

கினோ 2.0
தரமான கேமராக்கள் திரை ஆர்வலர்களின் கைகளுக்கு எட்டிவிட்ட காலம் இது. இச்சமயத்தில், ‘பிலிம் மேக்கிங்’ உத்திகளும் நுட்பங்களும் பெரும் தொழில் ரகசியமாக பொத்தி வைக்கப்பட்டிருந்த உறைநிலையை உடைத்துக் காட்டியது பேசாமொழிப் பதிப்பகம். திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் உள்ளிட்ட கலை நுட்பங்களை படங்களுடன் விளக்கிக் கற்றுக்கொடுக்கும் திரைப்பட உருவாக்க நூல்களை வரிசையாக வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில், திரைப்பட உருவாக்கத்தை இயக்குநரின் பார்வையிலிருந்து அணுகிய ‘கினோ’ புத்தகத்தை வெளியிட்டு பரவலான வரவேற்பையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக ‘கினோ 2.0’ என்கிற தலைப்பில் க்றிஸ்டோபர் கென்வொர்த்தியின் ‘மாஸ்டர் ஷாட்ஸ்’ புத்தகத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
காட்சி ரீதியாகவும் திரை அனுபவம் விடுபடாத வகையிலும் உரையாடல் காட்சிகளை எப்படிப் படமாக்குவது என்பதை 11 அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ள 94 கட்டுரைகள் மூலம், உரிய ஷாட் விளக்கப் படங்களுடன் அச்சிட்டிருக்கிறார்கள். எளிய தமிழில் திஷா மொழி பெயர்த்துள்ளார்.
356 பக்கங்கள்
விலை ரூபாய் 480/-
பேசாமொழி பதிப்பகம்
குருதியில் படிந்த மானுடம்
வெவ்வேறு காலகட்ட யுத்தக் களங்களைச் சித்திரிக்கும் 15 உலகப் படங்களைப் பற்றி எழுத்தாளர், திரைக்கதாசிரியர் விசுவாமித்திரன் சிவகுமார் எழுதியிருக்கும் விமர்சனத் தொகுப்பு இது. முதல் பதிப்பு 12 கட்டுரைகளுடன் 2008இல் வெளியானது. தற்போது கூடுதலாக 3 கட்டுரைகளைச் சேர்த்து சீராக்கம் செய்யப்பட்ட பதிப்பாக ‘செவ்வகம்' பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது.
அரங்கேறிவரும் ஒடுக்குமுறைகள், வன்முறைகள் குறித்த உரையாடலை உலகெங்கிலும் களமாடச் செய்வதும் சமரசமற்ற விமர்சனங்கள் வழியே விழிப்புணர்வை அடையச் செய்வதும் சமகாலத்திய படைப்புகளின் தலையாயக் கடமை.
மற்ற கலை வடிவங்களைப் போலவே, திரைப்படக் கலையும் தனது செறிவான பங்களிப்பை இந்த உலகளாவிய உரிமைப் போராட்டத்துக்குக் கையளித்திருக்கிறது. அந்த நேயம் மிகுந்த குரல்களைத் தாங்கிய சிறந்த திரைப்படங்களின் மீதான ரசனையார்ந்த விமர்சன ஆக்கங்களை கொண்டிருக்கிறது இப்புத்தகம்.
பக்கங்கள்: 176
விலை ரூபாய். 250/-
'செவ்வகம்' பதிப்பகம்
ஆடல் பாடல் சினிமா: கல்கியின் விமர்சனங்கள்
தமிழ் சினிமா பேசத் தொடங்கிய தொடக்க ஆண்டுகளில் அதனை மதிப்பீடு செய்ய தேர்ச்சியான விமர்சகர்கள் இல்லாத வெறுமை நிலவியது. அதைப் போக்க வந்த சிலரில் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு கவனத்துக்குரியதாக மாறியது. முப்பதுகளில் தொடங்கி அடுத்த வந்த இரு பத்தாண்டுகளில் அவர் செய்த விமர்சனப் பங்களிப்புகளை விரிவாகத் திரட்டித் தொகுத்திருக்கிறார் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஊடகத் துறைப் பேராசிரியராகப் பணி புரிந்து வரும் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன். கல்கியின் விமர்சன பாணி, அதில் அவரின் ஆளுமை, சில போதாமைகள் ஆகியவற்றை மிக நுணுக்கமாக அவதானித்து 30 பக்கங்கள் கொண்ட மிக நுணுக்கமான முன்னுரையை எழுதியிருகிறார்.
அதில் அக்காலகட்டத்தில் கல்கியுடைய விமர்சன மொழியின் தனித்துவம் ஏற்படுத்திய தாக்கம், அவரது எள்ளல் கலந்த நகைச்சுவை மெல்லோட்டமும் எவ்வாறு வாசகர்களைக் கவர்ந்தது என்பதை எடுத்துக்காட்டியுள்ள தொகுப்பாசிரியர், திரை விமர்சனம் என்பதற்கு அப்பால் கர்னாடக இசை, பரதம் ஆகிய கலைகளின் மீதான கல்கியின் விமர்சனத்துக்கு இருந்த மதிப்பும் வரவேற்பும் எத்தகையது என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இது சினிமா ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பு வாசகர்களையும் ஈர்க்கக்கூடிய அரிய தொகுப்பாக அமைந்திருக்கிறது.
பக்கங்கள் 512
விலை ரூபாய் 560/-
டிஸ்கவரி பதிப்பகம்
டிஜிட்டல் நிறங்கள்
தமிழ் சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவுக் கலைஞர்களில் ஒருவர் சி.ஜெ.ராஜ்குமார். படச்சுருள், டிஜிட்டல் பதிவாக்கம் ஆகிய இரு ஊடகங்களிலும் இயங்கிய அனுபவம் பெற்றவர். இவர் எழுதி வெளியான ஒளிப்பதிவு நூல்கள் மிகுந்த கவனமும் வரவேற்பும் பெற்றவை. தற்போது அவரின் பத்தாவது நூலாக ‘டிஜிட்டல் நிறங்கள்’ வெளியாகி உள்ளது.
திரைப்பட உருவாக்கத்தில் ‘போஸ்ட் புரொடக் ஷன்’ பணிகளின் போது டி. ஐ. வண்ணச் சேர்ப்பு, வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின்போது பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்ப முறைகளின் விளக்கங்கள், காட்சிகளை கலைநயம் மிக்கவையாக உருவாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து அம்சங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து எதுவும் தெரியாதவர்கள்கூட புரிந்துகொள்ளும் விதமாக எளிய மொழியில் பேசுகிறது இப்புத்தகம்.
குறிப்பாக, பிரபல ஒளிப்பதிவாளர்கள் திரைப்படங்களில் உருவாக்கிய நிறத் தோற்றங்கள், காட்சிகளின் போக்குகளுக்கு ஏற்ப எப்படி ஒரு வண்ணத்தை தேர்வு செய்வது என்பது போன்ற முக்கியமான தகவல்களை உள்ளடக்கிய ‘சினிமா கலர் கிரேடிங்’ பற்றிய முதல் நூலாக, முழுவதும் வண்ணத்தில், நீளமான புத்தக வடிவில் வெளியாகியுள்ளது.
பக்கம் 104
விலை ரூ.300/-
டிஸ்கவரி புக் பேலஸ்
எம்.கே.டி.பாகவதர் கதை
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர். நடித்தது மொத்தமே 14 படங்கள். அரசு பொது மருத்துவமனையில் அவரது இறப்புக்கு முந்தைய கடைசி நாட்களில் அவரைக் கவனித்துக்கொள்ளக் கூட யாருமில்லை என்று சொல்வாருண்டு.
அப்படிப்பட்டக் கலைஞனைக் குறித்து பல உண்மைச் சம்பவங்களை தகுந்த ஆதாரங்களுடன் எழுதியவர், மறைந்த முதுபெரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான விந்தன். ‘எம்.கே.டி.பாகவதர் கதை’ என்கிற தலைப்பில் அவர் எழுதி 1983இல் முதல் பதிப்பு கண்ட இந்நூலை தற்போது செம்பதிப்பாக நக்கீரன் பப்ளிகேஷன் வெளியிட்டிருக்கிறது.
பக்கம்: 208
விலை ரூபாய் 225/-
நக்கீரன் பதிப்பகம்
திரைக்கதையும் அணுகுண்டும்
வரலாறு நெடுகிலும் ஆதிக்க சமூகத்தின் முன்னால் தங்களது படைப்புகளின் வழியே கேள்விகளை முன்வைத்த துணிவு குன்றாத இயக்குநர்கள் பெரும் அடக்குமுறைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். இத்தாலிய இயக்குநர் பசோலினி, டச்சு இயக்குநர் தீ வான் காக் உள்பட பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமகால எடுத்துக்காட்டு: சிறையில் வாடும் ஈரானிய இயக்குநர் ஜபார் ஃபனாஹி. இவ்வகைப் படைப்பாளிகளின் பட்டியல் மிக நீளமானது.
இவர்கள் அனைவருமே திரைக் கலையை தீவிர கருத்தியல் சாதனமாகவே பயன்படுத்தியவர்கள். அவ்வகையில் தமது படைப்புகளின் வழியே தீவிர விவாதங்களை முன்னெடுத்து சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய 11 சர்வதேச இயக்குநர்களின் உரையாடல்களையும் கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார் ராம் முரளி. ஏற்கெனவே ‘உலக சினிமா: ஆளுமைகளின் நேர்காணல்கள், ‘காலத்தைச் செதுக்குபவர்கள்’ பாகம் 1,2 , சத்யஜித் ராயின் சிறு வயது நினைவுகளைப் பேசும் ‘குழந்தை பருவ நாட்கள்’ போன்ற பல மொழிபெயர்ப்புகள் வழியாக கவனம் பெற்றவர்.
பக்கம் 180
விலை: 250/-
நீலம் பதிப்பகம்
துரோகங்கள் பெண்கள் போர்கள்
திரையரங்க திரை அனுபவத்துக்கு ஈடாக முடியாது என்றாலும் அதற்கு மாற்றாகவே தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறது ஓடிடி திரை. பார்வையாளர்களின் கையடக்க கருவியையும் தொலைக்காட்சிப் பெட்டியின் திரையையும் ஆக்கிரமித்துள்ள இதன் வடிவங்களில் ‘வெப் சீரீஸ்’ என்கிற இணையத் தொடர்கள் பெரும் தாக்கம் செலுத்தி வருகின்றன.
ஓடிடி உள்ளடக்கங்களில் 90 நிமிட சினிமாக்கள் வந்துவிட்ட நிலையிலும் 8 முதல் 80 எபிசோட்கள் வரை சீசன் சீசனாக நீளும் இவற்றின் அரசியல், கட்டற்ற தணிக்கைச் சுதந்திரத்தின் காரணமாக அறத்தை கொன்று நிற்பதை கண்டும் காணாதுமாக கடந்து செல்கிறோம். வலதுசாரி அணுகுமுறையுடன் உருவாக்கப்படும் காட்சிகள், ஆண் - பெண் உறவுகளில் கடுமையான பாதிப்பை உருவாக்கும் கதாபாத்திரங்கள், உள்ளடக்கங்களுடன் உருவாகும் இணையத் தொடர்களை கூராய்ந்து அவற்றில் உள்ள நோய்க்கூறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் திரைக்கதை எழுத்தாளர் சங்கர்தாஸ்.
பக்கம்: 160
விலை ரூபாய்: 160
உயிர்மை பதிப்பகம்
5சி
காட்சி மொழியின் கலையாக திரைப்படம் மேம்பட்டு நிற்பதற்கு அதன் ஒளிப்பதிவு நுட்பங்களும் அடிப்படையான படப்பதிவு இலக்கணமும் முக்கிய காரணமாக அமைகின்றன. 1965இல் ஆங்கிலத்தில் முதல் பதிப்பு கண்டு, அதன் பின்னர் நூறு பதிப்புகளைத் தாண்டிவிட்ட திரை ஒளிப்பதிவின் ‘பைபிள்’ என்று இன்றளவும் பாராட்டப்பட்டு வரும் நூல், ஜோசப் வி. மாசெல்லி எழுதிய ‘தி ஃபைவ் சி’ஸ் ஆஃப் சினிமாட்டோகிராபி - மோசன் பிக்சர் பிலிம் டெக்னிக்ஸ் சிம்ப்ளிபைடு’.
அதை துல்லியமான விளக்கப் படங்களுடன் தமிழில் கையடக்கப் பதிப்பாக, அதன் சுருக்கமான வடிவத்தை ‘5சி’ என்கிற தலைப்பில் கொண்டு வந்திருக்கிறது பேசாமொழி பதிப்பகம். திரைப்பட ஒளிப்பதிவுக் கலையை சிக்கலான ஒன்றாக அணுகத் தேவையில்லை என்கிற தன்னம்பிக்கையை படைப்பாளிகளுக்குக் கொடுத்துவிடும் முக்கிய முன்னெடுப்பு இந்நூல்.
பக்கம் 120
விலை ரூபாய் 150/-
பேசாமொழி பதிப்பகம்
மாதர் திரையுலகு
பெண்களின் உலகைத் திரையில் முன்வைக்க பெண்களே உணர்வுபூர்வமான தகுதி கொண்டவர்கள். படைப்பாளுமையில் ஆண்களுக்கு கிஞ்சிற்றும் குறைவில்லாது உலக சினிமா அரங்கில் களமாடும் இயக்குநர்களின் எண்ணிக்கை பெருகி நிற்கும் காலகட்டத்தில், அவர்களைத் தேடித் தேடி அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஜா.தீபா. ‘ஒளி வித்தகர்கள்’, ‘மேதைகளின் குரல்கள்’ உள்ளிட்ட பல திரை நூல்களை எழுதி கவனம் பெற்றவர்.
பெண் இயக்குநர்களின் படைப்புகள் மொழி, நில எல்லைகளைக் கடந்து ஆண் மைய அதிகார வர்க்கத்திடம் ஒன்றையே கோரி நிற்பதை ஒவ்வொரு கட்டுரையிலும் எடுத்துக்காட்டுகிறார். அது சகமனிதர்களின் மீதான கருணை. சீனா, இந்தியா, பிரெஞ்சு, ஜப்பான், ஈரான், நியூசிலாந்து, அமெரிக்கா, துருக்கி என அவர்கள் வாழ்கின்ற தேசங்கள் வெவ்வேறானதாக இருந்தாலும் அனைவருமே ஒரே உடலின் பல முகங்களாகவே இருக்கின்றனர் என்பதை அழுத்தமாக நிறுவியிருக்கிறார்.
பக்கம்: 116
விலை ரூபாய்: 119
யாவரும் பதிப்பகம்
தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்
வெகுஜனத் திரைப்படங்களின் அரசியல் தன்மை, குறிப்பாக எளிய, சாமானிய மக்களை காட்சிப்படுத்துவதில் இயக்குநர்களின் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அம்மக்களின் பக்கம் நின்று ஆய்வுக்குட்படுத்தும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் திரை விமர்சனக் கட்டுரைகள் இவை. விதந்தோதுவதை ஒரு விமர்சனப் போக்காகக் கடைபிடிப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. மிக மிக முக்கியமாக, திரைக்கதை எழுதி, திரைப்படம் இயக்க விரும்பும் புதியவர்கள், தொடர்ந்து இயங்கி வரும் இயக்குநர்கள், சினிமா ரசனையை மேம்படுத்திகொள்ள விரும்பும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலும்தான்.
பக்கம்: 200
விலை ரூபாய்: 200/-
நீலம் பதிப்பகம்