

தற்காலத் தமிழ் சினிமாவுக்குப் பங்களித்து வரும் மதுரையின் மைந்தர்களில் சி.வி.குமார் தன்னம்பிக்கை மிக்கவர். நட்சத்திரங்களின் பின்னால் ஓடாமல் கதையைத் தனது படங்களில் நட்சத்திரமாகக் கருதுபவர். கடந்த 2012இல் ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, வரிசையாக வெற்றிகளைக் கொடுத்து வருகிறார். இவருடைய ‘சூது கவ்வும்’. ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்கள் ‘ட்ரெண்ட் செட்டர்’களாகத் தாக்கத்தைத் தந்துள்ளன. ‘மாயவன்’ படம் தொடங்கி தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘கொற்றவை’ வரை இயக்குநராகவும் தனது தனித்த முத்திரையைப் பதித்து வருகிறார். இவரது திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் திரையுலகில் பத்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
உங்களுக்கு சினிமா மீது ஆர்வம் உருவான பின்னணியைப் பகிருங்கள்..
எதைச் செய்தாலும் அதை ‘கிரியேட்டிவ்’ ஆகச் செய்ய வேண்டும் எனச் சிறு வயது முதலே முயல்வேன். 2002இல் ’த லார்டு ஆஃப் த ரிங்ஸ்’ படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தது. அதில், விஷுவல் எஃபெக்ட்ஸ், கிராஃபிக்ஸ் இரண்டையும் பார்த்து மிரண்டுபோய், ‘இது என்ன மாதிரியான தொழில்நுட்பம்!? இதைக் கற்றுக்கொண்டே ஆகவேண்டும்’ என முடிவு செய்தேன். அப்போது ‘அரீனா- மல்டிமீடியா’ புரஃபெஷனல் படிப்பாகப் பிரபலமாகியிருந்தது. அதில் சேர்ந்து இரண்டரை வருடம் படித்தேன். போட்டோ ஷாப் தொடங்கி படத்தொகுப்பு, சவுண்ட் மிக்ஸ், ஆஃப்டர் எஃபெக்ட்ஸ், ஸ்கிரிப்ட் ரைட்டிங் வரை அதில் விரிவாகக் கற்றுக்கொடுத்தார்கள். பிறகு எனது குடும்பத் தொழிலான டூர்ஸ் அண்ட் டிராவல்ஸில் தொடர்ந்தேன். 50 பேர் கொண்ட குழுவை அழைத்துக்கொண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், நான் மட்டும் வார்னர் பிரதர்ஸ், வால்ட் டிஸ்னி, எம்.ஜி.எம்., யுனிவர்சல் ஆகிய ஸ்டுடியோக்களைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிடுவேன். அப்படித்தான் சினிமாவின் மீதும் அதன் காட்சிமொழி மீதும் ஆர்வம் துளிர்த்தது.
உங்களைக் குறித்து தகவல் திரட்டியபோது, ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’ என்கிற பெயர் அடிப்பட்டது.. அதைப் பற்றி நீங்களே கூறுங்கள்..
தமிழ் நாடகத்தைச் சீர்த்திருத்தி அதை கௌரவமான நிலைக்கு உயர்த்தியவர், தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள். நானும் அவர் பிறந்த மதுரையின் திருமங்கலத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். சங்கரதாஸ் சுவாமிகளின் வழியைப் பின்பற்றி பாலர் நாடகக் குழுக்களை உருவாக்கி நாடகம் வளர்த்த முன்னோடிகள் பலர். அவர்களில் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனி’யைத் தொடங்கி, அதன் உரிமையாளராக இருந்ததுடன், பல வெற்றி நாடகங்களை எழுதி, அதைச் சிறுவர்களுக்கு பயிற்றுவித்து, அவர்களை வெற்றிகரமான நடிகர்களாக உருவாக்கியவர் எஸ்.எம்.சச்சிதானந்தம் அவர் எனது தாத்தாக்களில் ஒருவர். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் பயின்று, திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆகி, தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., எனது தாத்தாவின் மாணவர்தான்.
பொதுவாக சினிமாவை நேசித்து வருபவர்கள் முதலில் படம் இயக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். நீங்கள் தயாரிப்பைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
முக்கியமான காரணம் மனிதர்களுடனான எனது அனுபவம். ‘டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’ குடும்பத் தொழில் என்பதால் 12 வயதிலிருந்து இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள், உலகின் பல நாடுகள் எனச் சுற்றியிருக்கிறேன். சுற்றுலாவுக்கு வரும் பல தரப்பட்ட, பல வயதுகொண்ட மனிதர்களைப் பத்திரமாகவும் பக்குவமாகவும் அழைத்துக்கொண்டு போய், அக்கறையுடன் திரும்ப அழைத்து வந்து அவரவர் வீட்டில் சேர்ப்பேன். மனிதர்களை ‘ஹேண்’டில் செய்த இந்த 30 ஆண்டு அனுபவம்தான், திரையுலகில் எல்லா ‘கிராஃப்ட்’களிலும் பணிபுரியும் கலைஞர்களிடம் எளிதாக, தரமாக வேலை வாங்கிவிட முடியும் என்கிற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது. அதேபோல், 2010இல் நட்சத்திரங்களே இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த ‘சென்னை 600028’, ‘களவாணி’ ஆகிய இரண்டு படங்களின் வெற்றியும் என்னை சினிமா தயாரிப்பு நோக்கித் திருப்பியது. நல்லக் கதை, சுவாரஸ்யமான திரைக்கதை, தரமான தொழில்நுட்பம், சிறந்த படமாக்கம் ஆகியவை இருந்தால் நட்சத்திர நடிகர்கள் இல்லாமலேயே வெற்றிப் படங்களைத் தயாரிக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டு படத் தயாரிப்பில் இறங்கினேன்.
புதிய திறமைகளை நம்பி முதலீடு செய்வது, புதியக் கருத்தாக்கம் கொண்ட கதைகளைத் தேர்வு செய்வது ஆகியவற்றில் நீங்கள் உறுதியாக இருப்பதன் ரகசியம் என்ன?
‘ஜெயித்த குதிரைகளின் பின்னால் ஓடுவது’ எப்போதுமே எனது எண்ணமாக இருந்ததில்லை. பழகிய பாதையில் நடப்பதை விட, பாதையை உருவாக்குவது பிடிக்கும். ‘இந்த வழியே போனால் திரும்ப வர முடியாது?’ என்றொரு பாதை இருந்தால், அது நேர்மையாக இருந்தால் எனக்குப் போதும். அதன் வழியே யோசிக்காமல் போய்க்கொண்டே இருப்பவன் நான். கதைத் தேர்வுக்கு, எனது வாசிப்பு ஒரு முக்கியக் காரணம் என நினைக்கிறேன். பள்ளிக் காலத்தில் தமிழ் ‘பல்ப் ஃபிக் ஷன்’களை வாசித்தேன். மாத நாவல்களில் ரமணிச்சந்திரன் நாவல்களை விரும்பி வாசித்தேன். பிறகு டெக்னாலஜி புத்தகங்கள் பிடித்தன. பின்னர் தமிழக வரலாறு, இந்திய வரலாறு, உலக வரலாறு, வரலாற்றுப் புனைவுகள் என்று வெறித்தனமாக வாசித்தேன். ஒரு கட்டத்தில் ‘நான் - பிக் ஷன்’ அதிகமாகப் பிடித்துப்போய் கிடைப்பதையெல்லாம் வாசிக்கத் தொடங்கினேன். கதைத் தேர்வுக்கு என்றில்லை; திரைக்கதையை முடிவு செய்யவும் வாசிப்புதான் எனக்குத் துணையாக நிற்கிறது.
உங்களுடைய அறிமுகங்கள் இன்று முக்கிய இயக்குநர்களாகவும் நட்சத்திரங்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடன் நட்பு தொடர்கிறதா?
பா.இரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாரசாமி, ஆர்.ரவிக்குமார் தொடங்கி, இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என எனது படங்களில் பணிபுரிந்த அத்தனை பேரும் நட்புடன் இருக்கிறோம். அடிக்கடி சந்தித்துக்கொள்வதும் பகிர்ந்துகொள்வதும் உண்டு. திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய இருக்கிறேன். அதில் நாங்கள் அனைவரும் மேடையேறுவோம். இந்தப் பயணத்தில் பங்குபெற்ற அனைவரையும் அதில் சிறப்பிக்க இருக்கிறேன்.
தற்போது நீங்கள் இயக்கி வரும் ‘கொற்றவை’ எந்தக் கட்டத்தில் இருக்கிறது?
‘கொற்றவை’ 99 சதவீதம் முடிந்துவிட்டது. சமீபத்தில் வெளியிட்ட அதன் டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு. ‘பொன்னியின் செல்வன்’ சோழர்களின் கதையென்றால் இது பாண்டியர்களின் வரலாற்று இழை ஒன்றுடன் பரபரப்பான புனைவு ஒன்றை இணைக்கும் கதை. ‘கொற்றவை’யை முதலில் நாவலாக எழுதிவிட்டு, பிறகே திரைக்கதை எழுதினேன். சமகாலத்திலும் கடந்த காலத்திலும் கதைப் பயணிக்கிறது. வரும் 22ஆம் தேதி படத்திலிருந்து முதல் ‘சிங்கிள்’ பாடலை வெளியிடுகிறோம். தயாரிப்பில் உள்ள மற்ற படங்களில் ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’, ‘பீட்சா 3’ ஆகிய படங்கள் தணிக்கை முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து எனது ‘மாயவன் 2’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. ‘ஹைனா’ என்கிற புதிய படத்துக்கான வேலைகளையும் முழு வீச்சில் தொடங்கியிருக்கிறோம்.