

கபடி, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளை கதைக் களமாகக் கொண்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் விஷ்ணு விஷால். தென்னிந்தியாவின் பூர்விகத் தற்காப்புக் கலைகளில் ஒன்றான மல்யுத்தத்தைக் கதைக் களமாகக் கொண்டு, செல்லா அய்யாவு எழுதி, இயக்கியிருக்கும் ‘கட்டா குஸ்தி’ படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்திருக்கிறார். அப்படத்தின் ‘முதல் தோற்றம்’ வெளியாகும் முன்னர் அவர் நமக்களித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:
விளையாட்டுத் திரைப்படங்களுக்கும் உங்களுக்கும் அப்படியென்ன பந்தம்?
இது எனக்கே ஆச்சரியமான ஒன்று! எனது மனைவியும் பிரபல பேட்மின்டன் வீராங்கனைதான்.பொதுவாக விளையாட்டுத் திரைப்படங்களில் நாயகன் அல்லது நாயகியின் வெற்றிக் கதை ‘பயோபிக்’ போல படமாக்கப்பட்டிருக்கும். அல்லது விளையாட்டில் இருக்கும் அரசியலால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கும். ஆனால், ‘கட்டா குஸ்தி’யில் காதலும் விளையாட்டும் ஒன்றிணைந்துள்ளன. ஒரு கட்டா குஸ்தி வீரனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையிலான ‘குடும்ப குஸ்தி’தான் கதை. படத்தில் எந்த அளவுக்கு ‘எமோஷன்’ இருக்கிறதோ, அதே அளவுக்கு நகைச்சுவையும் இருக்கிறது.
இந்தப் படத்தை நீங்களே தயாரிக்க என்ன காரணம்?
நானும் ரவி தேஜா சாரும் இணைந்து தயாரிக்கிறோம். தெலுங்கில் ‘மட்டி குஸ்தி ’ என்கிற தலைப்பில் வெளியாகிறது. நான் இதற்குமுன் நடித்துத் தயாரித்த ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தை தெலுங்கில் அவர்தான் வாங்கி வெளியிட்டார். ‘அடுத்து என்ன படம் நடிக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அப்போது அவருக்குக் கதையைச் சொன்னதும் அவரும் தயாரிப்பில் இணைந்து கொண்டார். கதைதான் இந்தப் படத்தை நானே தயாரிக்கக் காரணம். நான் நடித்த ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவு இக்கதையைச் சொன்னபோது நானே தயாரித்து விடுவது என்று யோசிக்காமல் முடிவுக்கு வந்தேன்.
கதை எங்கே நடக்கிறது..? படம் எப்படி வந்திருக்கிறது?
கதை கேரளத்தின் பாலக்காட்டிலும் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியிலும் நடக்கிறது. எனது மனைவியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். ரெடின் கிங்ஸ்லி, கருணாஸ், காளி வெங்கட், முனீஸ் காந்த், ஹரீஷ் பேரடி என நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். சேலம், மேட்டூரில் இன்றைக்கும் தமிழ் பாரம்பரியப்படி கட்டா குஸ்தி நடத்துகிறார்கள். அங்கே பயிற்சி அளிக்கும் குஸ்தி மாஸ்டர்களையும் உண்மையான கட்டா குஸ்தி வீரர்களையும் அழைத்து வந்து மல்யுத்தக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம்.
கட்டா குஸ்தி கலைக்கு எதிர்காலத்தில் நல்ல ‘ரெஃபரென்ஸ்’ படமாகவும் இதை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் குத்துச் சண்டைக் காட்சிகளை ரசிக்கும்விதமாக சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் அமைத்திருந்தார்கள். மல்யுத்தக் காட்சிகளையும் அதேபோல் சுவாரசியம் குறையாமல் படமாக்க வேண்டும் என்று அவர்களையே இந்தப் படத்துக்கும் அமர்த்திக்கொண்டோம். பிரம்மாண்டமான குடும்பப் பொழுதுபோக்கு விளையாட்டுத் திரைப்படம் என்று ரசிகர்கள் சொல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். படத்தை டிசம்பரில் திரையரங்குகளில் வெளியிடுகிறோம்.