‘கலகத் தலைவன்’ அரசியல் படமல்ல! - உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்

‘கலகத் தலைவன்’ அரசியல் படமல்ல! - உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்
Updated on
3 min read

‘மனிதன்’ படத்தில் தொடங்கி, சீரியஸ் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். ஒரு பக்கம் திரைப்பட விநியோகத்தில் ராசியான கை என்று பெயர் பெற்றிருந்தாலும் இன்னொரு பக்கம் அரசியல் பணி அவரை இழுக்கிறது. சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அரசியல் களத்தில் சுழன்றுகொண்டே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கலகத் தலைவன்’ விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

மகிழ் திருமேனி - உதயநிதி கூட்டணி பற்றிக் கூறுங்கள்..

மகிழ் திருமேனியின் ‘பிலிம் மேக்கிங்’ எனக்குப் பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். அவரது ‘தடம்’ படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. முதலில் என்னிடம்தான் அந்தக் கதையைச் சொன்னார். நான் ஏற்றுக்கொண்டிருந்த வேலைகளால் ஒன்றரை வருடம் ஓடிவிட்டது. அவர் ‘அருண் விஜய்யை வைத்துப் படத்தைத் தொடங்குகிறேன்’ என்றார். நானும் ஓகே சொன்னேன். படம் வெளியான பிறகு ‘அய்யோ..! தவற விட்டுவிட்டோமே..!’ என்று வருந்தினேன். அப்போதே அவரை அழைத்து வேறு கதை இருந்தால் கூறும்படி கேட்டேன். ஐந்து மாதம் அவகாசம் எடுத்துக்கொண்டு எனக்காக அவர் எழுதிய கதைதான் ‘கலகத் தலைவன்’.

தலைப்பைப் பார்த்தால் இதுவொரு அரசியல் படம்போல் தெரிகிறதே..

இல்லை. இதுவொரு ஆக் ஷன் த்ரில்லர் படம். எந்தக் கதையை எடுத்துக்கொண்டாலும் அதனோடு ஒரு சமூக, அரசியல், பொருளாதாரத் தொடர்பு இயற்கையாகவே அமைந்து விடும். அப்படியொரு தொடர்பு இக்கதையில் இருக்கிறது. இதில், திரு என்கிற மென்பொருள் பொறியாளராக, ஒரு காமன்மேன் கதாபாத்திரத்தில் வருகிறேன். நான் யாரை எதிர்த்துக் கலகக்காரனாக மாறுகிறேன், எந்த முறையில் கலகம் செய்கிறேன் என்பதுதான் கதை. கதையில் எட்டு வருடத்துக்கு முன், எட்டு வருடத்துக்குப் பின் என இரண்டு பரிமாணங்களில் நடித்திருக்கிறேன்.

மகிழ் திருமேனி படங்களில் கதாநாயகிகள் வெள்ளந்தியாக இருப்பார்கள். இந்தப் படத்திலும் அப்படித்தானா?

நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தனது முந்தைய படங்களில் கதாநாயகிகளை ‘இன்ன சென்ஸ்’ ஆகக் காட்டியதிலிருந்து விலகி, இதில் ‘மெச்சூர்ட்’ஆகக் காட்டியிருக்கிறார். சில காட்சிகள் என்றில்லாமல் படம் முழுவதும் கதாநாயகி வருகிறார். அவரைத் தமிழ் வசனங்கள் பேச வைத்து, பாடாய்ப் படுத்தி எடுத்துவிட்டார் மகிழ் திருமேனி. நிதி அகர்வால் மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா என்பதே சந்தேகம் தான்.

காதல் நகைச்சுவை படங்கள், ஆக் ஷன் கதை என்று கடந்து, சீரியஸ் கதைகளுக்கு வந்துவிட்டீர்கள். உங்களைத் தேடி அரசியல் கதைகள் எதுவும் வந்ததில்லையா?

‘மனிதன்’ படத்துக்குப் பிறகு எந்தக் கதை கேட்டாலும் அதில் எனக்குச் சொல்லிக்கொள்ளும்படியாக என்ன இருக்கிறது, இந்தச் சமூகத்துக்கும் சொல்ல என்ன இருக்கிறது என்று பார்க்கத் தொடங்கிவிட்டேன். அப்படி இல்லாத பல கதைகளை மறுத் திருக்கிறேன். உதாரணத்துக்கு ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘வீட்ல விஷேசம்’ படத்துக்கு என்னைத்தான் முதலில் அணுகினார்கள். ‘இல்லை; நான் சீரியஸ் கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’’ என்று மறுத்துவிட்டேன். அருண் ராஜா காமராஜுடன் நான் பண்ண வேண்டியது ஒரு காமெடிப் படம்தான். நான் தான், ‘ஆர்டிக்கிள் 15’ ரீமேக்கைத் தேர்வுசெய்தேன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘மாமன்னன்’ ஓர் அரசியல் த்ரில்லர் கதைதான். அது இன்னும் தீவிரமான அரசியல், சமூகப் படமாக இருக்கும்.

ஒரே நேரத்தில் சினிமாவையும் அரசியலையும் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

படப்பிடிப்பு என்று போய்விட்டால் வேறு தொந்தரவுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். நான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு முழு உழைப்பையும் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். அதேபோல், அரசியல் பணிகள் என்று வந்துவிட்டால், எடுத்துக்கொண்டதை செய்து முடிக்கும் வரை வேறு எதிலும் கவனம் திரும்பாது. ஆனால், சினிமாவைப்போல் அரசியலை ‘பார்ட் டைம்’ ஆகச் செய்ய முடியாது. அதனால் நான் நடிக்கும் படங்களைக் குறைத்துக்கொண்டே வருகிறேன். அநேகமாக கமல் சாரின் தயாரிப்பில் நான் நடிப்பதுதான் கடைசிப் படமாக இருக்கும் என நம்புகிறேன். அப்படத்துக்கு இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை. இனி அரசியல் பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நடிப்பதற்காக, விநியோகம் செய்வதற்காக ஒரு படத்தை எதன் அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்கிறீர்கள்?

உள்ளடக்கத்தைத்தான் முதலில் பார்ப்பேன். நானே தயாரித்து, நடிப்பதாக இருந்தால் இந்தக் கதைக்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் யாரெல்லாம் சரியாக இருப்பார்கள் என்று பார்ப்பேன். விநியோகம் என்று வருகிறபோது ‘கன்டென்ட்’ பிடித்துவிட்டால், படத்துக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள். எவ்வளவு திரையரங்குகளில் வெளி யிடலாம், ரிலீஸ் செய்ய எவ்வளவு செலவாகும், ரிலீஸ் தேதியை முடிவு செய்ததும், நமது படத்துடன் வேறு என்னென்ன படங்களெல்லாம் ரிலீஸ் ஆகின்றன என்று பார்ப்பேன். இதையெல்லாம் நான் மட்டும் முடிவு செய்வதில்லை. ஒரு பெரிய டீம் இந்த வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்கிறார்கள். படத்தைப் பார்த்து முடிவெடுப்பது மட்டும்தான் எனது வேலை.

திரைப்பட வசூலில் வெளிப்படைத் தன்மை இல்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உண்டு. ஒற்றைச் சாளர முறையில் சினிமா டிக்கெட் விநியோகத்தை அரசு டிஜிட்டல் முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வெறும் கனவுதானா?

பல மாநிலங்களில் ஒரே சர்வர் மூலம் இதைச் சாதித்திருக்கிறார்கள். ‘புக் மை ஷோ’, ‘டிக்கெட் நியூ’ போன்ற தனியார் டிக்கெட் பதிவுத் தளங்களையும் திரையரங்குகள் நடத்திவரும் தளங்களையும் ஒருங்கிணைத்தாலே உண்மையான வசூல் என்னவென்று தெரிந்துவிடும். தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தலைமைச் செயலரைப் பார்த்து சில தினங்களுக்கு முன் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்திருக்கிறார்கள். நானும் அதற்கு அழுத்தம் கொடுத்து சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராயும்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். - ஆர்.சி.ஜெயந்தன், jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in