சென்னையில் குவியும் உலகப் படங்கள் !

சென்னையில் குவியும் உலகப் படங்கள் !
Updated on
3 min read

சினிமா ஆர்வலர்களின் பண்டிகையாக மாறிவிட்ட சென்னை சர்வதேசத் திரைப்பட விழா வரும் ஜனவரி 5 அன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு, சென்னையைப் புரட்டிப்போட்ட வார்தா புயல் ஆகிய காரணங்களால் டிசம்பரிலிருந்து ஜனவரியின் தொடக்கத்துக்குத் தள்ளிப்போனாலும் சொல்லி அடிக்கிற மாதிரியான உலகப் படங்களை சினிமா ரசிகர்களின் பார்வைக்கு எடுத்துக்கொண்டு வருகிறது இத்திரைப்பட விழா.

8 நாள் திருவிழா

ஜனவரி 5 அன்று மாலை 6 மணிக்கு மாநில அமைச்சர்கள் தலைமையேற்க, பல தமிழக, இந்தியத் திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் இந்தத் திரைப்பட விழா, சத்யம் திரையரங்க வளாகத்தில் பிரமாண்டமாகத் தொடங்குகிறது. ஜனவரி 12-ம் தேதிவரை 8 நாட்கள் நடைபெற இருக்கிறது. தமிழக அரசின் ஆதரவுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட திரையுலகத் தொழிற்சங்கங்கள் தோள் கொடுக்க, ‘தி இந்து’ ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் மீடியா பார்ட்னராக கரம் கோக்க, கடந்த 13 ஆண்டுகளாக வெற்றிகரமான சர்வதேசத் திரைப்படவிழாவாக இதை ஒருங்கிணைத்து நடத்திவருகிறது இன்டோ– சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்.

6 திரைகள் 5 காட்சிகள்

எதிர்பாராத காரணங்களால் திருவிழா தள்ளிப்போனதையடுத்து உட்லேண்ட்ஸ் திரையரங்க வளாகம் இம்முறை இடம்பெறவில்லை. ஆனால், சென்னைக் கடற்கரை அருகே டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் அமைந்திருக்கும் ஐநாக்ஸ் மால் திரையரங்க வளாகத்தில் உள்ள இரண்டு திரைகள், அண்ணா சாலையில் அமைந்திருக்கும் கேசினோ திரையரங்கம், ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்திருக்கும் ரஷ்ய கலாச்சார மையத்தில் உள்ள திரையரங்கம், சென்னை வடபழனி ஃபாரம் மாலில் அமைந்திருக்கும் பெலாஸோ திரையரங்க வளாகத்தில் ஒரு திரை, வடபழனி பேருந்து நிலையம் எதிரில் விஜயா கார்டன் வளாகத்தில் அமைந்திருக்கும் ஆர்.கே.வி. திரைப்படப்பள்ளியின் திரையரங்கம் ஆகிய ஆறு அதிநவீன திரையரங்குகளில் திரையிடல்கள் நடைபெற இருக்கின்றன.

ஒவ்வொரு திரையரங்குகளிலும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிவரை தினமும் ஐந்து காட்சிகள் இடம்பெறும் 14-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட இங்கே இடம் போதாது. என்றாலும் தவறவிடக் கூடாத படங்களையும் இன்னும் சில முக்கிய அம்சங்களையும் குறித்துத் திரைப்பட விழாவின் இயக்குநர் ஏ.தங்கராஜிடம் கேட்டபோது நம்மிடம் விவரிக்கத் தொடங்கினார்.

45 நாடுகள் 150 உலகப் படங்கள்

“கான் படவிழா உட்பட உலகின் புகழ்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் பரிசுகளையும் அள்ளிய 45 நாடுகளைச் சேர்ந்த 150 உலகத் திரைப்படங்களைத் திரையிடலுக்குத் தேர்வு செய்திருக்கிறோம். அவற்றில் உலக சினிமா அரங்கில் மாபெரும் திரை ஆளுமை என்று கொண்டாடப்பட்டுவரும் இயக்குநர் மார்டின் ஸ்கார்ஸஸி தேர்வு செய்திருக்கும் ஆறு போலந்து நாட்டுத் திரைப்படங்களை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அந்தப் படங்களின் தொகுப்பில் எதையும் ரசிகர்கள் தவறவிட வேண்டாம். அதேபோல நாடுகளின் வரிசையில் ஹாங்காங்கில் செயல்பட்டுவரும் ஏசியன் பிலிம் அவார்ட்ஸ் அகாடமி 5 ஆசிய நாடுகளிலிருந்து தலைசிறந்த 8 படங்களைத் தேர்வு செய்து அளித்திருக்கிறது.

சென்னைத் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரெஞ்சுப் படங்களுக்கு இருக்கும் வரவேற்பே தனி. இந்த ஆண்டு இன்றைய நவீன யுகத்தின் திறமைகளாகப் பளிச்சிடும் ஆறு பிரெஞ்சு இயக்குநர்களின் படங்களை பிரெஞ்சுத் தூதரகமே தேர்வு செய்து அளித்திருக்கிறது. அதேபோல் ஜெர்மனியின் புதிய திறமைகளாகப் பளிச்சிடும் இயக்குநர்களின் 8 படங்களைச் சென்னையில் செயல்பட்டுவரும் கலாச்சார தூதரகமான மேக்ஸ்முல்லர் பவன் தேர்வு செய்து அளித்திருக்கிறது.

கடந்த ஆண்டு முதல் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் ‘கட்’ என்ற ஜெர்மன் படத்தை அப்போதே திரையிட முயன்றோம். அது இந்த ஆண்டு சாத்தியமாகியிருக்கிறது. இந்த நாடுகளோடு நார்வேயிலிருந்து மூன்று, லக்ஸம்பர்க்கிலிருந்து ஆறு, பிரேசிலிலிருந்து ஐந்து, இரானிலிருந்து பத்து என எதைப் பார்ப்பது எதை விடுப்பது என்ற இன்ப அவஸ்தையில் ரசிகர்கள் திக்குமுக்காடப் போவது உறுதி” என்கிறார். திரைப்படவிழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெற 9840151956 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

அம்மாவுக்கு அஞ்சலி

திரைவிழாவில் சிறந்த தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் பங்கேற்கும் 12 திரைப் படங்கள் அனைத்தும் ரஷ்யக் கலாச்சார மையத் திரையரங்கில் திரையிடப்படுகின்றன. இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படும் 15 படங்களில் ‘இஷ்டி’(சமஸ்கிருதம்), ‘ரெவல்யூஷன்’(தமிழ்) ‘யூ டேர்ன்’(கன்னடம்) ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல் மறைந்த முதல்வருக்கு கலையஞ்சலி செலுத்தும்விதமாக அவர் எம்.ஜி.ஆருடன் முதல்முறையாக இணைந்து நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப்பெண்’ ஆகிய இரு படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.


ஏ.தங்கராஜ்

தவறவிடக்கூடாத படங்கள்

சர்வதேசஅளவில் விருதுகளாலும், விமர்சனங் களாலும் கொண்டாப்பட்டு வரும் 150 திரைப் படங்களில் தவறவிடக் கூடாத படங்களின் பட்டியல் சுருக்கமாக இங்கே.

> ‘சன் ஆஃப் சவுல்' (ஹங்கேரி) – 2015-ல் சிறந்த அயல் மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது.

> ‘ஃபயர் அட் ஸீ' (இத்தாலி) – 2016-ல் பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக்கரடி விருது.

> 'ஐ, டேனியல் ப்ளேக்' (பிரிட்டன்) – 2016-ல் கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது.

> ‘டெத் இன் சரயீவோ' (செர்பியா) – 2016-ல் பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி விருது.

> ‘யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் லவ்' (போலந்து) – 2016-ல் பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான வெள்ளிக்கரடி விருது.

> ‘திங்ஸ் டு கம்' (பிரான்ஸ்) – 2016-ல் பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளிக்கரடி விருது.

> ‘எ லல்லபி டு தி சாரோஃபுல் மிஸ்ட்ரி (பிலிப்பைன்ஸ்) – 2016-ல் பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி விருது.

> ‘ஹெடி' (துனிசியா) – 2016-ல் பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது.

> ‘கிராஜுவேஷன்' (ருமேனியா) – கான் படவிழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது.

> ‘பெர்சனல் ஷாப்பர்' (பிரான்ஸ்) – கான் படவிழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்ற மற்றொரு படம்.

> ‘தி சேல்ஸ்மேன்' (இரான்) – பல படவிழாக்களில் விருது.

> ‘மாரோஸா' (பிலிப்பைன்ஸ்) – கான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது .

> ‘தி ஹாப்பியஸ்ட் டே இன் தி லைஃப் ஆஃப் ஒல்லி மகி' (பின்லாந்து) – கான் விழாவில் விருது.

> ‘ஹார்மோனியம்' (ஜப்பான்) – கான் விழாவில் நடுவர்கள் விருது.

> ‘தி ஸ்டாப் ஓவர்' (பிரான்ஸ்) – பல படவிழாக் களில் சிறந்த திரைக்கதைக்கான விருது.

> ‘டோனி எர்ட்மான்' (ஜெர்மனி) – கான் விழாவில் விமர்சகர்கள் விருது

> ‘விசாரணை' (இந்தியா) – 89-வது ஆஸ்கர் அயல் மொழி பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்ட கவுரவம்.

> ‘ஆஃப்டர் இமேஜ்' (போலந்து)- உலகம் போற்றும் போலந்து சினிமா கலைஞர் ஆண்டே வாட்ஜாவின் கடைசி படம். கோவா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கத் திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in