

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் திரையிடப்படவிருக்கும் ஒரே கன்னடப் படம் ‘ஹதினெலெண்டு’. கன்னட சினிமா என்றாலே கர்நாடக மாநிலத்துக்கு வெளியே தெரியாத நிலையே ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம் வெளியாகும் வரை இருந்தது. தற்போது ‘காந்தாரா’ திரைப்படம் வரை, தென்னிந்திய மொழிகளையும் தாண்டி பாலிவுட் பாக்ஸ் ஆபீஸிலும் கன்னடப் படங்கள் வசூல் வெற்றியை அடைந்து வருகின்றன.
இந்த வெகுஜன சினிமா போக்கிலிருந்து விலகி நிற்கும் சுயாதீன கன்னடப் படங்கள் எப்போதும்போல் வெகுமக்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போய்விடுகின்றன. அப்படியொரு படம்தான் ‘ஹதினெலெண்டு’ (Hadinelentu).
நம் காலத்தின் நகர்ப்புற கலாச்சாரத்தில் வளரும் இளம் வயதினர் எதிர்கொள்ளும் உணர்ச்சிகரமான சிக்கலை ‘ஹதினெலெண்டு’ படத்தில் தயக்கம் ஏதுவுமின்றி சித்தரித்திருக்கிறார் புதிய தலைமுறை இயக்குநரான பிருத்வி கோனானூர்.
கல்லுரியின் முதலாண்டில் பயிலும் தீபாவும் ஹரியும் நண்பர்கள். அதைத் தாண்டிய எதிர்பாலின ஈர்ப்பும் அவர்களிடம் உண்டு. ஒரு வார இறுதியில் கல்லூரி நேரம் முடிந்ததும் யாருமற்ற வகுப்பறையில் தங்களின் அந்தரங்கத் தருணம் ஒன்றை ஒரு பாலியல் செல்ஃபி வீடியோ துணுக்காக பதிவு செய்கின்றனர். எதிர்பாராத விதமாக அவர்களுடைய ஸ்மார்ட் போனில் உள்ள ஒரு செயலியின் செயல்பாட்டால், அந்த வீடியோ இணையத்தில் கசிந்துவிட்டதை திங்கட்கிழமை கல்லூரிக்கு வரும் அவர்களிடம் தெரிவிக்கிறார் முதல்வர். சமூகத்தின் பார்வையில் அருவெறுக்கத்தக்க செய்யக் கூடாத குற்றமாகக் கருதப்படும் அவர்களின் அர்த்தமற்ற அந்த சாகச விளையாட்டுச் செயல், அவர்களது குடும்பங்களை நிலைகுலைய வைக்கிறது. கல்லூரியும் சமூகமும் அவர்கள் மீது வைக்கும் பார்வையும் தண்டனையும் அவர்களை எவ்வாறு நொறுக்குகிறது, செய்த தவற்றிலிருந்து மீள முடியாமல் மாணவர்கள் இருவரும் எப்படி அல்லாடுகிறார்கள் என்பதுதான் படம்.
கோவாவில் நடந்து முடிந்த 53வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவின் கீழ் தொடக்கத் திரைப்படமாக ‘ஹதினெலெண்டு’ திரையிடப்பட்டது. இப்படத்தின் இயக்குநர் பிருத்வி கோனானூரின் வார்த்தைகளின்படி, “இப்படம் ஆணாதிக்கம், சாதிப் பாகுபாடு, பொருளாதாரப் பிளவு, சமூகக் கடமைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை இன்றைய டிஜிட்டல் யுகத்தின் கண்ணோட்டத்துடன் கையாண்டுள்ளது. குறிப்பாக எளிய, சாமானிய மக்கள் எதிர்பாராத சூழ்நிலைகளில் சிக்கும்போது எதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதை இப்படம் ஆராய்கிறது," என்று கூறியிருக்கிறார்.
அனுபமா ஹெக்டேவுடன் இணைந்து இப்படத்துக்கான திரைக்கதையை எழுதியிருக்கிறார் பிருத்வி கோணனூர். ஷெர்லின் போசலே, நீரஜ் மேத்யூ, ரேகா குட்லிகி, பவானி பிரகாஷ், ரவி ஹெப்பால்லி உள்பட நவீன நாடகப் பின்னணியிலிருந்து வந்துள்ள பல கலைஞர்கள் இப்படத்தில் அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தைக் காணத் தவறாதீர்கள்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in