Published : 23 Dec 2016 10:27 am

Updated : 23 Dec 2016 10:27 am

 

Published : 23 Dec 2016 10:27 AM
Last Updated : 23 Dec 2016 10:27 AM

தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: சினிமாவின் கோட்டையாகச் சென்னையை மாற்றியவர்!

100

தமிழின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ ஹெச்.எம்.ரெட்டி இயக்கத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் 31 அன்று மதராஸின் கினிமா சென்ட்ரல் திரையரங்கில் வெளியானது. தமிழ் சினிமா பேசத் தொடங்கிய பிறகும் அதன் உள்ளடக்கத்தில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. புராண, இதிகாசக் கதைகளும் கதாபாத்திரங்களுமே திரைப்படங்களாகியிருந்தன. கோவில்கள், கச்சேரிகளில் இசைக்கப்பட்டுவந்த பஜன்களும் கீர்த்தனைகளும் தரமான ஒலிப்பதிவுடன் திரையிலும் ஒலித்தன. இது பார்வையாளர்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. ‘பாடக நடிகர்கள்’திரையில் தோன்றிப் பாடுவதே அன்றைய பக்திபூர்வ ரசிகர்களுக்குப் பெரும் தெய்வீக அனுபவமாக இருந்தது.

பொங்கியெழுந்த நாராயணன்

1930-களில் தொடங்கி 1940-கள் வரையிலும் ரசிகர்களின் ரசனை பக்திமயமாக இருந்தது என்றால், பேசும்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களோ பாம்பே, கல்கத்தா ஸ்டுடியோ முதலாளிகளின் பிடியில் இருந்தார்கள். ஒரு பேசும் படத்தை எடுக்க, அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், நளபாக கோஷ்டி, இன்ன பிற செட் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு பெரும் குழுவாக ரயிலில் நான்கு நாள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பெரிய குழுவைக் கட்டி இழுத்துச் செல்வதும் பராமரிப்பதும் படத் தயாரிப்பாளருக்குப் பெரிய சுமையாக இருந்தது.

இதனால் பேசும்படங்கள் வந்துவிட்ட பிறகும் பலர் மவுனப் படத் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினர். மவுனப் படக் காலத்தில், தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள் ஒரு கட்டத்துக்குமேல் பாம்பே, கல்கத்தா ஸ்டூடியோக்களைச் சார்த்திருக்கவில்லை. ஆனால், பேசும் படங்கள் உருவாக்க சவுண்ட் கேமராவும் சவுண்ட் நெகட்டிவ் அச்சிடும் இயந்திரங்களும் தேவைப்பட்டன.

அவை பாம்பே, கல்கத்தா முதலாளிகளிடமே இருந்தன. இவர்கள் அநியாயக் கட்டணங்களைத் தென்னிந்தியப் படங்களுக்கு வசூலித்தனர். “மதராஸிகளுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை” என்ற மனப்பாங்கு அவர்களிடம் இருந்தது. இதைக் கண்டு பொங்கியெழுந்து தமிழகத்தின் முதல் பேசும் பட ஸ்டுடியோவை (சவுண்ட் ஸ்டுடியோ) அமைத்தவர்தான் சிவகங்கை ஏ. நாராயணன்.

தமிழகத்தில் தயாரான முதல் பேசும்படம்

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சீனிவாஸ் சினிடோன் என்ற தமிழகத்தின் முதல் பேசும்பட ஸ்டுடியோவை அமைத்து 1934, ஏப்ரல் 1 அன்று திறப்பு விழா நடத்தினார் சிவகங்கை ஏ.நாராயணன். ‘சவுண்ட் சிட்டி’ என்று அழைக்கப்பட்ட அந்த ஸ்டூடியோவில் ‘சீனிவாச கல்யாணம்’ என்ற பேசும்படத்தை இயக்கித் தயாரித்து வெளியிட்டார். இது தமிழ் சினிமா வரலாற்றின் மைல் கல். நாராயணன் துணிச்சலுடன் பாதை அமைத்ததைக் கண்ட தென்னகப் பட முதலாளிகள், அடுத்த இரண்டே ஆண்டுகளில் (1935-36) மதராஸிலும் தமிழகத்தின் வேறுபல ஊர்களிலும் பல ஸ்டுடியோக்களைத் திறந்தனர்.

அவற்றில் மதராஸில் அமைக்கப்பட்ட வேல் பிக்ஸர்ஸ், நேஷனல் மூவி ஸ்டோன், மீனாட்சி மூவிடோன், நேஷனல் மூவிடோன், மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆகியவையும், மதராஸுக்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் ஸ்டுடியோ என்ற பெருமைபெற்ற வேலூர் சத்துவாச்சாரி சுந்தரபாரதி ஸ்டுடியோவும், சேலத்தின் மார்டன் தியேட்டரும், கோம்புத்தூரில் சென்ட்ரல் ஸ்டுடியோவும் முக்கியமானவை.

இப்படி தென்னிந்திய சினிமா உலகம் மதராஸைத் தலைமையிடமாகக் கொண்டதுடன், லாபம் கொழிக்கும் பொழுதுபோக்கு வர்த்தகத் தொழிலாகத் திரைப்படத் தயாரிப்பு ஏற்றம்பெற்றது. இதற்கு சீனிவாஸ் சினிடோன் மூலம் சிவகங்கை ஏ. நாராயணன் வழிவகுத்த தன்னம்பிக்கை மிகுந்த தற்சார்பு நிலையே காரணம். ‘சீனிவாச கல்யாணம்’ படத்துடன் நின்றுவிடாமல் ‘தாராசசாங்கம்’, ‘ஞானசுந்தரி’, ‘தூக்கு தூக்கி’, ‘விக்கிரமாதித்தன்’, ‘துளசிபிருந்தா’, ‘விசுவாமித்ரா’, ‘ராஜாம்பாள்’, ‘சிப்பாய் மனைவி’, ‘விப்ரநாராயணா’, ‘கிருஷ்ண துலாபாரம்’, ‘ராமானுஜர்’ ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

ஆயுள் காப்பீட்டிலிருந்து பட விநியோகத் தொழில்

காரைக்குடியை அடுத்த சிவகங்கையில் 1900-ம் ஆண்டு செல்வாக்கு மிகுந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் நாராயணன். பட்டப் படிப்பை முடித்ததும் ஆயுள் காப்பீட்டு முகவராக பம்பாயில் பணியில் சேர்ந்தார். அங்கே ஹாலிவுட்டிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் வரும் அந்நிய மவுனப் படங்களை வாங்கி இந்தியா முழுவதும் விநியோகித்துவந்த கே.டி.பிரதர்ஸ் & கோவுடன் நாராயணனுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்பைப் பயன்படுத்திப் பல மவுனப் படங்களை வாங்கி கல்கத்தாவில் விநியோகிக்கத் தொடங்கினார்.

பிறகு கல்கத்தாவின் பிரபலமான திரையரங்காக விளங்கிய ‘க்வின்ஸ் சினிமா’வைக் குத்தகைக்கு எடுத்து நடத்தினார். பின்னர் மதராஸ் திரும்பி ‘எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ்’ என்ற தென்னிந்தியாவின் முதல் பட விநியோக நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் மவுனப் படங்களை வாங்கித் தென்னகமெங்கும் திரையரங்குகளுக்கு விநியோகித்தார். பின்னர் திருவல்லிக்கேணியில் பாப்புலர் திரையரங்கை நடத்தினார். அதுவே பின்னாளில் ஸ்டார் டாக்கீஸ் திரையரங்காக மாறியது.

பட விநியோகம் லாபம் தந்தாலும் படங்களைத் தயாரிக்க வேண்டும், அவற்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் சுழலத் தொடங்கியது. 1928-ம் ஆண்டு ஹாலிவுட் சென்ற நாராயணன் அங்கே ஓராண்டு காலம் தங்கி சினிமா தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்களைத் திறம்படக் கற்றுக்கொண்டார். ஹாலிவுட் சென்றபோது ‘அனார்கலி’யின் கதையை அதே பெயரில் மவுனப் படமாக எடுத்துச் சென்று ஹாலிவுட்டில் திரையிட்டு அமெரிக்கர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

ஹாலிட்டின் பிரமாண்டத் தயாரிப்பு முறை நாராயணனைப் பாதித்தது. ஹாலிவுட்டிலிருந்து திரும்பி வந்த கையோடு 1929-ம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில், ‘ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் பிரமாண்டமான சினிமா ஸ்டுடியோவை தொடங்கினார். அடுத்துவந்த மூன்று ஆண்டுகளில் (1927-30) சுமார் இருபதுக்கும் அதிகமான மவுனப் படங்களைத் தயாரித்து தென்னிந்தியப் படவுலகைத் தன்பக்கம் திருப்பினார்.

முதல் பிரமாண்ட தயாரிப்பாளர், இயக்குநர்

தமிழ் மவுனப் பட யுகம் கடைசி நாட்களில் இருந்த கால கட்டத்தில் ஹாலிவுட்டில் கற்றுக்கொண்ட தொழில்நுட்பம் மற்றும் பட நிர்வாகத்தைப் பயன்படுத்தி தமிழ் சினிமாவின் பிரமாண்ட மவுனப் படத்தைத் தயாரித்து இயக்கினார் நாராயணன். 18-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவரான ஜி.டபிள்யூ.எம்.ரேனால்டு எழுதிய புகழ்பெற்ற நாவலுக்கு தமிழ் சினேரியோ எழுதினார் நாராயணன். அதை ரூபாய் 75 ஆயிரம் செலவில் ‘மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா’ என்ற தலைப்பில் பிரமாண்டப் படமாகத் தயாரித்தார். அதை ஒரே நேரத்தில் பிரிட்டீஷ் இந்தியாவின் பல நகரங்களிலும் ரங்கூனிலும் வெளியிட்டு வெற்றிகண்டார்.

துணைக்குச் சுதந்திரம்

சினிமா ஆர்வம் கொண்ட தன் மனைவி மீனாம்பாளின் திறமையைக் கண்டு அவரையும் திரைப்படத் துறையில் ஈடுபடச் செய்தார். நாராயணன் இயக்கித் தயாரித்த ‘சீனிவாச கல்யாணம்’ உட்பட ஐந்து பேசும் படங்களுக்கு மீனாம்பாள் ஒலிப்பதிவு செய்தார். திரைப்படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த முதல் இந்தியப் பெண் ஆடியோகிராபிஸ்ட் என்ற பெருமை மீனாம்பாளுக்குக் கிடைத்தது. தேர்ந்த பட விநியோகஸ்தர், திரையரங்க நிர்வாகி, இயக்குநர், தயாரிப்பாளர், சினிமாவை ஒரு தொழில்துறையாக உயர்த்த வழிகாட்டியாக விளங்கியவர் என்று பல சாதனைகளைச் செய்த சிவகங்கை ஏ.நாராயணன், 1939-ம் ஆண்டு, பிப்ரவரி 1-ல் மறைந்தார். ஆனால் அவர் பதித்துச்சென்ற அடிக்கற்கள் தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் மறையாதவை.
தமிழ் சினிமா நூற்றாண்டுபேசும் படம்காளிதாஸ்சீனிவாஸ் சினிடோன்சீனிவாச கல்யாணம்வேல் பிக்ஸர்ஸ்நேஷனல் மூவிடோன்மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்மார்டன் தியேட்டர்ஸ்தமிழ் சினிமா வரலாறு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x