

கோவையை அடுத்த சிங்காநல்லூரில் 1913-ல் வெங்கடரமணன், பார்வதி தம்பதியின் நான்காவது பிள்ளையாகப் பிறந்தவர்தான் திரைப்பட நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம். சிங்காநல்லூர் வெங்கடரமணன் சகஸ்ரநாமம் என்பதுதான் எஸ்.வி.எஸ் என்பதன் விரிவாக்கம்.
சங்கரதாஸ் ஸ்வாமிகள் ஒரே நாள் இரவில் 100 பாடல்களுடன் மூன்று மணி நேரம் நடக்கக்கூடிய, ஒரு நாடகத்தை எழுதி அதற்கு ‘அபிமன்யு சுந்தரி’ என்ற தலைப்பையும் சூட்டி அரங்கேற்றியபோது அதில் அபிமன்யுவாக பத்ம அவ்வை டி.கே. ஷண்முகம்தான் நடித்தார். அவர் நடிப்பிற்கும் வசனங்களுக்கும் கிடைத்த கைதட்டலைப் பார்த்து வியந்த ஒரு சிறுவன் டி.கே. ஷண்முகம் போல் நடித்தால் தனக்கும் இதுபோன்ற கைதட்டல் எல்லாம் கிடைக்குமே என்று ஆசைப்பட்டான். அந்தச் சிறுவன் தான் பின்னாளில் மிகப்பெரிய நாடக, திரைப்பட நடிகராகப் பிரகாசித்த ‘குணச்சித்திர நடிப்புக் களஞ்சியம்’ நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம்.
1935-ம் ஆண்டு ‘மேனகா’ திரைப்படத்தில் என்.எஸ்.கே., டி.கே. ஷண்முகம் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதற்கு முன் 1925 -ம் ஆண்டு தனது 12-வது வயதில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய பாய்ஸ் நாடகக் கப்பெனியில் அவர் சேர்ந்தார். 7-ம் வகுப்புவரை மட்டுமே கல்வி அறிவு. ஆனால் சுயதேடல் வழியே சேர்த்துக்கொண்ட கலை அறிவு அவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
பாய்ஸ் கம்பெனியை அடுத்து டி. கே. எஸ் சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்த சபா நாடகக்குழுவில் இணைந்தார். பத்து ஆண்டு கால நாடக அனுபவத்தோடு திரைப்படத்துறைக்கு வந்த சகஸ்ரநாமம் 50 ஆண்டு காலம் அதற்குள் மூழ்கி முத்தெடுத்தார். ‘பராசக்தி’, ‘குலதெய்வம்’, ‘ஆனந்த ஜோதி’, ‘நல்லதம்பி’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘மர்ம யோகி’, ‘நாலுவேலி நிலம்’ உட்பட 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து தன்னை தனித்துக் காட்டிய அவரை, பராசக்தியின் நீதிபதி சந்திரசேகரனாகவும் போலீஸ் காரன் மகளின் நேர்மையான ‘போலீஸ் குமாரசாமி’யாகவும் தமிழர்களால் மறக்கவே இயலாது. கதாநாயகப் பாத்திரங்களில் நடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொண்ட துணைக் கதாபாத்திரம் நம் நினைவிலிருந்து நீங்காதபடிக்கு தனது அற்புதமான நடிப்புத்திறனால் அவற்றுக்கு வாழ்வளித்த கலைஞர். திரையில் தொடர்ந்து நடித்துக்கொண்டே நாடகத் துறையில் முழு ஈடுபாடு காட்டியவர்.
புகழ் சேர்த்த நாடகங்கள்
லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் என். எஸ். கே. சிறையில் வாடியபோது மேல் முறையீடு செய்வதற்கு டி. ஏ. மதுரம் முயற்சி செய்து உருவாக்கிய நாடகம் ‘பைத்தியக்காரன்’. விதவைத் திருமணத்தை வலியுறுத்தும் இந்த நாடகத்தை எழுதி நடித்து மதுரத்துக்கு உதவினார் சகஸ்ரநாமம். நாடக உலகின் பக்கம் புகழ்பெற்ற எழுத்தாளர்களை ஈர்த்த வகையிலும் சகஸ்ரநாமம் தனித்த, தரமான வாசிப்பும் ரசனையும் கொண்டவர்.
சகஸ்ரநாமம் கேட்டுக்கொண்டதற்காக தமிழர்கள் கொண்டாடிய நாவலாசிரியர் தி. ஜானகிராமன் ‘வடிவேல் வாத்தியார்’, ‘நான்குவேலி நிலம்’ ஆகிய நாடகங்களை எழுதினார். மற்றொரு இலக்கிய எழுத்தாளர் கு. அழகிரிசாமியும் சகஸ்ரநாமம் வேண்டுகோளை ஏற்று ‘கவிச்சக்கரவர்த்தி’, ‘வாழ்வில் வசந்தம்’ ஆகிய நாடகங்களை எழுதினார். என்.எஸ்.கே. நாடகமன்றம் தொடங்கியபோது அதற்கு சகஸ்ரநாமம் நிர்வாகியாகச் செயல்பட்டார்.
1952ஆம் ஆண்டு சேவா ஸ்டேஜ் என்கிற நாடகக்குழுவை உருவாக்கிப் பல நாடகங்களை அரங்கேற்றினார். அவற்றில் பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ பெரும்புகழ்பெற்றது. 1961-ம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் நடந்தபோது அதில் இந்த இசை நாடகத்தை மேடையேற்றி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தார்.
பாரதியின் பாடல் வரிகளை நாடக மேடைகளிலும் திரைப்படங்களிலும் தொடர்ந்து ஒலிக்கச் செய்த இவரின் பங்களிப்புக்கு அங்கீகாரமாக ‘பாரதி கலைஞர்’ எனப் பட்டம் சூட்டப் பட்டார். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘தி விஷன்’எனும் நாவலை என்.வி. ராஜாமணி நாடகமாக்கம் செய்ய அதற்கு ‘கண்கள்’என்ற தலைப்பிட்டு அரங்கேற்றினார். அதில் சகஸ்ரநாமத்துடன் விரும்பி இணைந்து நடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி. இங்கிலாந்தில் இருப்பது போல் தமிழகத்திலும் தனித்தன்மையுடன் நாடக அரங்குகளை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்த சகஸ்ரநாமம், ‘வானவில்’ என்ற ஒரு நாடகத்தை நிகழ்த்த அன்றைய காலகட்டங்களிலேயே ‘ரோலிங் ஸ்டேஜ்’ முறையைக் கையாண்டு வெற்றி கண்டவர்.
கலைக்காக வாழ்ந்த லட்சியவாதி
கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைக் தொடங்கியபோது அதற்குத் துணைச் செயலாளராக சகஸ்ரநாமத்தை நியமித்தார் தோழர் ஜீவா.இறுதிவரை கதராடையை மட்டுமே உடுத்திய லட்சியவாதியான அவர், சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கருப்பொருளாகக் கொண்ட நாடகங்களைக் மட்டுமே அரங்கேற்றிவந்தார். பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நாடகத்தில் நடிக்க முடியும் என்ற நிலையை மாற்றி மேடையில் நடிகர்களின் வாயசைத்தலுக்குப் பின்னணிக் குரலில் பாட்டுப் பாடவைத்து அசத்திய புதுமையை திரைக்கு இணையாக மேடையிலும் புகுத்தினார்.
பல நாடகங்களைத் தயாரித்தாலும் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் சக கலைஞர்களுக்கும் உரிய இடம் கொடுத்து உயர்த்தும் அபூர்வ பண்பு கொண்டவர் சகஸ்ரநாமம். சேவா ஸ்டேஜ் நாடக மன்றத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நாடகங்கள் அரங்கேறின. சேவா ஸ்டேஜ் நடிகர்களான முத்துராமன், குலதெய்வம் ராஜகோபால், கே. விஜயன், ஏ. வீரப்பன், டி.எம். சாமிகண்ணு, ஏ.கே. வீராசாமி, தனபால், காந்திமதி, எஸ். பிரபாகர், எஸ்.என். லக்ஷ்மி போன்ற கலைஞர்கள் அனைவரையும் திரையிலும் நடிக்க வழி அமைத்துக் கொடுத்தார் சகஸ்ரநாமம். மக்கள் திலகத்துடனும், நடிகர் திலகத்துடனும், இன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களோடும் ஏராளமான படங்களில் நடித்த பெருமை சகஸ்ரநாமத்திற்கு உண்டு..
நூற்றாண்டு விழாக் குழு
இத்தனை சிறப்புகளுக்கு உரிய அபூர்வக் கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட எஸ்.வி.எஸ். நூற்றாண்டு விழாக் குழு கடந்த 2012-ல் அமைந்தது. எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் புதல்வர் திரு. எஸ்.வி.எஸ். குமாரை முன்னிலைப்படுத்தி, அதன் தலைவராகக் கவிஞர் சித்தார்த்தனும் செயலாளராக சேவா ஸ்டேஜ் நடிகரும் எழுத்தாளருமான கலைமாமணி பி.ஆர். துரையும் நியமிக்கப்பட்டார்கள். தவிர டி.வி. வரதராஜன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியம், எடிட்டர் பி. லெனின் போன்றவர்கள் ஆலோசகர்களாக அதில் அங்கம் வகித்து வருகிறார்கள்.
நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்தி முடித்த குழு, சகஸ்ரநாமம் பெயரில் நாடகம் மற்றும் திரைத்துறைக்கு சிறப்பாகப் பங்களித்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதென்று முடிவு செய்தது. அதன்படி முதல் வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த கலைஞர், நடிகர் ஏ.ஆர்.எஸ்ஸுக்கு வழங்கப்பட்டது. மேலும் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாடகத்தையே மூச்சாகவும் வாழ்வாகவும் ஏற்று வாழ்ந்து கலைச்சேவை புரிந்த நூறு மூத்த கலைஞர்களுக்கு எஸ்.வி.எஸ் நினைவு விருது வழங்கப்பட்டது.அவர்களில் சேவா ஸ்டேஜ் கலைஞர்களான டி.எம். சாமிகண்ணு, எஸ்.என். லக்ஷ்மி ஆகியோரும் அடக்கம். சென்ற வருடம் சிறந்த எழுத்தாளருக்கான ‘கலைக் களஞ்சியம்’ எனும் விருதை சித்ராலயா கோபுவுக்கு வழங்கிக் கவுரவித்தது.
ஒருமனதாகத் தேர்வு
இம்முறை வாழ்நாள் சாதனையாளர் விருது திரைப்படக் கலைஞர் கலைமாமணி குமாரி. சச்சுவிற்கும், ‘சிறந்த நாடகாரிசியர்’ விருது லியோ பிரபுவுக்கும் வழங்கப்படவிருக்கின்றன. சகஸ்ரநாமம் 103வது பிறந்தநாள் விழா வரும் 29 -ம் தேதி செவ்வாய் மாலை 6.30 மணிக்கு ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ‘ஒய்.எம்.ஐ.ஏ’ கலையரங்கில் நடிகர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த விழாவில்தான் இந்த மூத்த கலைஞர்கள் சகஸ்ரநாமம் விருதால் கவுரவம் செய்யப்பட இருக்கிறார்கள். வாழும்போது சக கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட சகஸ்ரநாமம் தற்போது விருதுகளாலும் நினைவு கூரப்படும் கலைஞராக மாறியிருக்கிறார்.