Published : 25 Nov 2022 06:39 AM
Last Updated : 25 Nov 2022 06:39 AM

அஞ்சலி: ஆரூர்தாஸ் | வசனங்கள் வழியே ஒரு வரலாறு!

பாசமலர்

ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகள் வரையிலும் குடும்பக் கதைகளின் பொற்காலமாக விளங்கியது தமிழ் சினிமா. அதில், அண்ணன் - தங்கையின் பாசத்துக்கும், எதன்பொருட்டும் அறுபடாத அதன் தொடர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டில் தரப்பட்டிருக்கும் இடம் எவ்வளவு உன்னதமானது என்பதை உணர்ச்சிக் குவியலாக முன்வைத்த படம் ‘பாசமலர்’.

தமிழர் மனதில் ஒரு கருப்பு வெள்ளை கல்வெட்டுச் சினிமாவாக மாறிப்போய்விட்ட அதன் வெற்றியில் ஆரூர்தாஸின் வசனத்துக்கு மிகப்பெரிய இடமுண்டு. இளமையும் எளிமையும் இலக்கிய நயமும், அக்காலகட்டத்தின் வாழ்க்கையும் மிகுந்திருந்த ‘பாசமல’ரின் வசனத்துக்குக் கிடைத்த வரவேற்பால், தனிப்பெரும் கதை, வசனகர்த்தாவாக உருவெடுத்தார் 26 வயதே நிரம்பியிருந்த ஆரூர்தாஸ். அதன்பிறகு வந்த 60 ஆண்டுகளில் 1,000 படங்களுக்கு எழுதி, திரையுலகில் அவர் உருவாக்கியது தனிப்பெரும் ராஜபாட்டை!

பள்ளி ஆசிரியராக இருந்து பாடலாசிரியராக உருவெடுத்தவர் அமரகவி தஞ்சை ராமைய்யா தாஸ். சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்பு 1952இல் அவரிடம் 50 ரூபாய் மாதச் சம்பளத்தில் உதவியாளராகச் சேர்ந்தபோது ஆரூர்தாஸுக்கு 21 வயது. அவரிடமிருந்து பிறமொழிப் படங்களைத் தமிழாக்கம் செய்யும் கலையைக் கற்றுக் கொண்டார். என்.டி.ராமராவ் - அஞ்சலி தேவி நடித்திருந்த தெலுங்குப் படம், ‘நாட்டியதாரா’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

மனைவி லூர்துமேரியுடன் ஆரூர்தாஸ்

அப்போது, அப்படத்தின் பெரும் பாலான காட்சிகளுக்கு ஆரூர்தாஸையே வசனம் எழுத வைத்தார் ராமய்யா தாஸ். உதட்டசைவுக்கு கச்சிதமாகப் பொருந்தும் வண்ணம், மூல மொழி வசனத்தின் அர்த்தம் மாறாமல் கூர்ந்து கவனம் செலுத்தி வசனங்களை எழுதும் அக்கலையில் ஆரூர்தாஸ் நிபுணத்துவம் பெற்றுவிட்டபின், 1957இல் வெளியான ‘கேதி’ (Qaidi) என்கிற இந்திப் படத்தை தனியொருவராக தமிழாக்கம் செய்தார். அதே ஆண்டில் ‘மகுடம் காத்த மங்கை’யாக வெளியான அந்தப் படத்தில்தான் ‘வசனம்: ஆரூர்தாஸ்’ என முதல் முதலாக அவருக்குத் தனி டைட்டில் கார்டு கொடுக்கப்பட்டது.

கூடாரங்களுக்கு வெளியே: தமிழாக்கப் படங்களுக்கு எழுதிக்கொண்டி ருந்தவரை நேரடித் தமிழ்ப் படங்களுக்கு எழுதும் விதமாகப் பயிற்று வைத்தவர் ஏ.எல்.நாராயணன். ஆரூர்தாஸை தனக்கு உதவியாளராக விரும்பியழைத்துச் சேர்த்துக்கொண்ட ஏ.எல்.நாராயணன், ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்து 1957இல் வெளியான நேரடித் தமிழ்ப் படமான ‘சௌபாக்கியவதி’யில் பல காட்சிகளுக்கு ஆரூர்தாஸை வசனம் எழுத வைத்தார்.

ஆரூர்தாஸின் திறமையைக் கண்ட ஜெமினி கணேசனும் சாவித்திரியும் அவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அதன்பிறகு ஆரூர்தாஸுக்கு கிடைத்த முதல் அதிர்ஷ்டம்தான் ‘பாச மலர்’. வெள்ளி விழா கண்ட அப்பட வெற்றியின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சிவாஜி கணேசன் நடித்த 28 படங்களுக்கு வசனம் எழுதினார் ஆரூர்தாஸ். ‘படித்தால் மட்டும் போதுமா?’ ‘பார்த்தால் பசி தீரும்’, ‘பார் மகளே பார்’, ‘புதிய பறவை’, ‘தெய்வ மகன்’, ‘அன்னை இல்லம்’ என சிவாஜிக்கு எழுதாத ‘ஜானர்’ இல்லை என்பதுடன், எழுதிய அத்தனைப் படங்களும் வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.

ஒரு உச்ச நடிகருக்கு வெற்றிகரமாக எழுதத் தொடங்கிவிட்டால், அவரது கூடாரத்துக்கு வெளியே போய், எதிர் கூடாரத்துக்குள் நுழைய முடியாது என்கிற நிலை எப்போதுமே சினிமாவில் உண்டு. அதைத் தனது சொல்லாட்சியின் வழியாக உடைத்தெறிந்தவர் ஆரூர்தாஸ். தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் தொழில்முறையில் போட்டியாளர்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருடைய படங்களுக்கும் தொடர்ந்து எழுதி அவர்களுடன் இணைப் பயணம் மேற்கொண்டவர் ஆரூர்தாஸ்!

தாய் சொல்லைத் தட்டாதே

வசனம் என்பதைத் தாண்டி, கதை, வசன கர்த்தாவாக ஆரூர்தாஸை உயர்த்தியவர் எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர். ‘வாழவைத்த தெய்வம்’ படத்துக்கு ‘கதை - வசனம்’ எழுதும் முதல் வாய்ப்பைக் கொடுக்க, அது வெற்றிப் படமாகவும் அமைந்ததால், அதன் பின்னர் தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான கதை, வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறந்தார். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியாகி வெற்றிகளைக் குவித்த ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘தாய்க்குத் தலைமகன்’, ‘குடும்பத் தலைவன்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘வேட்டைக்காரன்’, ‘தொழிலாளி’, ‘தனிப்பிறவி’ ஆகிய படங்களுக்கு எழுதியபின் எம்.ஜி.ஆரின் நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமானார்.

உச்ச நட்சத்திரங்களுக்கு ஒரே எழுத்தாளர் எழுதமுடியாது என்பதைப் போலவே ஏவி.எம்முக்கு எழுதினால் விஜயா வாகினிக்குள் அங்கீகாரம் இருக்காது என்பதையும்கூட நொறுக்கிப்போட்டது இவரது எழுத்தின் வீர்யம்! அன்று சினிமாவை ஆண்டுகொண்டிருந்த அத்தனை பெரிய ஸ்டுடியோக்களும் ஆரூர் தாஸின் எழுத்துக்காக காத்திருந்தன. எழுதுகிற படங்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதும் ஆரூர்தாஸின் திரை எழுத்து என்றைக்கும் நீர்த்துப் போனதுமில்லை, தரம் தாழ்ந்ததும் இல்லை.

விதி

மூன்று தலைமுறைக்கான எழுத்து: தனக்கு முன்பே சினிமாவில் பிரபலமாக இருந்த இயக்குநர்கள், தனது சமகாலத்தில் சினிமாவுக்குள் நுழைந்து வெற்றிபெற்ற இயக்குநர்கள், எழுதத் தொடங்கி, இருபது ஆண்டுகளில் 250 படங்களுக்கு எழுதிய பின்னர் வந்த புதியவர்கள் என மூன்று தலைமுறையைச் சேர்ந்த 40 இயக்குநர்களுக்கு தொடர்ந்து எழுதிய, ஒரே கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ் மட்டும்தான். அவரது வசனங்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மக்களின் மொழியில் எழுதப்பட்டவை.

தஞ்சை ராமய்யா தாஸ், உடுமலை நாராயண கவி, அ.மருதகாசி, கவி.கா.மு.ஷெரிஃப் ஆகியோர் பாடல்களை எழுதிக் கொண்டிருந்த காலத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெரு வெடிப்பாக எப்படி உள்ளே நுழைந்தாரோ.. அதே காலகட்டத்தில் மக்களின் மொழியில் மக்களின் வாழ்க்கையை உணர்வு குன்றாமல் எழுதிய கதை, வசன கர்த்தாதான் ஆரூர்தாஸ். ‘சௌபாக்கியவதி’ படத்தில் பட்டுக்கோட்டையார் மொத்த பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தவரும் ஆரூர்தாஸ் என்பது ஆச்சர்யமான தகவல்.

சௌபாக்கியவதி

‘சௌபாக்கியவதி’ படத்தில் துணை வசனகர்த்தாவாக தன் முத்திரையைப் பதித்தவர், அதே படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து திரைப்படத் தொழில்நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்த ஆரூர்தாஸ். 1967இல் ‘பெண் என்றால் பெண்’ என்கிற படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

10.09.1931இல் நாகப்பட்டினத்தில் பிறந்த ஆரூர்தாஸின் இயற்பெயர் ஜேசுதாஸ். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படிப்பில் தேர்ச்சிபெற்றவர், திராவிட இயக்கத்தின் தாக்கம் பெற்று திரைத் துறைக்கு வந்தார். வாழும் காலம் வரை எழுதிக்கொண்டிருந்த ஆரூர்தாஸை ‘கலை வித்தகர்’ எனக் கொண்டாடுகிறது கோடம்பாக்கம். வசனங்கள் வழியாக வரலாறு படைத்துவிட்ட இவர் விட்டுச் சென்றிருகும் தரவு களைத் தவிர்த்துவிட்டு தமிழ் சினிமாவின் முதல் 50 ஆண்டு கால வரலாற்றை எழுதுவது கடினம். - ஆர்.சி.ஜெயந்தன், jesudoss.c@gmail.com | படங்கள் உதவி: ஞானம் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x