

அநேகமாக நமது தமிழ்த் திரைப் படங்களில் கதாநாயகனின் தோழன் - அதே போல நாயகியின் தோழி ஆகியத் துணைக் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் தான். ஹீரோ - ஹீரோயினை விட இவர்கள் சற்று மந்தமாகவே இருக்கவேண்டும். இவர்களை மட்டம் தட்டிக் கலாய்ப்பதுதான் மற்ற கதாபாத்திரங்களின் வேலையாக இருக்கும்.
இதுதான் தோழன் - தோழிக்கான தமிழ் சினிமாவின் எழுதப்படாத இலக்கணம். இந்த இலக்கணத்துக்கு மாறாக ஒரு தோழி கதாபாத்திரம் - நாயகியின் கதாபாத்திரத்துக்கு இணையாக அமைக்கப்பட்ட படம் தான் முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக 1963 இல் வெளிவந்த ‘இதயத்தில் நீ’. ஜெமினி கணேசன் - தேவிகா நடித்த இந்தப் படத்தில் கதையின் உச்சக்கட்டத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய முக்கியக் கதாபாத்திரமாக தேவிகாவின் சிநேகிதியை அமைத்திருந்தார் இயக்குநர் வி. சீனிவாசன். இந்தக் கதாபாத்திரத்தை நடிகை லட்சுமி ராஜம் ஏற்றிருந்தார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் முதல் முதலாக கவிஞர் வாலி பாடல் எழுதிய படம் இதுதான். இந்தப் படத்தில் கவிஞர் மாயவநாதன் எழுதிய நயம் நிறை பாடல் தான் ‘சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ’ என்று தொடங்கும் பாடல். நாயகியின் காதல் அவள் தோழிக்கு தெரிந்து விடுகிறது. அவள் உரிமையுடன் அவளிடம் ‘உன் மனம் கவர்ந்தவர் யார்? எப்படி இருப்பான்?’ என்றெல்லாம் கேலியும் கிண்டலுமாக அவனைப் பற்றிக் கேட்கும் காட்சி அமைப்பு. நாயகிக்கு இசை அரசி பி. சுசீலாவும் தோழி கதாபாத்திரத்திற்கு எல். ஆர். ஈஸ்வரியும் பாடியிருக்கிறார்கள்.
கவிஞர் மாயவநாதன் பாடல்களில் தமிழ் சித்து விளையாடும்.
அதிலும் இந்தச் சித்திரப்பூவிழி வாசல் பாடல் இருக்கிறதே...இதன் பின்னணியில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன. காட்சி அமைப்பை முக்தா வி. சீனிவாசன் விளக்க - தான் அமைத்த மெட்டை மெல்லிசை மன்னர் தத்தகாரம் கொடுத்து பாடிக்காட்ட, உடனே வார்த்தைகள் துள்ளி வந்தன மாயவநாதன் அவர்களிடம் இருந்து.
சட்டென்று குறுக்கிட்ட இயக்குநர் அவரிடம், ‘இந்தப் பாட்டிலே தோழி கதாபாத்திரத்துக்கு அதிக வரிகளும், கதாநாயகிக்கு சற்று குறைவான வரிகளும் இருக்குமாறு எழுதித் தரவேண்டும்’ என்றார். ஏனென்றால் மாயவநாதனின் தமிழ் வார்த்தைப் பிரயோகங்கள் அப்படி இருக்கும்.
இந்தப் பாடலை ஒரு பாடகி பத்து பதினைந்து முறை திரும்பத் திரும்பப் பாடி பயிற்சி பெற்றுவிட்டால் தமிழ் அவருக்கு சரளமாக வந்து விடும். அப்படிப்பட்ட சந்தம் கொஞ்சும் - பாடுவதற்கு கடினமான வார்த்தைப் பிரயோகங்கள் அடங்கிய பாடல் இது. பாடவிருக்கும் பாடகியரில் எல்.ஆர்.ஈஸ்வரி தமிழ்ப் பெண். ஆனால் பி.சுசீலாவோ ஆந்திர தேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் பாடுவதற்கு சிரமப்படக்கூடாது என்பதால் அவர் பாடும் வரிகள் சற்று குறைவாக இருந்தால் நல்லது என்று அபிப்பிராயப் பட்டார் முக்தா சீனிவாசன்.
அதற்கேற்றபடி பாடலைக் கவிஞர் மாயவநாதன் எழுதிக்கொடுக்க நடபைரவி ராகத்தின் அடிப்படையில் இசை அமைத்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இத்தனைக்கும் 1963 - இல் அவர்கள் பிரம்மாண்டமான இசைக்கோர்வைகளுக்கு பெயர் பெயர்பெற்றிருந்த நேரம். என்றாலும் இந்தப் பாடல் வரிகளின் தரத்தை உணர்ந்து வார்த்தைகள் சிறப்பாக ஒலிக்க வேண்டும் - அருமையான பாடல் காலங்களைக் கடந்தும் நிலைத்திருக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மிகக்குறைவான வாத்தியங்களைக் கையாண்டு ஒரு வெற்றிப் பாடலாகக் கொடுத்திருக்கிறார்கள்.
பாடலைக் கேட்ட கவிஞர் கண்ணதாசன் 'இது மெட்டுக்காக எழுதப்பட்ட பாட்டாக தெரியவில்லை. வார்த்தைகளும், மெட்டும் கனகச்சிதமாக அமைந்திருக்கிறதே' என்று வியந்து பாராட்டினார். இனி கவிஞர் மாயவநாதனின் காவிய வரிகளைக் காண்போமா?
நாயகியிடம் தோழி இப்படிக் கேட்கிறாள்:
'சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ - இந்தக்
கட்டுக் கரும்பினைத் தொட்டுக் குழைந்திட யார் வந்தவரோ
யார் நின்றவரோ யார் வந்தவரோ'
ஆரம்ப வார்த்தையிலே அதகளப்படுத்துகிறார் மாயவநாதன்.
பார்வையில் தொடங்கி இதயத்தில் நிறைவதுதானே காதல். ஆகவே சித்திரத்தில் எழுதியது போன்ற உன் விழி வாசலில் வந்து நின்ற அவன் யார் என்று கேட்கிறாள் தோழி. அடுத்த வரியில் ஒரு முரண்பாட்டை எடுத்துக்காட்டி கேட்கிறாள் தோழி. கட்டுக்கரும்பைப் போன்ற உன்னைத் தொட்டால் உனக்கு பதிலாக அவனல்லவா குழைந்து போயிருக்கிறான். அவன் யார்?’ என்று தலைவியைக் கேட்கிறாள் தோழி.
இப்போது அவனைப் பற்றி அவள் சொல்லவேண்டும்.
மென்மையான தென்றல் காற்று எனக்காக தூது போய் அவனை என்னிடம் அழைத்து வந்தது. அதற்காக அவனை சாதாரணமானவன் என்று தோழி நினைத்துவிடக்கூடாது என்பதற்காக அடுத்த வரியில் அவனது செல்வச் சிறப்பை கூறுகிறாள் அவள்.
‘அவன் சாதாரணமாக வரவில்லை .தங்கத்தேரில் புன்னகை பிரகாசிக்க என் அருகில் வந்து நின்றார் தெரியுமா?’ என்கிறாள் அவள்.
'தென்றல் அழைத்துவர தங்கத்தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில் நின்றவர் என்னவரே
இடம் தந்த என் மன்னவரே
சித்திரப்பூவிழி வாசலிலே அவர்தான் நின்றவரே - இந்தக்
கட்டுக்கரும்பினைத் தொட்டுக்குழைந்தவர் தான் என்னவரே
யார் நின்றவரோ அவர் தான் என்னவரே'
என்று தோழி கேட்டதையே சற்று மாற்றிப் பதிலுரைக்கிறாள் தலைவி.
தொடர்ந்து மனதை மயக்கும் இணைப்பிசைக்கு பிறகு அடுத்த சரணத்தில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறாள் தோழி.
'கட்டழகில் கவி கம்பன் மகனுடன் ஒட்டி இருந்தவரோ - இந்தப்
பட்டு உடலினைத் தொட்டணைக்கும் கலை கற்றுத் தெரிந்தவரோ - உன்னை மட்டும் அருகினில் வைத்துத் தினம் தினம் சுற்றி வருபவரோ - இனி கற்றுக்கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும் முத்தமிழ் வித்தகரோ '
என்று கேட்ட தோழி அடுத்து 'கலை முற்றும் அறிந்தவரோ' என்ற கேட்க தலைவியாக நடிக்கும் தேவிகா இல்லை என்பதுபோல இடம் வலமாக தலையை அசைத்து மறுப்பார். அடுத்து 'காதல் மட்டும் தெரிந்தவரோ' என்ற கேள்விக்கு ஆமாம் என்பது போல மேலிமையை அழுந்த மூடி தலையை மேல்கீழாக அசைத்து அழகாக ஒரு சிரிப்பை வெளிப்படுத்துவார். அந்த ஒற்றை ஷாட்டில் நாயகன் பெருமையை தோழி சொல்லக் கேட்கும் நாயகியின் பெருமிதம் வெளிப்படுமாறு அருமையாகப் படமாக்கி இருப்பார் இயக்குனர் முக்தா வி. சீனிவாசன்.
இப்போது அடுத்த சரணத்தில் தலைவி தோழிக்கு அவனைப்பற்றி சொல்லவேண்டும்.
'வண்ணக்கருவிழி தன்னில் ஒரு விழி என்று அழைப்பதுவோ - பசும்
பொன்னில் புதியதை கண்ணன் எனப்பெயர் சொல்லித் துதிப்பதுவோ
ஒளி மின்னிவரும் இரு கண்ணசைவில் கவி மன்னவன் என்பதுவோ - இல்லை தன்னைக் கொடுத்தெனைத் தன்னில் மறைத்தவர் வண்ணப்புது மலரே மனமெங்கும் நிறைந்தவரே' - என்று முடிக்கிறாள் அவள்.
செந்தமிழ் கொஞ்சி விளையாடும் இந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்டபோது தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தேவிகா மாயவநாதனின் அடுக்கடுக்காக வரும் வார்த்தைகளுக்கு வாயசைத்து நடிக்க சிரமப்படுவார் என்பதற்காக க்ளோஸ் அப் காட்சிகளைக் கூடுமானவரை தவிர்த்து லாங் ஷாட் முறையிலேயே படமாக்கி இருந்தார் முக்தா வி. சீனிவாசன்.
ஒரு கவித்துவமான பாடலை அதன் மெருகும் நயமும் வெளிப்பட மெல்லிசை மன்னர்கள் இசையமைக்க - அதனை சரியான முறையில் உள்வாங்கிக்கொண்டு பாவம் குறையாமல் எல்.ஆர். ஈஸ்வரியும் - பி. சுசீலாவும் பாடிக்கொடுக்க - அதனை அதி அற்புதமான முறையில் இயக்குநர் முக்தா வி. சீனிவாசன் காட்சிப்படுத்தி ரசிகர்கள் கண்முன் கொண்டு வந்து சேர்க்க - திரை இசைக்கடலில் ஒரு நல்முத்தாகக் காலங்களைக் கடந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்.
(தொடர்ந்து முத்தெடுப்போம்)
| கவிஞர் மாயவநாதன் |
பிறந்த ஊர் : பூலாங்குளம், கடையம் வழி, திருநெல்வேலி மாவட்டம். பெற்றோர் : சுப்ரமணிய நாடார் - அருணாச்சல வடிவு. பிறந்த தினம் : ஏப்ரல் 16 - 1936 . கல்வித் தகுதி : புதுமுக வகுப்பு (இன்றைய +2) முதல் பாடல் : படித்தால் மட்டும் போதுமா படத்தில் இடம்பெற்ற 'தண்ணிலவு தேனிறைக்க' பிரபலமான பாடல்கள் இடம் பெற்ற படங்கள் : பந்தபாசம், இதயத்தில் நீ, தொழிலாளி, பூம்புகார், காவல் தெய்வம், கற்பூரம், திருவருள். மறைந்த வருடம் : 1971 சிறப்பு : செந்தமிழ் சொற்களை சிறப்பாக பாடல்களில் கையாண்டவர். |