‘மாநகரம் 2’ படத்தில் லோகேஷுடன் இணைவேன்! - சந்தீப் கிஷன் நேர்காணல்

‘மாநகரம் 2’ படத்தில் லோகேஷுடன் இணைவேன்! - சந்தீப் கிஷன் நேர்காணல்
Updated on
2 min read

கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக வாழ்க்கையைத் தொடங்கி, லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான ‘மாநகரம்’ படத்தில் நாயகனாக கவனிக்க வைத்தவர் சந்தீப் கிஷன். பின்னர் தெலுங்குப் படவுலகில் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார். இடையில் ‘மாயவன்’ ஆகத் தமிழில் முகம் காட்டினார். தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியாகும் ‘மைக்கேல்’ படத்தின் மூலம் தமிழில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முழு நீள ஆக் ஷன் நாயகனாக வந்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

சென்னையில் பிறந்து, வளர்ந்து தெலுங்கு சினிமாவில் அடையாளம் பெற்றிருக்கிறீர்கள். தமிழில் உரிய அடையாளம் கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறதா?

சுத்தமாக இல்லை. நான் வாய்ப்புத் தேடத் தொடங்கிய புதிதில் நிறைய ‘ஆடிஷன்’களுக்குப் போனேன். அப்போது ஒரே நேரத்தில் இரண்டு தெலுங்குப் படங்கள், ஒரு தமிழ் படம், ஒரு இந்திப் படம் என மூன்று மொழிகளில் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தன. இந்தியில் ஒரு வார்த்தைகூடத் தெரியாது. ஆனால், தைரியமாகச் சென்றேன். தமிழில் நடிக்கத் தொடங்கிய படம் பாதியில் நின்றுவிட்டது. ஆனால், தெலுங்கில் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற, அங்கே என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள்.

முதலில் எங்காவது ஓர் இடத்தில் உருப்படியாக கவனம் செலுத்தி என்னை நிலைநிறுத்திக்கொள்ள முடிவு செய்தேன். தெலுங்கில் அது சாத்தியமானது. அங்கே வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு கட்டத்தில் நானே தயாரிப்பாளராகவும் ஆனேன். இரண்டு மூன்று சினிமா உலகங்களில் ஒரே நேரத்தில் புதுமுகமாக இயங்குவது ரொம்பவே கஷ்டம். பட்ஜெட், ரிலீஸ் என பல பிரச்சினைகள் இருக்கின்றன. தெலுங்கில் நிலையான இடம் கிடைத்த பிறகு சொந்த ஊரிலும் எனது பிடிமானம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போதுதான், ‘மாநகரம்’ வந்து அமைந்தது.

‘மாநகரம்’ படத்தின் கதையுடன் லோகேஷ் கனகராஜ் அலைந்தபோது அவருக்கு முதல் பட வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், அதன் பிறகு அவருடைய எந்த படத்திலும் நீங்கள் இல்லையே?

அவர் இதுவரை இயக்கியிருப்பதே 4 படங்கள்தான். அதில் முதல் படத்தில் நான் இருந்தேன். லோகேஷும் நானும் இப்போதும் நெருக்கமான நண்பர்கள்தான். அவருக்கு நன்றாகவே தெரியும்; இதுவரை நான் ‘ரோல்’ தேடிப் போனதே இல்லை. ‘ஒரு கதையைத் தாங்கிச் செல்லும் முகம் நீ.. நானே கூப்பிட்டாலும் ரோல் எதுவும் செய்துவிடாதே’ என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது ரூ.250 கோடி பட்ஜெட்டில் ரூ. 450 கோடி வசூல் ஈட்டும் படங்களை இயக்குபவராக இருக்கிறார்.

அதற்கு இணையாக என்னை நான் வளர்த்துக்கொண்ட பிறகு அவரது இயக்கத்தில் மீண்டும் இணைவேன். அது ‘மாநகரம் 2’ படமாக இருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதற்கு முதல் படியாகத்தான் ‘மைக்கேல்’ படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில், இந்தியாவில் உள்ள எல்லா மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற படமாக உருவாக்கியிருக்கிறோம்.

‘மைக்கேல்’ எந்த வகையில் பான் இந்தியா படம்?

தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு நான் நெருக்க மானவன். ‘தி பேமிலி மேன்’ இணையத் தொடரின் சீசன்கள் வழியாக இந்திப் பார்வையாளர்களுக்கும் நான் பரிச்சயமானவன்தான். அதனால் இடம், மொழி ஆகியவற்றைக் கடந்து எல்லா ரசிகர்களையும் எளிதில் சென்று சேரும் ஒரு கதையைத் தேடியபோது, அது ரஞ்சித் ஜெயக்கொடியிடம் இருந்தது. கதாநாயகனின் பயணம்தான் கதை. காதல், ஆக் ஷன், கேங்ஸ்டர், டிராமா என எல்லாம் கலவையாக இருக்கின்றன. தொண்ணூறுகளில் 90 சதவீதம் கதை நடக்கிறது. எழுபது, எண்பது கால கட்டங்களில் நடக்கும் இரண்டு சின்னச்சின்ன ப்ளாஷ் பேக்குகள் இருக்கின்றன.

விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நட்புக்காக வருகிறாரா?

இல்லை. அதைவிடச் சற்றுப் பெரிய, கெத்தான ஒரு கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். தெலுங்கு, இந்தியில் அவரது கொடியும் பறக்கத் தொடங்கியிருக்கும் நேரத்தில் ‘மைக்கே’லில் அவர் இடம்பெற்றது எங்களுக்கு பெரும் பலம். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தன்னுடைய முந்தைய படம்போல் அடுத்த படத்தை உருவாக்க மாட்டார்.

இந்தப் படத்திலும் அப்படித்தான். கதை எதைக் கேட்கிறதோ, அந்த உலகத்தை உருவாக்கும் அட்டகாசமான இயக்குநர். தெலுங்கின் மூன்று முன்னணிக் கதாநாயகர்களின் படங்களை இயக்குவதற்காக இப்போதே அவரை ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறார்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in