நாடகமே திரை: பகுதி 02 | ஒரு தொழிலும் அறியாதவனே நாடகக்காரன்!

நாடகமே திரை: பகுதி 02 | ஒரு தொழிலும் அறியாதவனே நாடகக்காரன்!
Updated on
4 min read

மறைந்த நவீன நாடகாசிரியர் ந.முத்துசாமி தொடங்கிய நாடகக் குழு ‘கூத்துப் பட்டறை’. அதில் பயின்றவர் என்றால் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மத்தியில் மரியாதையும் வரவேற்பும் இருக்கிறது. அதேபோல் தரமணி திரைப்படக் கல்லூரியின் நடிப்புப் பிரிவு, தேசிய நாடகப் பள்ளி, புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை ஆகியவற்றில் பயின்றவர்கள் என்றாலும் ஏக மதிப்பு. நாசர் (முதலில் தரமணி திரைப்படக் கல்லூரில் நடிப்பைப் பயின்றவர்), கலை ராணி, பசுபதி, விஜய்சேதுபதி, விதார்த், குரு.சோமசுந்தரம் தொடங்கி தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் நடிகர்களாக அடையாளம் பெற்றுவிட்ட பலர், கூத்துப் பட்டறையிலில் பயின்றவர்கள்தான்.

கூத்துப் பட்டறை இப்போதும் இயங்கி வருகிறது என்றாலும் அதிலிருந்து பிரிந்து சென்று இயங்கும் பல குழுக்கள், சினிமாவில் நடிக்க வருபவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன. ஒரு திரைப்படத்துக்காக தேர்வு செய்யப்படும் நடிகர்கள் குழுவுக்கு, படப்பிடிப்புக்குச் செல்லும் முன்னர், 30 நாட்கள் வரை இவர்கள், பயிற்சிப் பட்டறை நடத்துகிறார்கள். எடுக்கப்படவிருக்கும் திரைக்கதையையும் வசனங்களையும் கூடப் பயிற்றுவிக்கிறார்கள். இதுபோன்ற நவீன நாடகக் குழுக்களில் பகுதி நேரமாக சில வருடங்கள் பயின்று, ஒன்று அல்லது இரண்டு நவீன நாடகங்களில் நடித்தவர்களுக்கு திரையுலகில் உறுதியாக வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது.

ஏன் மதிப்பு?

அதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது. சினிமாவில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என்கிற நடிப்பாசையில் வருபவர்கள், திரையுலகப் பின்னணி கொண்ட குடும்பங்களில் இருந்து வலுக்கட்டாயமாக நடிக்க வருகிறவர்கள் எனப் பெரும்பாலான ஆர்வலர்களுக்கு நடிப்பு பற்றிய அரிச்சுவடி கூட தெரிந்திருப்பதில்லை. தற்போது ஒரு திரைப்படத்துக்கான நடிப்பு என்பது நடிக்காமல் இருப்பதே. தன்னுடைய கதாபாத்திரம் எப்படி நடந்துகொள்ளும், கதை முழுவதும் அதன் பிரச்சினையையும் அதை அது அணுகும் விதத்தையும் பொருத்து அதன் உடல்மொழியும் பாவனைகளும் உச்சரிப்பும் எவ்வளவு தேவைப்படும் என்பதை அக்கதாபாத்திரத்தை எழுதிய, அல்லது வேறொருவரால் எழுதப்பட்ட கதாபாத்திரத்தை வடிவமைத்த சம்மந்தப்பட்டப் படத்தின் இயக்குநர்தான் முடிவு செய்கிறார். அப்படியிருக்கும்போது நடிப்பு பற்றி எதுவுமே தெரியாமல் வருபவர்களிடமிருந்து ஒரு துரும்பையும் இயக்குநர்களால் பெற முடியாமல் போகிறது.

இந்த இடத்தில்தான் நாடக மேடையிலிருந்து வருபவர்களிடம் தங்களுக்கு எந்த அளவுகோலில் நடிப்பின் வெளிப்பாடு தேவையோ அதைக் கேட்டுப் பெற்றுக்கொள்வதில் எந்தச் சிரமமும் இருப்பதில்லை. தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கே நாடகக் கலைஞர்களுக்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும் வாய்ப்புகளும் கிடைக்கிறது என்றால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மேடையில் நடிக்கப்பட்டு வந்த நாடகங்களே திரைப்படங்களாக படம் பிடிக்கப்பட்டபோது எப்படியான சூழ்நிலை இருந்திருக்கும்? திரைப்படமாகும் நாடகத்தில் நடித்து வந்த நடிகர்களையே அவரவர் மேடையில் ஏற்று நடித்து வந்த வேடங்களையே திரையிலும் நடிக்கும்படி அன்றைய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கேட்டுக்கொண்டார்கள். அதன் பலனாக நாடக நடிகர்கள் இல்லாமல் சினிமா இல்லை என்கிற நிலை, 1917இல் சலனப் படக் காலம் தொடங்கியபோது இருந்தது.

சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர் அவ்வை தி.க.சண்முகம்
சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர் அவ்வை தி.க.சண்முகம்

மக்கள் பயந்தார்கள்!

இருபதாம் நூற்றாண்டின் வைகறையில் உருவான சலனப் படங்களிலும் அதன்பின்னர் அடுத்து வந்த 15 ஆண்டுகளில் படச்சுருளில் ‘ஒலி’ சேர்க்கப்பட்ட பேசும் படங்களிலும் நடிக்கத் தொடங்கிய பின்னர், நாடக நடிகர்களை சமூகம் சற்று நிமிர்ந்து பார்த்தது. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் தாழ்ந்த நிலையில்தான் இருந்தது தமிழ் நாடகம். திறந்த வெளியில் தெருக்கூத்தாக நிகழ்த்தப்பட்டுவந்த காலம் அது. உரையாடல் இன்றி பாடல்களால் மட்டுமே கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டன. ஏனென்றால், பண்டிதர்களால் இசை நாடகங்களாகவே தமிழ் நாடகங்கள் எழுதப்பட்டிருந்தன. இதைக் கண்ணுற்ற சங்கரதாஸ் என்னும் இளைஞர் செய்த புரட்சிதான், தமிழ் நாடகத்தைப் பண்டிதர்களின் கைகளிலிருந்து மீட்டெடுத்தது. இளைஞர் சங்கரதாஸ் தன்னுடைய நாடக வாழ்க்கையைத் தொடங்கிபோது, நாடகக் கலைஞர்கள் அனுபவித்து வந்த துன்பங்களும் அவமானங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. அதற்கு நாடகக் கலைஞர்களுமே பல வகையில் காரணமாக இருந்தார்கள். நாடகக் கலை நலிவடைந்துகொண்டிருந்த நேரத்தில், அதைச் சீர்திருத்த அவர் மேற்கொண்ட பல முயற்சிகளில் ஒன்றுதான் ‘பாலர் நாடக சபை’. அதன் வழியேதான், நிகரற்ற கலைஞர்களை 20ஆம் நூற்றாண்டு நாடகத் துறைக்கும் திரையுலகத்துக்கும் நடிகர்களைக் கொடுத்தார். 5 வயது முதல் 10 வயது வரையிலுமான சிறுவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குச் சிறு வயது முதலே பயிற்சியளித்து சிறந்த கலைஞர்களாக உருவாக்க வேண்டும்; அவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும், முக்கியமாக அவர்கள் நாடகக் கலையின் வெளிப்பாட்டு உத்திகளை மேடையில் மீறி நடக்கக் கூடாது என்கிற லட்சியத்தோடு ‘பாலர்’ நாடக சபை முறையைக் கொண்டுவந்தார். அவருடைய நோக்கம் அடுத்து 25 ஆண்டுகளில் நல் விளைச்சலைக் கொடுத்தது.

அப்படி அவருடைய விளைச்சலாக உருவான மாணவர்களில் ஒருவர், நாடகத் தமிழைத் திறம்படப் பயின்று அக்கலைக்கு திரையுலகில் உயர்ந்த இடத்தையும் பெற்றுக்கொடுத்தவர் அவ்வை தி.க. சண்முகம். பின்னாளில் குடியரசு தலைவர் விருதுபெறும் அளவுக்கு கலை வாழ்வில் உயர்ந்தவர். கலைஞானி கமல்ஹாசன் சிறார் நடிகராக சிலகாலம் பயிற்சி எடுத்தது இவருடைய நாடகக் குழுவில்தான். அவ்வை தி.க.சண்முகத்தை 1959ஆம் ஆண்டு அக்டோபரில் அழைத்தது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். தங்களுடைய மாணவர்களுக்கு ‘நாடகக் கலை’ குறித்து மூன்று நாள் தொடர்ந்து உரை நிகழ்த்தக் கேட்டது. ‘கூத்தாடிப் பேச்சு விடிஞ்சாப் போச்சு’ என்கிற நிலையிலிருந்து, ஓர் உயர்ந்த பல்கலைக்கழகம் ஒரு நாடகக் கலைஞனை மாணவர்களுக்கு வகுப்பெடுக்க அழைப்பதற்கு ஒரு நூறு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. நாடக கலைஞர்கள், இழிவான நிலையிலிருந்து கொண்டாடப்படும் ஆளுமைகளாக உயர்வதற்கு தன் வாழ்க்கை முழுவதையும் விலை கொடுத்தவர்தான் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். அவரது மாணவரான அவ்வை தி.க.சண்முகம் தனது பல்கலைக்கழக உரையில் குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள்:

“நான் என்னுடைய ஆறாவது வயதில் பாலர் நாடக சபையில் சேர்க்கப்பட்டேன். கடந்த 49 ஆண்டுகளாக நாடகத் துறையிலேயே என் வாழ்க்கை கழிந்தது. நாடக நடிகராகவும் நாடக ஆசிரியராகவும் நாடகத் தயாரிப்பாளராகவும் பின்னர் சினிமா நடிகராகவும் சினிமா தயாரிப்பாளராகவும் என்று வளர்ந்து வந்திருக்கிறேன். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். ஆனால், நான் சிறுவனாக நாடகத்தில் நடிக்க வந்த காலத்தில், நாடக கலைஞர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள். கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படி பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ, அதேநிலைதான் நாடகக்காரனுக்கும் இருந்தது. நாடகக் காரன் என்றால் குடியிருக்க வீடு கொடுக்க மக்கள் பயந்தார்கள். அநேக ஊர்களில், மயானக் கரைக்கு அருகே, பேய் வசிக்கும் வீடு என்று கூறி ஒதுக்கப்பட்ட வீடுகளில்தான் அந்தக் காலங்களில் நாங்கள் வசித்து வந்தோம். ‘ஒரு தொழிலும் தெரியாதவன் நாடகக்காரன் ஆனான்’ என்கிற சொல் வழக்கு உருவான காலம் அதுவென்றால், எவ்வளவு பெரிய அவலம்! அதையெல்லாம் மாற்றிக் காட்டியவர்தான் எங்கள் குருநாதர் சங்கரதாஸ் சுவாமிகள்” என்று பல்கலைக்கழக உரையில் பதிந்திருக்கிறார். சங்கரதாஸ் செய்த சாதனைகள் சலனப் படத்துறைக்கும் அவர் மறைந்த பிறகு பேசும் படத்துறைக்கும் பெரும் ஊக்கமும் உள்ளடக்கமும் கொடுத்தன. ஏன்..! இலக்கியத் தமிழுக்கும் அவர் பங்களித்தார். தாம் எழுதிய நாடகங்களைத் திரையுலகுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர் எழுதிய ‘பவளக் கொடி’ வழியாகத்தான் தமிழ் சினிமாவுக்கு முதல் சூப்பர் ஸ்டாரே கிடைத்தார்!

(திரை விலகும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: rcjeyanthan@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

ஒளிப்படக் குறிப்பு: பாலர் நாடக சபையை முதன் முதலில் தோற்றுவித்த சங்கரதாஸ் சுவாமிகள்1922இல் புதுச்சேரியில் மறைந்தார். அவரது பூத உடலுக்கு, அவர் உருவாக்கிய ‘தத்துவ மீன லோசனி வித்துவ பாலர் சபை’யின் சிறார் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தியபோது 1922இல் எடுக்கப்பட்ட படம்.

மூன்று அறிமுகங்கள்!

தமிழ்த் திரையுலகில் ‘ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் வாங்கிய முதல் நடிகர்’ என்கிற பெருமை கே.பி.சுந்தரம்பாள் என்கிற நாடக ஆளுமைக்கு உண்டு! அவர் ஒரு நாடக நடிகர் என்று போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. திரையுலம் தன்னைத் தேடி வரும்படி செய்த மேடைக் கலைஞர். தமிழ் சினிமா பேசத் தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், நாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் முடி சூட்டப்பட்டவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவரும் அவருக்கு ஜோடியாக நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமியும் ஸ்பெஷல் நாடக நடிகர்கள்.

எம்.கே.டியை அர்ஜுனாகவும் எஸ்.டி. சுப்புலட்சுமியைப் பவளக்கொடியாகவும் நாடகத்தில் அவர்கள் நடித்து வந்தக் கதாபாத்திரங்களையே ‘பவளக்கொடி’ (1934) திரைப்படத்திலும் நடிக்கும்படி செய்தார் அப்படத்தை இயக்கிய தமிழ் சினிமாவின் தந்தை, தேசாபிமான இயக்குநர் என்றெல்லாம் பெயர் பெற்ற கே.சுப்ரமணியம். சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய பவளக்கொடி நாடகத்தைத் தழுவி இப்படத்துக்கான ‘சினேரியோ’ எழுதப்பட்டது. அப்படத்தை இயக்கிய கே.சுப்பரமணியத்துக்கும் இதுதான் அறிமுகப்படம். முதல் படத்திலேயே கதாநாயகியைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட இயக்குநரும் அவர்தான்! ‘பவளக் கொடி’யை அவர் படமாக்கியதே சுவையான வரலாறு. அதை மூத்த எழுத்தாளர், தமிழ் சினிமா வரலாற்றின் காதலர் ராண்டார்கையின் பதிவுகளிலிருந்து மீட்டெடுத்து வாசிப்போம். காத்திருங்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in