ஸ்ரீகாந்த் தேவா பேட்டி: எனது குடும்பத்தில் 7 இசையமைப்பாளர்கள்!

ஸ்ரீகாந்த் தேவா பேட்டி: எனது குடும்பத்தில் 7 இசையமைப்பாளர்கள்!

Published on

கருணாஸ், ரித்விகா, இனியா உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி, விமர்சகர்கள், ரசிகர்கள் கொண்டாடியுள்ள படம் ‘ஆதார்’. அதில் இடம்பெற்றுள்ள ‘தேன் மிட்டாய், மாங்காத் துண்டு நீதான் கண்ணம்மா’ என்கிற தாலாட்டுப் பாடலுக்காகவும் பின்னணி இசைக்காகவும் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. குத்துப் பாடல்களுக்காக பெயர்பெற்ற இவர், குறிப்பிடத்தக்க மெலடி மெட்டுக்களையும் கொடுத்திருக்கிறார். என்றாலும் ‘தேன் மிட்டாய்’ பாடல் அவரைச் சட்டென்று கவனிக்க வைத்திருக்கிறது. அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

கோலிவுட்டில் அதிக இசையமைப்பாளர்களைக் கொண்ட குடும்பம் என்றால் அது உங்களுடையதுதான் இல்லையா?

அது இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் என நினைக்கிறேன். அப்பா தேவா, சித்தப்பாக்கள் சபேஷ் - முரளி, முரளி சித்தப்பாவின் மகன் போபோ சசி, மற்றொரு சித்தப்பா சம்பத், அவருடைய மகன் நடிகர் ஜெய் ஆகியோருடன் என்னையும் சேர்த்து எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஏழு இசையமைப்பாளர்கள். நாங்கள் அனைவரும் இணைந்து குடும்பமாக ஒரு லைவ் இசை நிகழ்ச்சியை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்.

உங்களது திரையிசைப் பயணம் நிறைவைத் தந்திருக்கிறதா?

நிறைய தந்திருக்கிறது. கற்றும் கொடுத்திருக்கிறது. என்றாலும் புதிய தலைமுறை இயக்குநர்களோடு பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஏனென்றால் நான் சோதனை முயற்சிகளை விரும்பும் இளைஞன். 2001இல் பிரபுதேவா, மீனா நடிப்பில் ஆர். பாண்டியராஜன் இயக்கிய ‘டபுள்ஸ்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இரண்டாவது படம் ‘எம்.குமரன்’. அதற்கு மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. ஏழாவது படம் விஜய் அண்ணா நடித்த ‘சிவகாசி’. பத்தாவது படம் எஸ்.பி.ஜனநாதன் சாரின் ‘ஈ’. அது சிறந்த பின்னணி இசைக்காக மெல்பேர்ன் சர்வதேசப் படவிழாவில் விருதை வென்று வந்தது. இப்படி அங்கீகாரங்களோடு தொடங்கிய பயணத்தில் ‘ஆதார்’ வரை 110 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். 20 வருடங்கள் ஓடியதே தெரியவில்லை.

‘குத்துப் பாடல்களின் இசையமைப்பாளர்’ என்கிற அடையாளத்துக்குள் எப்படிச் சிக்கினீர்கள்?

சினிமாவில் ‘டைப் காஸ்ட்’ செய்வது நடிகர்களுக்கு என்றில்லை, இசையமைப்பாளர்களுக்கும் உண்டு. நான் இசையமைத்த மெலடி, குத்துப் பாடல்கள் இரண்டு வகையுமே ஹிட்டடித்திருக்கின்றன. ஆனால், குத்துப் பாடல்களைக் கேட்டுப் பெறுவதிலேயே பலர் குறியாக இருந்தார்கள். நம்பி வருகிறவர்களை வெறுங்கையுடன் அனுப்பக் கூடாது என்று நானும் அவர்கள் கேட்பதைக் கொடுத்தனுப்பிவிடுகிறேன். ஆனால், ‘ஆதார்’ படத்தின் ‘தேன் மிட்டாய்’ பாடல், அந்தப் பெயரைத் துடைத்துப் போட்டுவிட்டது. எங்கெங்கிருந்தோ, யார் யாரோ என்னை அழைத்துப் பாராட்டுகிறார்கள். கைபேசியில் அழைப்பிசையாக வைத்துக்கொண்டதாக நெகிழ்ந்து சொல்கிறார்கள்.

சினிமாவில் பாடல்களுக்கான இடம் குறைந்துகொண்டு வருவதைக் கவனித்தீர்களா?

உண்மைதான். புதிய தலைமுறை இயக்குநர்கள் கதை சொல்லும்விதம் மாறியிருக்கிறது. ‘ஆதார்’ படத்தின் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் அப்படியொருவர்தான். முதலில் அவர் பின்னணி இசை போதும் என்றார். பின்னர், ‘தன்னுடைய பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு காணாமல் போன மனைவியை நகரெங்கும் தேடியலையும் நாயகனின் வலியைச் சொல்ல மனதை அழுத்தும் ஒரு தாலாட்டுப் பாடல் தேவை’ என்று அவரே கேட்டார். அப்படித்தான் ‘தேன் மிட்டாய்’ பாடலுக்கான இடம் படத்தில் அதுவாக அமைந்தது. திரையரங்கில் அந்தப் பாடலின்போது யாரும் எழுந்து வெளியே செல்லவில்லை என்பது, அந்தப் பாடலுக்கும் அது இடம்பெற்ற சூழ்நிலைக்கும் கிடைத்த வெற்றி. எனது இசையை அடுத்த இடத்தில் வைக்க விரும்புகிறேன். அடுத்து, எடிட்டர் லெனின் எழுத்தில், கணேஷ் பாபு நடித்து, இயக்கியிருக்கும் ‘கட்டில்’ படத்துக்கு 5 பாடல்களுக்கு மெட்டமைத்திருக்கிறேன். இது நான்கு மொழிப் படம். இதைப் போல், பாடல்களைக் கோரும் கதையம்சம் கொண்ட படங்கள், பின்னணி இசையை மட்டும் கோரும் சோதனை முயற்சிப் படங்கள் ஆகிய இரண்டு வகைக்குமே இசையமைக்க நான் எப்போதும் தயார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in