

அடையாறு திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பிரிவில் பயின்று, ‘நாற்காலிக்காரர்’ உள்ளிட்டக் கூத்துப்பட்டறையின் புகழ்பெற்ற நவீன நாடகங்கள் பலவற்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து, ‘புன்னகை மன்ன’னில் பாலசந்தரின் அறிமுகமாகத் திரைக்குள் வந்தவர் ஜி.எம். சுந்தர்.
புதிய தலைமுறை இயக்குநர்களின் படங்களிலும் அஜித் படங்களிலும் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுந்தர், தற்போது ‘துணிவு’ படத்தில், கொள்ளை நடைபெறும் வங்கியின் மேலாளராக நடித்திருந்தார். தனித்த பாணி என்று வைத்துக் கொள்ளாமல், ஏற்கும் கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு, ‘மெத்தட் ஆக்டிங்’ முறையில் நடிப்பை வெளிப்படுத்துவதில் திறமையாளர். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
‘சார்பட்டா பரப்பரை’ படத்தில் துரைக்கண்ணு வாத்தியாராக மட்டும் தெரிந்தீர்கள். அது எப்படி?
இயக்குநர் இரஞ்சித் தான் காரணம். ஒவ்வொரு கேரக்டருக்கும் ‘ரெப்ஃபரென்ஸ்’ என்ன, தோற்றம் என்ன, பேசும் முறை என்ன என்பதையெல்லாம் சொல்லி, அனைத்து நடிகர்களையும் திரட்டி ஒத்திகை நடத்தினார். ஒத்திகையிலேயே கேரக்டருக்கான ‘மனநிலை’யை உருவாக்கிவிட்டார். அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் அனைவரும் கேரக்டர்களாகத் திரிந்துகொண்டிருந்தோம். ஒத்திகையால் படப்பிடிப்பில் நடிப்பது இன்னும் எளிதாக இருந்தது. ‘டப்பிங்’கிலும் நடிப்பை இன்னும் மெருகேற்ற முடிந்தது.
அடையாறு திரைப்படக் கல்லூரியில் உங்களுடன் பயின்ற ‘பேச் மேட்’களில் யாருக்கெல்லாம் அடையாளம் கிடைத்திருக்கிறது?
என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள். நாங்கள் மொத்தம் இருபது பேர். நாசர், தலைவாசல் விஜய், பப்லூ, கலை ராணி, நான், அர்ச்சனா, சின்னத்திரையில் புகழ்பெற்ற முரளி என்று பலர் அடையாளம் பெற்றிருக்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பார்வையாளர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறோம்.
புனே திரைப்படக் கல்லூரிக்கு இணையாக தரமணி திரைப்படக் கல்லூரியை வளர்த்தெடுக்கத் தவறிவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
நிச்சயமாக.. திறமையான ஆசிரியர்கள் இருந்தால்தான் அவர்களிடம் பயிற்சி பெற்று வெளியே வருபவர்களும் திறமையை வளர்த்துக் கொண்டவர்களாக இருப்பார்கள். எனது சொந்த ஆர்வம் காரணமாகத்தான் ‘மெத்தட் ஆக்டிங்’ பற்றி அறிந்துகொண்டு அதை வரையறுத்து போதித்த ரஷ்யாவின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியைத் தேடிப் பிடித்துப் படித்தேன். பிறகு கூத்துப்பட்டறையில் சேர்ந்து ‘தியேட்டர் ஆக்டிங்’ கற்றுக்கொண்டேன். அதன் பின்னர், புனே திரைப்படக் கல்லூரிக்குச் சென்று ‘பிலிம் அப்ரிசியேஷன்’ கோர்ஸ் படித்தேன்.
ஒரு மாதம் நடத்தப்பட்ட அந்த ஒரு பயிற்சி, 4 வருடம் சினிமாவின் பல பிரிவுகளைப் பயில்வதற்கு இணையானது. உலகைத் திறந்து காட்டிய பயிற்சி அது. அதுபோல் ஒரு தரமான பயிற்சியை நாம் தரமணியில் இன்னும் உருவாக்கவில்லை. இப்படி புனேவுக்கும் தரமணிக்குமான வேறுபாடுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
பல்வேறு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கும் உங்களைப் போன்ற கலைஞர்களுக்கு, நட்சத்திர நடிகர்கள், நட்சத்திர இயக்குநர்களின் ஆதரவு தேவைப்படுகிறதா?
சந்தேகமே வேண்டாம். அந்த ஆதரவு இருந்தால்தான் ஒரு கலைஞன் வளரவே முடியும். அந்தக் காலத்திலிருந்தே சிறந்த கலை வடிவங்களை, அதில் பங்குபெறும் கலைஞர்களை, கவிஞர்களை புரவலராக இருந்து ஆதரிப்பதும் அவர்களைக் காப்பதன் வழியாக அக்கலைகளைக் காத்தல் என்பது நம் பண்பாடு, மரபு. அதுதான் சினிமாவிலும் இருக்கிறது.
கமல் சார், ரஜினி சார் தொடங்கி, இன்றைக்கு நிபந்தனையற்று என்னை ஆதரிக்கிற அஜித் சார் வரை அது தொடர்கிறது. என்னை பாலசந்தர் சாரிடம் அறிமுகப்படுத்தி அனந்து சார் ஆதரிக்காமல் போயிருந்தால் நான் கேபியின் அறிமுகம் என்று சொல்லிகொள்ள முடியுமா? நலன் குமாரசாமி ‘காதலும் கடந்துபோகும்’ படத்தில் எனக்கு ரீ எண்ட்ரி கொடுக்காவிட்டால், நான் மீண்டும் பிஸியாகியிருக்க முடியுமா? அவரைத் தொடர்ந்து, ஹெச்.வினோத், பா. இரஞ்சித் உள்ளிட்ட பல இத்தலைமுறையின் இயக்குநர்கள் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவனாக என்னை ஏற்று ஆதரிக்கிறார்கள்.
இப்படி ஆதரித்தல் என்பது தலைமுறைகள் தோறும் தொடரும். ஆதரித்தல் என்பதில் பார்வையாளர்களின் பங்கும் மிக முக்கியமானது. அவர்களுடைய அங்கீகரிப்பும் ஆதரவும் இல்லையென்றால் எவ்வளவு சிறந்த கலைஞனாக இருந்தாலும் ‘சர்வைவ்’ ஆக முடியாது.
உங்கள் பார்வையில் அஜித் பற்றி கூறுங்கள்..
‘வலிமை’யில் அஜித்துடன் பழகிய நாட்களை எப்படி மறக்க முடியாதோ அப்படித்தான் ‘துணிவு’ம். பணிவு, துணிவு, தேடல், உழைப்பு, நட்பு, பொறுப்பு, மரியாதை, நேயம் போன்ற வார்த்தைகள் எல்லாம் ‘ரியல் லைஃப்’ அஜித்திடம் முழுமையாக அர்த்தம் பெற்றிருக்கின்றன. படப்பிடிப்புத் தளத்துக்கு உள்ளே நுழைந்ததும் படக்குழுவில் உள்ள கடைசி புரோடெக் ஷன் பையன் வரை அத்தனை பேருக்கும் வணக்கம் சொல்வார் அஜித். படப்பிடிப்பு முடிந்து கிளம்பும்போதும் எல்லோரிடமும் சொல்லிவிட்டுத்தான் கிளம்புவார்.
இதை, ஒரு நாள் இரண்டு நாள் அல்ல; ‘துணி’வில் அவருடன் படப்பிடிப்பில் இருந்த 35 நாட்களும் பார்த்திருக்கிறேன். ‘நான் என் குழந்தைகளுக்கு பொறுப்பான ஒரு அப்பாவாக இருக்கணும் சுந்தர் சார்.. நான் நடிக்கிற படத்தைப் பார்த்துட்டு அவங்களுக்கு என் மேல மரியாதை வரணும்’ என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்தப் பொறுப்புணர்வை அஜித்தின் எல்லா படங்களிலும் பார்க்கலாம்.
ஜி.எம்.சுந்தரின் வீடியோ நேர்காணலை இங்கு வெளியாகியுள்ள க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து பாருங்கள்: