மீட்கவே முடியாத மீரான் சாகிப் தெரு! | கண்ணீருடன் கலைப்புலி ஜி.சேகரன்!

மீட்கவே முடியாத மீரான் சாகிப் தெரு! | கண்ணீருடன் கலைப்புலி ஜி.சேகரன்!
Updated on
2 min read

பட விநியோகஸ்தர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், திரைப்பட தொழிற்சங்கங்களில் பல நிலைகளில் பொறுப்பு வகித்தவர் என தமிழ்த் திரையுலகில் கலைப்புலி ஜி.சேகரனின் பயணம் இடையறாது தொடர்கிறது. தீபாவளி பட வெளியீட்டை முன்னிட்டு அவர் தன்னுடைய நினைவுகளை வருத்தமும் ஏக்கமும் கலந்த தொனியில் பகிர்ந்திருக்கிறார். இதோ அவரது பதிவு:

கலைப்புலி ஜி சேகரன் ஆகிய நான் வெறும் ஜி சேகரனாக கால் வைத்த 45 ஆண்டுகால திரைப்பட வெளியீட்டு தொழிலை (திரைப்பட விநியோகம்) வரும் 24.10. 2022 தீபாவளி திருநாளை நோக்கி பின்னோக்கிப் பார்க்கிறேன்!

இன்று போல் அன்று ஒரு படம் தான் திரையிடப்பட வேண்டும்! நாங்கள் மட்டுமே வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நினைப்பு அன்று இருந்ததில்லை? எம்ஜிஆர், சிவாஜி ,ஜெய்சங்கர் ,முத்துராமன், சிவக்குமார் என்று எத்தனையோ படங்கள்? எத்தனையோ திரைப்பட அதிபர்கள் ? திரையரங்கு அதிபர்கள்?திரைப்பட வெளியிட்டாளர்கள்.

ஒரு ஆச்சரியமான வியப்பான சம்பவம்?

டூரிங் திரையரங்குகளில் புதிய படங்களையே முறியடிக்கும் பழைய படங்கள் கொடி கட்டி பறந்த காலம்! அதற்கென்று பழைய பட வெளியிட்டாளர்கள் வளமையாக இருந்த நேரம்!! இதே மீரான் சாகிப் தெரு! அந்தக் காலத்தில், தீபாவளிக்கு முந்திய நாள் பரபரப்பின் உச்சகட்டமாக இருக்கும்! திரையரங்க அதிபர்கள், திரைப்படம் கன்ஃபார்ம் பண்ணுகிறவர்கள், திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து படங்களை வாங்கி கொடுக்கும் பெரிய மேம்பாட்டாளர்கள்(மீடியேட்டர்) பழைய படங்களை தியேட்டர்களுக்கு பேசி முடிக்கும் சிறிய மேம்பாட்டாளர்கள், போஸ்டர்களை திரையரங்கத்துக்கு எடுத்துச் செல்பவர்கள்,போஸ்டர் ஒட்டுபவர்கள் என அவ்வளவு கூட்டம்! நெருக்கடி!!

மீரான் சாகிப் தெரு சந்திப்பு
மீரான் சாகிப் தெரு சந்திப்பு

மீரான் சாகிப் இரண்டாம் நபரில் தொடங்கி மூன்றாம் நம்பர், ஐந்தாம் நம்பர் வெளியீட்டாளர்கள்!ஆறாம் நம்பர், ஏழாம் நம்பர், எட்டாம் நம்பர், ஒன்பதாம் நம்பர்! வெளியீட்டாளர்கள் நிறைந்த பத்தாம் நம்பர், 13 ஆம் நம்பர் ,பதினைந்தாம் நம்பர் 17 ஆம் நம்பர் இருபதாம் நம்பர் ,விஜய் சாரதி பில்டிங் , 21 ஆம் நம்பர், 23ம் நம்பர் 25 நம்பர் 27ஆம் நம்பர் 28ம் நம்பர்! மீரான் சாகிப் தெரு ஒரு கதவு இலக்கத்தின் உள்ளே ஒரு அலுவலகத்தில் பலர் பங்குதாரராக தங்களை இணைத்துக் கொண்டு இருப்பார்கள் ? அதுமட்டுமின்றி தொலைதூரத்தில் தங்கள் இல்லங்களிலேயே அலுவலகம் வைத்து செயல்பட்டவர்கள்,சென்னை மவுண்ட் ரோடு , ஜிபி ரோடு மாம்பலம் மயிலாப்பூர் நுங்கம்பாக்கம்,தியாகராய நகரில் இருந்து செயல்பட்டவர்கள், கோடம்பாக்கம்,வடபழனி மட்டுமல்லாது சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் ஏன்? வெளியூர்களிலிருந்தும் இருந்தும் எத்தனை எத்தனையோ திரைப்பட வெளியீட்டாளர்கள்?இப்படி திரைப்பட வெளியீட்டு தொழிலின் உச்சத்தில் நாம் வாழ்ந்து பழகிய அந்த மீரான் சாகிப் தெரு! திரைப்படத் தொழிலின் அரவமின்றி அமைதியாகி ஆழ்கடல் அலை போல அசைவற்று மௌனிக்கிறது! கொடிகட்டி பறந்த அந்த திரைப்பட தொழில் மறைந்து வேற்று வணிகங்கள் நமக்கு வாழ்வளித்த அந்த மீரான் சாகிப் தெருவை கைப்பற்றி விட்டன !ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே?நமது தொழில் சிறப்பாக இருந்த காலத்தில் ஒவ்வொரு அலுவலகமாக செல்லுவோம் அல்லது அங்கு இருக்கும் டீ கடையில் கூடி நின்று திரைப்படங்களின் ரிப்போர்ட்டை அதன் வசூல் நிலவரங்களை பேசி பேசி மகிழ்வோம்! ஆனால் அந்த நிகழ்வெல்லாம் அழிக்கப்பட்டு திரைப்படத் தொழிலின் தடயமே இல்லை! நம் சங்கத்தை தவிர!!

நம்முடன் பங்குதாரராக மட்டுமல்ல! படம் கொடுப்பவராக, 10 சென்டர்கள் போடுபவராக அல்லது ஒரு தியேட்டருக்கு மட்டும் பிக்சட் ஹையர் கொடுப்பவராக இருந்து பழகி தோழராக வலம் வந்த பலர் மறைந்து போனார்கள் .ஆனால் அவ்வப்போது நமது மனதிலே, எண்ணத்திலே வந்து போகிறார்கள் !சில சமயம் கனவுகளிலே பேசுகிறார்கள்!! நம்மில் பலர் நட்டப்பட்டு கடனால் தலையில் கொட்டப்பட்டு ஒதுங்கினர். அவர்களில் ஒரு சிலர் மீண்டும் அந்த காலம் வருமா ?இழப்பதை எடுக்க முடியுமா! என்று இன்றும் காத்திருக்கிறார்கள்? அவ்வாறு அவர்கள் காத்திருப்பது நடக்கக்கூடிய செயலாக இருக்கட்டும் என்று கூறி இத்தகைய மறைந்து போன நிகழ்வுகளை நினைவுகளாக்கி அலையாய் வந்து நம்மை தொட்டு தழுவி நினைவூட்ட வருவது தான் இந்த தீபாவளி திருநாள்!

நீங்களும் உங்களுடைய இல்லமும் குழந்தை செல்வங்களும் வளமை பெற நெஞ்சில் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களோடு உங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் நண்பன்..

உங்கள்

கலைப்புலி ஜி சேகரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in