கோலிவுட் கிச்சடி: மீண்டும் அமைரா!

கோலிவுட் கிச்சடி: மீண்டும் அமைரா!
Updated on
2 min read

‘அனேகன்’ படத்தின் மூலம் அறிமுகமான குஜராத்திப் பெண்ணான அமைரா தஸ்துரை தென்னகத் திரையுலகம் கண்டுகொள்ளவேயில்லை. மறுபடியும் பாலிவுட்டிலேயே சரணடைந்துவிடலாம் என்று போனவருக்கு ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற இந்திப் பட வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மண்ணைக் கவ்வ, ஜாக்கி சானின் ‘குங்குஃபூ யோகா’ படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தை முடித்துவிட்ட அமைரா தற்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். சந்தானம் நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் அவர்தான் கதாநாயகி. ஒல்லி உடம்பில் கொஞ்சம் எடையை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார்.

பொங்கலுக்கு ‘யாக்கை’

பெண்களையும் குழந்தைகளையும் கடத்திச் சென்று விற்கும் நிழலுலகின் மறுபக்கத்தை யதார்த்தம் நிறைந்த த்ரில்லராகத் தந்தவர் ‘ஆண்மை தவறேல்’ பட இயக்குநர் குழந்தை வேலப்பன். அந்தப் படத்துக்குப் பிறகு ‘யாக்கை’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், காதல் கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது. கிருஷ்ணா - சுவாதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் தயாரித்திருக்கிறார்.

வசனகர்த்தா கபிலன்

கே.வி.ஆனந்தின் ‘அநேகன்’ படத்தில் இடம்பெற்ற ‘தெய்வங்கள் இங்கே’ என்ற பாடலை எழுதிக் கவனம்பெற்றார் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து. திரைப் பாடலாசிரியராக அப்பா, அண்ணன் வழியில் இயங்கிவரும் இவர், கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘கவண்’ படத்தின் எழுத்தாளராகியுள்ளார். தொலைக்காட்சி உலகை மையமாக வைத்து இவர் எழுதிய ‘மெய்நிகரி’ என்ற நாவல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

பின்வாங்கிய ஸ்ரீதேவி!

தன் மகள் ஜான்வியைக் கதாநாயகியாக பாலிவுட்டில் அறிமுகப்படுத்தவிருக்கும் ஸ்ரீதேவி அதற்கான பொறுப்பை இயக்குநர் கரண் ஜோகரிடம் ஒப்படைத்திருந்தார். நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் மராத்தியில் வெறும் 5 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு 115 கோடி வசூல் செய்த ‘சாய்ரத்’ படத்தின் இந்தி மறு ஆக்க உரிமையை வாங்கியிருக்கிறார் கரண் ஜோகர். இந்தப் படத்தில் ஜான்வியை அறிமுகப்படுத்த முடிவெடுத்த கரண் ஜோகரைத் தடுத்துவிட்டாராம் ஸ்ரீதேவி. என் மகளைச் சர்ச்சைகள் ஏதுமில்லாத காதல் கதையில் அறிமுகப்படுத்துங்கள் என்று ஸ்ரீதேவி வைத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கரண், தற்போது ஜான்விக்குப் பதிலாக வேறு சில வாரிசு நட்சத்திரங்களை ‘சாய்ரத்’ மறு ஆக்கத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.

விறு விறு சண்டைக்கோழி

இயக்குநர் லிங்குசாமிக்குப் பெயர் வாங்கித்தந்த படங்களில் ஒன்று சண்டக்கோழி. விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின், வில்லன் வேடத்தை ஏற்றிருந்த மலையாள நடிகர் லால் ஆகியோருக்குத் திருப்புமுனைப் படம் அது. தற்போது அதன் இரண்டாம் பாகம் உறுதியாகிவிட்டது. படப்பிடிப்பை வரும் பிப்ரவரியில் தொடங்குகிறார் இயக்குநர். இந்தப் படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிப்பார் என்று பேசப்பட்டுவந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாராம்.

‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’, ‘பைரவா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ என வரிசையாக முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக விஷாலுடன் இணைகிறார். ராஜ்கிரணும் நடிக்கவிருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பை ஏற்கெனவே தொடங்கிவிட்டார். அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்,

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in