தமிழ் சினிமா 2022: நேர்த்தியான 10 படைப்புகள்

தமிழ் சினிமா 2022: நேர்த்தியான 10 படைப்புகள்
Updated on
5 min read

மாஸ் கதாநாயகர்களின் ஹீரோயிச சினிமா, பொழுதுபோக்குத் தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, உள்ளடக்கத்தை இரண்டாம் இடத்தில் வைக்கும் வணிக சினிமா ஆகிய இரண்டு போக்குகள் முதன்மையானவை. இவற்றுக்கு நடுவில், உள்ளடக்கம், உருவாக்கம், உலகத் தன்மை ஆகியவற்றுடன் உருவான தமிழ் சினிமாக்களே, தேசிய அரங்கிலும் உலக அரங்கிலும் நமது பெருமிதமாக மாறுகின்றன. அந்த வகையில் 2022இன் 10 நேர்த்தியான படைப்புகள் இவை.

1. கடைசி விவசாயி

ஒரு கரிசல் கிராமம். அங்கே வசிக்கும் மக்கள் குலதெய்வத்தை மறந்துபோய், இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வழிபட வேண்டிய கட்டாயம். வழிபாட்டு முறையில் இருக்கும் நம்பிக்கையைக் கடைப்பிடித்தே ஆக வேண்டிய நிலையில், ஒரு மரக்கால் புது நெல் தேவைப்படுகிறது. அப்போதுதான் நிலத்தை வீட்டு மனை விற்பனையாளர்களிடம் கொடுத்துவிட்டு, விவசாயம் செய்வதையே கைவிட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறார்கள்.

அக்கிராமத்தில் தனது துண்டு நிலத்தில் விதைத்து, உழைத்து வரும் ஒரேயொரு முதுபெரும் ‘கடைசி விவசாயி’யிடம் ஒரு மரக்கால் நெல்லுக்காக அந்த கிராமம் மண்டியிடுகிறது. அதை விளைவிக்க அவர் படும் பாடுகள்தான் கதை. கிராமத்து மனிதர்களையே கதை மாந்தர்களாக, அதுவும் ‘லைவ் ஒலிப்பதிவு’ தொழில் நுட்பத்தில் நடிக்க வைத்து சாதனை படைத்துவிட்டார் எம்.மணிகண்டன். தமிழ் சினிமாவின் பெருமை மிகு உலக சினிமாக்களில் ஒன்று என மார்தட்டிக் கொள்ளலாம்.

2. நட்சத்திரம் நகர்கிறது

பல்வேறு சாதிய, வர்க்க, பாலினப் பின்புலங்களிலிருந்து வரும் கலைஞர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடுகிறார்கள். ‘தற்காலத்தின் காதல்’ பற்றி ஒரு நாடகம் போடுவதற்காக பயிற்சியின் வழி ஒத்திகையில் ஈடுபடும் அவர்களுக்குள் ‘காதலின் அரசியல்’ முறிவுகளையும் புரிதல்களையும் உருவாக்குகிறது. காதலெனும் இயற்கை உணர்வு, சமூகமும் பெற்றோரும் ஊட்டிய போலி கவுரவத்தின் பிடியில் சிக்குண்டாலும் அது எல்லாப் பேதங்களையும் போலித்தனங்களையும் வென்று நிற்பதை, கதாபாத்திர முரண்கள், மோதல்கள் வழியாகக் கலாபூர்வமாக சித்தரித்த படம்.

இருபாலினக் காதலுக்கு இணையாகத் தன்பாலினக் காதல், திருநங்கையின் காதலையும் பேசும் படத்தில், அரசியல், சமூகத் தெளிவுகளோடு, அத்தனை இன்னல்களிலிருந்தும் தன்னைத்தானே மீட்டெடுத்துச் செதுக்கிக் கொண்டே தன் பயணத்தைத் தொடரும் சுயாதீனப் பெண்ணாக வருகிறாள் ரெனே. அவளைத் தமிழ் சினிமா வரலாற்றில் வலிமையான அம்பேத்கரியப் பெண் கதாபாத்திரமாக நிலை நிறுத்திவிட்டார் இயக்குநர் பா.இரஞ்சித்.

3. சேத்துமான்

பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ என்கிற சிறுகதையை விரித்து எழுதி, இயக்கியிருந்தார் தமிழ். தாத்தா பூச்சியப்பன் - அவரது பேரன் குமரேசன் இடையிலான பிணைப்பின் வழி உணர்வுபூர்வமாக கதை விரிந்தது. பன்றி இறைச்சியை உண்பது, அதற்காக அதை வளர்ப்பது தொடர்பில் பின்னிப் பிணைந்திருக்கும் உணவு அரசியல், சாதிய வன்முறை ஆகியன பெருமாள் முருகனின் சிறுகதையைப் போலவே படத்திலும் காத்திரமாகப் பதிவாகியிருந்தன.

வசனத்தைப் பெருமாள் முருகனே எழுதியிருந்தார். மையக் கதையைவிட்டு விலகாமல், அதற்கு மிக நெருக்கமான சமகால நிகழ்வுகளின் தாக்கத்துடன் காட்சிகள், கதாபாத்திரங்களை அமைத்திருந்தது ’சேத்துமா’னை அசல் படைப்புகளின் வரிசையில் சேர்த்தது.

4. மாமனிதன்

குடும்பத்தையும் சக மனிதர்களையும் நேசிக்கும் ஒரு சாமானிய மனிதனை வாழ்வின் எதிர்பாராத தருணங்கள் எப்படி மாமனிதன் ஆக்குகின்றன என்பது கதை. மகனையும் மகளையும் தனியார் பள்ளியில் படிக்க வைக்க, தொழில் மாறி படுகுழியில் விழும் ஒரு ஆட்டோ தொழிலாளியின் கதை. குடும்பத்தை விட்டுவிட்டு ஊரைவிட்டு ஓடிப்போய் தலைமறைவானாலும் தன் குடும்பத்தைக் காப்பாற்ற என்ன செய்தார்,

தன்னை ஏமாற்றியவனை என்ன செய்தார் என்பதைக் கச்சாவாகச் சித்தரித்த படம். மதம் கடந்த கிராமிய வாழ்வு, நம்பிக்கையைக் கைவிடாத வாழ்க்கைத் துணை, மன்னிப்பின் மகத்துவம் என ‘ப்யூர்’ சினிமா மொழியைக் கையாண்டுள்ள இயக்குநர் சீனு ராமசாமி, கதை நிகழும் களங்களின் நிலவெளிக் காட்சிகளின் வழியாக உருவாக்கும் நம்பகத் தன்மையை இதிலும் சாத்தியமாக்கியிருந்தார்.

5. ராக்கெட்ரி

பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு போதாமைகளுக்கு நடுவே விகாஸ் இன்ஜினை உருவாக்கி, இந்தியா விண்வெளியில் தடம் பதிக்கக் காரணமாக இருந்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் சாகசங்கள் நிறைந்த வாழ்க்கை கதை. அதை, சினிமாவுக்காகக் கற்பனை கலக்காமல் சித்தரித்ததுடன், அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட தேசத் துரோக வழக்கின் புதைந்துபோன உண்மைக்கு வெளிச்சம் கோரிய தரமான பயோபிக் சினிமா.

கதாபாத்திரத் தோற்றத்துக்காக உடல் எடையை ஏற்றி, இறக்கியது, தாடி, தலைமுடி என நம்பியாகவே மாறியதுடன் அவரது உடல்மொழியையும் அப்படியே நடிப்பில் கொண்டு வந்திருந்தார் மாதவன். நேர்காணலின் வழியாக விரியும் திரைக்கதை, சமரசம் இல்லாத கலை இயக்கத்தை பயன்படுத்திக்கொண்ட திரை இயக்கம் ஆகியவற்றில் தனது தேர்ச்சியைக் காட்டியிருந்தார் மாதவன்.

6. சர்தார்

தண்ணீரை விலைகொடுத்து வாங்கவேண்டிய நிலை தன் நாட்டு மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, தேசத்துரோகி என்கிற பட்டத்தைச் சுமந்து, குடும்பத்தை இழந்து, தனிப்பட்ட இழப்புகளை ஏற்று, அதேநேரம் மிகப்பெரிய பொறுப்புடன் 32 ஆண்டுகள் சிறையில் காத்திருக்கும் ஓர் உளவாளியின் கதை. முன்னணி நட்சத்திர நடிகர் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருந்த நிலையில், அவருக்காக எழுதப்பட்ட வணிக சினிமா சாகசக் காட்சிகளைக் கடந்து, பார்வையாளர்களின் மனதில் அழுத்தமான ஓர் இடத்தை ‘சர்தார்’ கதாபாத்திரம் பிடித்தது.

அதற்கு அக்கதாபாத்திரத்தின் நோக்கமும் அது எதிர்கொள்ளும் பொது நலனுக்கான சவாலும் காரணமாக அமைந்தன. தன்னை நிரபராதி என நிரூபிக்க ஆதாரம் இருந்தும் அதைச் சர்தார் கையாண்ட விதம், ஒரு பொழுதுபோக்கு சினிமாவின் ‘டெம்பிளேட்’ உளவாளி கதாபாத்திரமாக இல்லாமல் அதற்கு மேலே எடுத்துச் சென்றது. பொழுதுபோக்கு சினிமா வழியாகத் தண்ணீரின் அரசியலை நீர்த்துப்போகாமல் பேசிய படம்.

7. பொன்னியின் செல்வன்

தமிழ் வாசகப் பரப்பில் அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட வரலாற்றுப் புனைவு ‘பொன்னியின் செல்வன்’. ஐந்து பாகங்கள், 26 கதாபாத்திரங்கள், 293 அத்தியாயங்களைக் கொண்ட பெரு நாவலுக்கு இரண்டு பாகங்கள் கொண்ட திரைக்கதை வடிவம் கொடுப்பதும் படமாக்குவதும் அத்தனை எளிதல்ல. என்னதான் தொழில்நுட்பம் முன்னேறியிருந்தாலும் கதை நிகழும் காலகட்டத்துக்கு அழைத்துச் செல்வதுபோல் பார்வையாளர்களை நம்பவைத்துவிட்டது மணி ரத்னம் தலைமையிலான படைப்புக் குழு.

நாவலை வாசித்த வாசகர்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி இருந்திருப்பார்கள், அவர்களது தோற்றம், அவர்கள் செய்த சாகசங்கள் ஆகியவற்றைக் குறித்து செய்து வைத்திருந்த கற்பனையின் சிதையாத வடிவமாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைக் கொடுத்திருந்தனர். நட்சத்திரத் தேர்வு, நடிகர்களின் நடிப்பு, வசனம், படத்தொகுப்பு, இசை ஆகிய அம்சங்கள் நாவலை வாசிக்காத தலைமுறையையும் வெகுவாக ஈர்த்தன.

8. டாணாக்காரன்

விதவிதமான போலீஸ் கதைகளைப் பார்த்துப் பழக்கப்பட்டிருக்கும் பார்வையாளர்களுக்கு வேறொரு பரேட் எடுத்திருந்தார் அறிமுக இயக்குநர் தமிழ். காவல் பயிற்சிக் கல்லூரிக்குத் தேர்வாகி வரும் நாயகன், அங்கே மலிந்திருக்கும் அடக்குமுறைகளையும் அதிகார அத்துமீறல்களையும் எதிர்த்துக் கேள்விகேட்கும் கதை.

அறத்தின் பக்கம் நின்றது மட்டுமல்ல; காவல்துறையில் பலர் மூர்க்கமான அதிகாரிகளாகவும் சாமானிய மக்களை அடிமைகளைப் போல் ஏன் நடத்துகிறார்கள் என்பதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உளவியல் சிக்கலின் வேரைத் தேடிச் சென்று அதை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார். புழுதி பறக்கும் பயிற்சி மைதானத்தை விட்டு கேமரா நகராதபோதும் தொய்வில்லாமல் படத்தை இயக்கியிருந்ததும் ஹீரோயிசம் செய்ய வாய்ப்பிருந்தும் அதை விக்ரம் பிரபு தவிர்த்ததும் ‘டாணாக்காரன்’ படத்தின் தரத்துக்கு வலிமை சேர்த்தது.

9. இரவின் நிழல்

ஓடி ஒளிய வேண்டிய நெருக்கடியில் சிக்கும் ஒரு இரக்கமற்ற சினிமா ஃபைனான்சியர், தன் கடந்த காலத்தை ‘மோனோ லாக்’ ஆக விவரித்துச் சொல்லும் கதை. அதை ‘நான் - லீனியர் சிங்கிள் ஷாட்’ திரைப்படமாக எடுத்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த படம். ஒரு திரைப்படத்தின் மிக முக்கியமான ‘காட்சி அனுபவ’த்தைக் கொடுப்பது ‘ஷாட் பை ஷாட்’ உணர்வு.

அதை, வரிசையாகப் போடப்பட்ட அரங்குகளின் வழியே பயணப்படும் ஒளிப்பதிவு கொண்டு ஒரே ஷாட்டில் சாத்தியமாக்க இயக்குநர் பார்த்திபன் தலைமையிலான தொழில்நுட்பக் குழு அசாத்தியமான உழைப்பைக் கொடுத்திருந்தது. கலை இயக்கம், ஒளிப்பதிவு, அதன் போகஸ் புல்லிங், இசை ஆகியன படத்தின் சாதனையைச் சாத்தியமாக்கக் கைகொடுத்திருந்தன.

10. உடன்பால்

புறவுலகில் தெறிக்கும் அவல நகைச்சுவையைக் காட்டிலும் அதை ஆழ்ந்து ரசிக்கக் கூடிய கதைக் களம் குடும்பம். ரத்த உறவுகளின் மத்தியில் அதை ஊற்றெடுக்க வைக்கும் கதைச் சூழலை உருவாக்கி, மையக் கருத்திலிருந்து இறுதி வரை விலகல் இல்லாமல் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன். இரு மகன்கள், ஒரு மகளைக் கொண்ட ஒரு சாமானிய அப்பா.

அவரின் எதிர்பாராத மரணத்தைப் பயன்படுத்தி தங்களது கடன் பிரச்சினையிலிருந்து மீள நினைக்கும் பிள்ளைகள். பணத்தின் தேவையை, அது கிடைக்குமெனில் உறவுகளின் மேன்மை, சட்டெனக் கீழ்மையைச் சந்திக்கும் என்பதைத் தர்க்கப் பிழைகள் ஏதுவுமின்றி சொல்லியிருக்கிறார். வெகுசில கதாபாத்திரங்களை ஒரே வீட்டுக்குள் வைத்துக்கொண்டு, பார்வையாளர்களுக்கு விலகல் இல்லாத திரை அனுபவத்தைக் கொடுத்த ஆண்டின் இறுதியில் வந்த நேர்த்தியான சினிமா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in