘டேர்ம்ஸ்’ அடிப்படையில் படத்தைக் கொடுப்பார்கள். இந்த ‘டிஸ்ட்ரிப்யூஷன்’ முறை இன்று சுத்தமாக ஒழிந்து போய்விட்டதே?

அந்த முறையைக் கைவிட்டதுதான் இன்று எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம். கடந்த 75 வருடங்களாக ‘டிஸ்ட்ரிப்யூஷன்’ முறை வியாபாரம் தான் தயாரிப்பாளர்கள், விநியோகஸ் தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகிய அனைவரையும் செல்வச் செழிப்புடன் வைத்திருந்தது. ஏனென்றால் அதில் கொடுக்கல், வாங்கல் மிகச் சரியாக இருந்தது. அதில் அரசாங்கத்துக்கான வரியும் மிக வெளிப்படையாகச் சென்று சேர்ந்தது.

அப்போதெல்லாம், ஏவி.எம்., விஜயா வாஹினி, தேவர் பிலிம்ஸ், சத்யா மூவீஸ், சிவாஜி பிலிம்ஸ் என்று ஒவ்வொரு பெரிய நிறுவனத்துக்கும் அவர்கள் தயாரிக்கும் படங்களை வாங்கி வெளியிட நிரந்தரமான விநியோகஸ்தர்கள் இருந்தார்கள். இந்த முறையைக் கைவிட்டு, எப்போது, ‘அவுட் ரேட்’ முறையிலும் ‘மினிமம் கேரண்டி’ முறையிலும் பட வியாபாரம், பட விநியோகம் தொடங்கியதோ, அப்போதே தயாரிப்பாளர்கள் பொத் பொத்தென்று கீழே விழுந்து எழவே முடியாமல் முடங்கிப் போனார்கள்.

மூன்று முதல் 10 படம் வரைத் தயாரித்தவர்கள்கூட, ‘நமக்குச் சங்கம் ஓய்வூதியம் கொடுக்காதா?’ என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஒரு காலத்தில் பட விநியோக அலுவலகங் களால் நிறைந்து, ஒரு சினிமா சந்தையைப் போல் காட்சியளித்த சென்னை, அண்ணா சாலையின் மீரான் சாகிப் தெரு, இன்று மின்னணுப் பொருட்களின் விற்பனைச் சந்தையாக மாறிப்போய்விட்டது. கொடிகட்டிப் பறந்த விநியோகஸ்தர்கள், இன்று திரையரங்குகளில் ‘பிலிம் ரெப்பரசெண்ட்டேடிவ்’ என்கிற படப் பிரதிநிதிகளாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலக் கொடுமையை என்னவென்று சொல்ல..?

‘அவுட் ரேட்’ , ‘மினிமம் கியாரண்டி’ முறையில் என்ன சிக்கல்? - இந்த முறையில், தயாரிப்பாளர், பாதுகாப்பான குறைந்தபட்சம் லாபம் சம்பாதிப்பதுபோல் தெரியும். ஆனால், நிச்சய வெற்றி என்று தெரிந்து, ‘அவுட் ரேட்டு’க்கு வாங்குபவர்களுக்குத்தான் அதிக லாபம் போய்ச் சேரும். இதே முறையில் பட விநியோகமும் நடக்கத் தொடங்கியபோது, திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகப் பெரிய தொழில் அழுத்தம் உருவானது. எப்படியென்றால், “நான் ‘அவுட் ரேட்’டில் படத்தை வாங்கிவிட்டேன்; எனக்கு ‘மினிமம் கேரண்டி’ உத்திரவாதம் கொடு.

குறிப்பிட்டத் தொகைக்குமேல் படம் வசூல் செய்தால் உனக்குப் பாதி, எனக்குப் பாதி” என்று விநியோகஸ்தர்கள் நிர்ப்பந்தம் செய்யத் தொடங்கினார்கள். இதனால், நஷ்டத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள, அன்றைக்குத் திரையரங்க உரிமையாளர்களில் பலர், பலவித குறுக்கு வழிகளை நாடினார்கள். அதில் ஒன்று திரையரங்க நிர்வாகமே டிக்கெட்டுகளை ‘வெளியே’ விற்கத் தொடங்கியது. அடுத்து அரசு நிர்ணயித்தக் கட்டணத்தைப் பின்பற்றினால் மினிமம் கேரண்டி கொடுக்கமுடியாது என்கிற நிலை வந்துவிடும் என்பதை அறிந்து, 50 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்க்கு ‘பிளாட் ரேட்’டில் விற்கத் தொடங்கினார்கள்.

பார்வையாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கவே, டோக்கன் கொடுத்து அரங்குக்குள் அனுப்புவது, டிக்கெட் கட்டணத்தை வாங்கிக்கொண்டு அனுப்புவது என பலவும் அப்போது வழக்கத்தில் இருந்தன. இதையெல்லாம் பார்த்த விநியோகஸ்தர்கள் அடுத்து என்ன செய்தார்கள் என்றால், ‘பிளாட் ரேட்டுக்கு விற்கிறாய் அல்லவா? நான் சொல்லும் ரேட்டுக்கு விற்றுக்கொடு’ என்று சொல்லத் தொடங்கினார்கள். இவற்றின் தொடர்ச்சியாக, பெரிய கதாநாயகர்களின் படம் வரும்போது முதல் 4 காட்சிகள் தொடங்கி 6 காட்சிகள் வரை 500 முதல் 1000 ரூபாய்க்கு ‘பிளாட் ரேட்’டில் விற்கும் கலாச்சாரம் உருவாகி சினிமாவையே அழித்துவிட்டது.

300 கோடி 350 கோடி வசூல் என்று பெரிய ஹீரோக்கள் தங்கள் படங்களின் வசூல் குறித்து விளம்பரம் செய்வது எதற்காக? - வேறு எதற்காக? தங்கள் படங்களின் பட்ஜெட்டையும் சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்துவதற்காக. இதனால், 100 ரூபாய் டிக்கெட் விலையில் படத்தைப் பார்க்க வேண்டிய இந்த நடிகர்களின் ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர், அது பற்றிய கவலையின்றி, இந்த வசூல் கோதாவில் தன்னுடைய நடிகருக்காக சமூக ஊடகத்தில் குஸ்தி செய்கிறார்கள்.

இன்னொரு பக்கம் சமூக ஊடகத்தில் சில்லறைகளுக்காக இரந்து வாழும் புல்லுருவிகளில் பலர், வசூல் கணக்கென்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். ஆன்லைன் முறையில் டிக்கெட் விற்பனையை ‘ஒற்றைச் சாளர முறை’க்கு ஒழுங்குபடுத்தினால் இந்த அக்கப்போர்களுக்கு இடமில்லாமல் ஆகிவிடும். அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் கிடைப்பதுடன், நடிகர்களின் உண்மையான வசூல் மார்க்கெட் என்னவென்று தெரிந்துவிடும்.

டிக்கெட் நியூ, புக் மை ஷோ போன்ற ஆன்லைன் நிறுவனங்களை அனுமதிக்கும் திரையரங்க உரிமையாளர்கள், டிக்கெட் விற்பனையை ‘ஒற்றைச் சாளர முறை’க்குள் கொண்டு வரும்படி அரசை ஏன் வலியுறுத்துவதில்லை? - எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்றுதான். அந்த நிறுவனங்கள் வாங்கும் ‘சர்வீஸ் சார்ஜ்’ கட்டணத்தின் ஒரு பகுதியைத் திரையரங்க உரிமை யாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். அதில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பகுதியைக் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். ஒரு மின்னல் வேக சர்வரும் கொஞ்சம் பராமரிப்பு ஊழியர்களும் இருந்தால்போதும் இதை அரசு சாதித்துவிடலாம். இந்தியாவில் சில மாநிலங்கள் இதைச் செய்துவிட்டன.

‘உதயநிதி ஸ்டாலின் ஏகபோகமாக எல்லாப் படங்களையும் வளைத்துப் பிடித்து வாங்கி விடுகிறார்; அவரை மீறி தமிழ் சினிமாவில் வியாபாரம் இல்லை’ என்கிற பேச்சு கோலிவுட்டில் இருக்கிறதே?

உதயநிதியால் படவுலகத்துக்கு லாபம் இருக்கிறதே தவிர நஷ்டமோ, சங்கடமோ இல்லை. ‘எம்.ஜி ’ என்கிற ‘மினிமம் கியாரண்டி’ வியாபாரத்தில் அவர் ஏனோதானோ என்று நடந்துகொள்வதில்லை. இதனால், எல்லா திரையரங்க உரிமையாளர்களும் அவரிடம் சரியாகக் கணக்குக் கொடுக்கிறார்கள்.

விஜய், அஜித் மாதிரி பெரிய ஹீரோ படங்களைக் கொடுக்கும்போது இவ்வளவு அட்வான்ஸ் கொடுத்தால்தான் படம் கொடுப்போம் என்று அவர் சொல்வதில்லை. நியாயமாக ஒரு தொகையை வாங்கிக்கொண்டு படத்தைக் கொடுத்துவிடுகிறார்கள். நஷ்டமென்றால் நிறைய அனுசரித்துப் போகிறார்கள். இந்த நெகிழ்வுத் தன்மைதான் உதயநிதியின் பட வியாபார வெற்றிக்குக் காரணம்.

இன்று சிறு முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு திரையரங்குகளில் இடமில்லை. அப்படியே திரையரங்குகளுக்கு வாடகை கட்டி சில படங்களை வெளியிட்டாலும் அவற்றைப் பார்வையாளர்கள் ஆதரிப்பதில்லை. கடந்த இரு பத்தாண்டுகளாக இந்த நிலை மாறவே இல்லையே? - ‘16 வயதினிலே’ படமோ, ‘அன்னக்கிளி’யோ.. ‘ஒரு தலை ராக’மோ.. ‘சேது’வோ, ‘அழகி’யோ ரிலீஸ் ஆனபோது முதல் மூன்று நாட்களுக்கு திரையரங்கில் நாதி கிடையாது. வந்த 40 பேர், வாய் வழியாகச் சொல்லி நான்காவது நாளிலிருந்து 400 பேர் வந்து, பிறகு வார இறுதியில் ஹவுஸ்ஃபுல் என்கிற நிலையை எட்டி வெற்றிபெற்ற கதைப் படங்கள் அவை.

அதுபோல், ஆயிரக் கணக்கான சிறிய படங்கள் ஜெயித்த காலம் ஒன்றிருந்தது. அதற்கு முதல் காரணம், அவற்றில் நல்ல கதையும், நடிப்பும், இசையும், இயக்கமும் இருந்தன. மிக மிக முக்கியமாக, முதல் மூன்று நாட்களுக்குக் கூட்டம் வராவிட்டாலும் ‘சிங்கிள் திரை’ திரையரங்க உரிமையாளர்கள் பொறுமையுடன் காத்திருந்தார்கள்.

ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். டிஜிட்டல் ஒளிப்பதிவு வந்தபிறகு, சினிமா பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாதவர்கள், முறைகேடான வழியில் பணத்தை ஈட்டிக் குவித்தவர்களில் பலர், இங்கே இழிவான எண்ணத்துடன் வருபவர்கள் என ஒரு பெருங்கூட்டம் உள்ளே நுழைந்து சினிமா என்கிற பெயரில் குப்பைகளை எடுத்துத் திரையரங்குகளுக்குக் கொண்டு வருகிறார்கள். தரமான சிறு படங்களை ஆதரித்து வந்த ரசிகர்கள், அவற்றையும் இந்தக் குப்பைகளின் கூட்டத்தில் ஒன்று என எண்ணிக்கொண்டு கண்டுகொள்ளாமல் கடந்துவிடுகிறார்கள்.

இந்த இடத்தில், தரமான சிறு படங்களைக் காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தயாரிப்பாளர் சங்கத்துக்கு இருக்கிறது. இது மாற வேண்டும் என்றால் தாய்ச் சங்கமான ‘புரொடியூசர் கவுன்சி’லுக்கு ஆளுமை மிக்கத் தலைவர்கள் வரவேண்டும். சங்கம் பிரச்சினைகளை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் பேசித் தீர்த்தால்தான், பிரச்சினையுடன் வரும் உறுப்பினர் பலனடைவார். அதன்மூலம் சங்கத்துக்கு வருமானம் வரும். அந்தப் பணத்திலிருந்து உறுப்பினர்களுக்கு நலத் திட்டங்களைச் செய்யமுடியும்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? - அதற்குத்தான் அதிக பொறுப்பும் கடமையும் இருக்கிறது. இன்று வளர்ந்து நிற்கும் ஓடிடியும் தரமான சிறு படங்களைப் புறக்கணிக்கின்றன. ‘முதலில் திரையரங்குகளில் வெளியிட்டுவிட்டு பிறகு வாருங்கள். அதன் வெற்றியைப் பொறுத்து வாங்கிக் கொள்கிறோம்’ என்கிறார்கள். இது கருணையற்ற அணுகுமுறை. ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களாக இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் புதியவர்களுக்கு ஆதரவு அளித்ததால்தான் ஜெய்சங்கர் தொடங்கி, ரஜினி, கமல் வரை அடுத்த தலைமுறையினர் வளர்ந்தார்கள்.

ஆனால், இன்று அரசியலை ஒரு இலக்காக வைத்துக்கொண்டு சினிமாவில் முன்னணியில் இருப்பவர்கள்கூட சிறு படங்கள் பற்றி வாய் திறப்பதில்லையே..! 8 திருவிழா காலங்களில் மட்டும் வெளியான பெரிய படங்கள், இப்போது ஆண்டு முழுவதும் வெளியாகின்றன. யானைகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் சின்னஞ் சிறு எலிகளையும் ஓடச் சொல்வது என்ன நியாயம்? முதலில் சிறு படங்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் மதியக் காட்சிக்கு இடமளிக்க முன்வரவேண்டும்.

யானைகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் சின்னஞ் சிறு எலிகளையும் ஓடச் சொல்வது என்ன நியாயம்? முதலில் சிறு படங்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் மதியக் காட்சிக்கு இடமளிக்க முன்வரவேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in